பூக்குழி விமர்சனமும் கலந்துரையாடலும்
பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை அனிருத்தன் வாசுதேவன் ஆங்கிலத்தில் ‘Pyre’ என்று மொழிபெயர்த்திருந்தார். பெருமாள் முருகனின் மலேசிய வருகையையொட்டி 20.12.2025 அன்று எனது பூக்குழி நாவல் வாசிப்பை முன் வைத்தேன். எனது வாசிப்பையொட்டி 21.12.2025 அன்று நண்பர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன. அவற்றின் பதிவு இந்த கட்டுரை.
வாசிப்பு
நாவலின் முக்கிய காதாபாத்திரங்கள் குமரேசன், சரோஜா, மாராயி.1980ல் நடக்கும் கதையாக உள்ளது. இதில் குமரேசனும் சரோஜாவும் காதலித்து ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துக் கொண்டு, அன்றே குமரேசனின் ஊரான காட்டுப்பட்டிக்குச் செல்கின்றனர்.
முதல் அத்தியாயத்தில் அவர்களின் வருகையை ஊரும் ஊர் மக்களும் எப்படி வரவேற்கிறது; வரவேற்கிறார்கள் எனத் தொடங்கினேன். முதலில், மிகப் பெரிய குடைபோலிருக்கும் ஒரு வேம்பு மரம் அவர்களை வரவேற்கிறது. அங்கு அமர்ந்துக் கொண்ட சரோஜா இது என்னவென கேட்க, குமரேசன் அது அந்த ஊரின் காணாக்காடு, அங்குதான் பிணங்கள் எரிக்கப்படும், ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு பிணங்கள்தான் வரும் என்றான். நாளைய பிணங்களின் ஒத்திகை என வாசித்திக்கொண்டேன். அடுத்ததாக, சரோஜா, வெயில் தாங்காமல் முந்தானையால் தலைக்கு தடுப்பு கொடுக்கிறாள். அந்த செய்கையை இறப்பு நடந்தால் மட்டுமே அவ்வூர்களில் பெண்கள் செய்வார்களென, அப்படி செய்யவேண்டாம் என குமரேசன் சரோஜாவிடம் சொல்கிறான். இப்படி மரணத்துக்குரிய குறியீடுடன் இந்த நாவலை வாசிக்க ஆரம்பிக்கிறேன்.
அடுத்ததாக சரோஜாவிடம் எழுப்பப்படும் வகைவகையான வசைகள். முதலில் வெள்ளப்பயன். வெள்ளப்பயன் குமரேசனின் தூரத்து தம்பி முறை. குமரேசன் வெள்ளப்பயனைவிட ஒரு மாதம் பெரியவன். குமரேசனின் தூதாக வெள்ளப்பயன் சரோஜாவிடம் வந்து செய்தி தெரிவிக்கிறான். வழியில் வந்த சரோஜாவின் புடைவை நுனியில் வெள்ளப்பயன் மிதிவண்டியின் சக்கரத்தை நிறுத்தி அவளை வழிமறைத்து குமரேசனின் தூதாக சிலவற்றைச் செல்கிறான். “படத்துக்கு செல்ல உன்னை தயாராகச் சொன்னான். வேண்டுமென்றால் நாம் மூன்று பேராகக் கூட செல்லலாம், குமரேசனைவிட என்னிடம் நிறைய பணமுள்ளது, உனக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னால் வாங்க முடியும்”. ஒரு அண்ணியாரிடம் நிகழ்த்தும் அத்துமீறல் இது. முதலில் சரோஜாவை அண்ணை மனைவி என நினைத்திருந்தால், இப்படியான வார்த்தைகள் வெள்ளப்பையன் பேசியிருந்திருக்க மாட்டான். அன்று இரவே, இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த சரோஜா, இதை உண்மையிலேயே குமரேசந்தான் கூறினானா இல்லையா, இல்லை தன்னைப் பார்க்க வேண்டுமென்ற சாக்கில் வெள்ளப்பயன் தானாகவே பொய் சொல்லினானா, அப்படி உண்மையிலேயே குமரேசன் படத்துக்கு அழைத்திருந்தால், என்ன செய்வது எனத் தெரியாமல், புடவையை மாற்றி, பூச்சூடிக் கொள்கிறாள். அப்பொழுது மாராயி (குமரேசனின் தாயார்) விளக்கேற்றாமல், இப்படி அலங்கரித்து கொள்பவள் ஒரு குடும்ப பெண்ணாக இருக்கமாட்டாளென தாக்குகிறாள்.
இதேபோல், காய்கறி விற்கும் மற்றொரு பெண் சரோஜாவின் கழுத்தில் இருந்த சங்கலியைப் பார்த்து “இது தங்கமா? எத்தனை சவரன்?” எனக் கேட்கிறார், அதற்கு ஆமென தலையசைத்த சரோஜாவிடம், “இப்பொழுது டவுனில் தங்கத்தின் போலியாக பித்தளை வந்துவிட்டதாம்” என்கிறாள். அந்த காய்கறி பெண் சொல்வதை நான் இப்படியாக புரிந்துக் கொள்கிறேன். டவுனில் ஆயிரம் போலிகள் கிடைக்கும் ஆனால் எதுவும் பவுனாகிவிடமுடியாது. சரோஜாவால் என்றும் தங்கத்தின் ஸ்தானத்திற்கு செல்லமுடியாது. வெள்ளப்பயனாகட்டும், மாராயியாகட்டும் சரோஜாவை மருமகளாகவோ, அண்ணியாராகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனேன்றால், சரோஜாவும் குமரேசனும் மீறலை நிகழ்த்தி ஒன்றை அடைய விரும்புகின்றனர். அந்த மீறலால் சரோஜாவுக்கான உரிய இடத்தை இவர்கள் வழங்க விரும்பவில்லை. அதனால், அவளுக்குரிய அத்தனை வசைகளும் சரோஜாவின் ஒழுக்கதையே சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கின்றன. ஊரிலுள்ள சில ஆண்கள் ‘நடந்தது நடந்து போச்சு, அடுத்து என்ன’ எனும் தோரனையில் வந்தாளும், ‘சரோஜாவை எதற்காக இல்லம் அழைத்து வந்தாய், வேறு ஊரில் அமர்த்தி அவ்வப்போது பார்த்து வரலாம்’ என்கின்றனர். சரோஜா என்றைக்கும் அவளது அந்தஸ்தைச் சம்பாரித்தல் முடியாது.
குமரேசனும் சரோஜாவும் செய்த மீறலினால், என்ன நிகழ்ந்தது? ஊர் மனிதர்கள் இவர்களை ஊர் கிணற்றிலிருந்து நீர் எடுக்க வேண்டாமென்றனர், எவரும் இவர்களிடமிருந்து உணவு வாங்க கூடாது, இவர்களும் பிறரிடமிருந்து உணவு எடுக்க கூடாது, மாராயியின் வயலில் எவரும் வேலை செய்யக் கூடாது, முக்கியமாக இவர்களிடம் யாரும் பேசக்கூடாது. ஆக குமரேசன் சரோஜாவின் மீறலினால், தாகம், பசி, சுற்றம், வரவு எதற்கும் தடை
விதிக்கப்படுகிறது. இவை மட்டும்தானா என்றால் இல்லை.
இந்தக் கதையில் முக்கிய மற்றுமொறு கதாபாத்திரம், மாராயி.
மாராயி தனது இருபதாவது வயதிலேயே கணவனை இழந்திருக்கிறாள். குமரேசனுக்கு இரு வயதிருக்கும்போது இந்த துர் சம்பவம் நிகழ்கிறது. மாராயியுடன் உடன் பிறந்தவர்கள் நான்கு அண்ணன்கள். கணவன் இறந்தப்பின்னும், அண்ணன்மார்களுக்கு எந்தவொரு சுமையையும் மாராயி தரவில்லை. தனது அப்பா வீடு உள்ளது என அங்குச் சென்று தங்கவுமில்லை. குமரேசனுக்கு வயது வந்த போதும், எந்த அண்ணன் மகளையும் குமரேசனுக்குத் தர எந்த அண்ணியாரும் முன் வரவில்லை என்பதையும் மாராயி அறிவாள். மாராயியின் இத்தனை வருட ஒழுக்கத்தைக் குமரேசன் கலைத்துவிட்டான் என அவன் மீது மாராயிக்கு வருத்தமுள்ளது. இறந்த போன கணவனிடமும் அவ்வறான வருத்தம் உள்ளது.
மாராயிக்கு பேசுவதற்கு ஒரு ஆள் என்று தேவையில்லை. இறந்த கணவனை நினைத்து புலம்புவாள். இதை குமரேசன் கேட்டால், “செத்தால், அவர்களின் கணக்கு முடிந்துவிடுமா?” என மறுமொழி கூறுபவள் மாராயி. குமரேசனின் இச்செயலுக்குப் பின், மாராயிக்குப் புலம்புவதக்கு ஆடு மரம் என இருந்தால் மட்டும் போதுமென்றிருந்தது. வசையை ஆட்டிடம் ஆரம்பித்து, குமரேசனிடம் சென்று முடிப்பாள்; “ஒரே இடமா மேய மாட்டியா, ஏன் அங்க இங்கனு மேஞ்சிட்டிருக்க, பன்றதெல்லாம் பண்ணிட்டு, எப்படி தலை நிமிந்து நடக்குற…”
சரோஜா-குமரேசன் இணையரின் பின் கதையும் உள்ளது. சரோஜா முதன் முதலாக குமரேசனிடம் ‘வத்திச்சிப்புள்ளு’ எனும் தீக்குச்சியைக் கேட்கிறாள். அவள் குமரேசனிடம் ஒரு ignition-ஐக் கேட்பதாக ஒட்டுமித்த நாவலையொட்டிய என் வாசிப்பாக எடுத்துக்கொள்கிறேன். அவள் கேட்பது, பற்ற வைக்க அல்லது பற்றிக்கொள்ள ஒரு நெருப்பு என்பது எனது வாசிப்பு. தீயை, ஆக்கத்தை, உயிர்ப்பை வேண்டுகிறாள். அதுவே பரிசுத்த அழிவிற்கான மூலாதாரமும் கூட.
ஜொகூர் பாருவில் 2009ல் நிகழ்ந்த உண்மை சம்பவதை நாவல் வாசிப்புடன் கோர்த்து கூறினேன். சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு சிறு வாகண விபத்து நிகழ்ந்தது. யாரென்று ரோட்டில் இறங்கிப் பார்த்தால், அதே ஆசிரியை. 2008/9ல் நான் தொடக்கப் பள்ளியில் இருந்த போது, அந்த பெண் ஆசிரியையும், ஆண் ஆசிரியரும் படித்து முடித்து ‘fresh’ஆக வேலைக்கு என் பள்ளிக்கு வருகின்றனர். இவரும் விரும்புகின்றனர். பையன் வேறு தாழ்வான ஜாதி எனத் தெரிய வருகிறது. அடுத்த செய்தி, அந்த சார் கங்கார் பூலாய் பணை மர தோட்டத்தில் கண்ட மேனிக்கு வெட்டுப்பட்டு பச்சை புரோத்தன் சாகா வண்டியினுள் எரித்து கொல்லப்பட்டிருக்கிறார் என்று ‘talk of the town’ ஆகப் பேசப்பட்டது. அந்த ஆசிரியை இப்பொழுது தந்தையின் வீட்டில், மணமாகாமல், குழந்தைகளில்லமல் இருக்கிறார் என அந்த நொடி அவரைப் பார்த்ததுமே நான் தெரிந்துக்கொண்டேன். அவர் பேசிய கடினமான வார்த்தைகளிலிருந்தும் உடல்மொழியிலிருந்தும் ஓர் இறுக்கமான ஆளாக மாறியிருக்கிறார் எனப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
முருகேசனையும் சரோஜாவையும் இன்றைய காலகட்டத்திற்குப் போட்டு பார்க்கிறேன். தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்வது என்பது சமூகத்தினறால் ஏற்க்கப்பட்டு நிகழ்த்தும் ஒரு சடங்காக மாறுகிறது. சமூதாயத்தில் ஒன்றினையத்தான் அத்தனை சடங்குகளும், சட்டத்திடங்களும் இருக்கிறது. இங்குதான் ஹேகல் தேவைப்படுகிறார். ஹேகலுக்கு மற்ற இடத்தில் மரியாதையே கிடையாது.
அப்பொழுது தனிமனித தேடலுக்கு சுற்றம் முக்கியமா என்று பார்த்தால், சுற்றம் தான் முன் வந்து நிற்கிறது. சுற்றம் இருக்கையில்தான் தனிமனித தேடல் சாத்தியமாகிறது எனத் தோன்றுகிறது. அப்படி எந்த ஒரு support sytem இல்லாத ஒருவருக்குத் தனி மனித தேடல் சாத்தியமா என்று கேட்டால்; சாத்தியமே. ஆனால், அத்தனை கொடிய பயணம் அவசியமா எனும் கேள்வியும் வருகிறது.
முதலில் குமரேசனுக்கும் சரோஜாவுக்கும் தன்னிடமோ, தனது வீட்டிலோ என்ன, எது, யாரிடமிருந்து எவை கிடைக்கவில்லை என்பதை அறிந்தனரா எனும் கேள்வியை வைக்கிறேன். எது கிடைக்கவில்லை, எது பொருந்தவில்லை, அமையவில்லை, விரும்பவில்லை என்று இப்படியான ஒரு முடிவெடுத்தனர்?
கிடைக்காத அந்த ஒன்றை தனக்குள்ளே தேடி பார்த்தனரா? தேடி பார்த்திருந்தால் கிடைத்திருக்குமா? அதற்காக மற்றொருவருடன் சென்று தேடுவதா? தேடி அடைந்தால் பரவாயில்லை. அவமதித்து விலக்கப்பட்டால்? எனும் கேள்விகளை எழுப்பி பார்க்கிறேன்.
சரோஜாவாக்கு தாயில்லை, குமரேசனுக்கு தந்தையில்லை, எந்த மாமனும் பெண் தர முன்வரவில்லை. இங்கிருந்தே பல விடைகளை அறியலாம். எனவே, தனிமனித தேடலுக்கு சுற்றம் முதலில் உறுதுனையாகத் தேவை படுகிறதென்றால், இத்தனை அழிவிற்கான மீறல்களுக்குத் தான் தேவையென்ன? தனக்கு குமரேசன் கிடைத்தால் தன்னையே தருவதாக கோட்டைசாமியிடம் சரோஜா வேண்டிக்கொள்கிறாள், இறுதியில் அவள் கேட்ட அதே நெருப்பினாலே, அழியவும் செய்கிறாள். Honour Killing தப்புதான், ஆனால் அதை தவிர்க்கலாம் என்றேன்.
விமர்சனம்
என்னுடைய வாசிப்புக்கு சில விமர்சனங்கள் எழுந்தன. நண்பர் லாவண்யா எனது வாசிப்பு நவீன இலக்கியத்திலிருந்து பின் தங்கியதாக குறிப்பிட்டிருந்தார். பெருமாள் முருகனும் லதாவும் ஜெபியில் நடந்த உண்மை சம்பவத்தைக் கேட்டு கலக்கமடைந்தனர். இருப்பினும், பெருமாள் முருகன், பூக்குழி நாவலைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்றார்.
நவீன் எனது வாசிப்பு, வாசிப்பின் விரக்கிதியிலிருந்து எழுந்தது போல் இருக்கிறது என்றார். ஓர் எழுத்தாளனுக்கு வரலாற்றுப் பார்வை அவசியம். பெண்களைப் படிக்க அனுப்பினால், இப்படிதான் நிகழும், வீட்டிலேயே இருக்கட்டும் என நினைத்திருந்தால், நாம் இன்று இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம். வரலாற்றுப் பார்வையுடன் நாவலின் மையக்கருத்தை நோக்குதல் அவசியமென்றார்.
வாய்பளித்த வல்லினம் குழு, பெருமாள் முருகன், நண்பர்கள், மொழிபெயர்ப்பாளர் அனிருத்தன் வாசுதேவன் ஆகியோருக்கு நன்றிகள்.
பரிமித்தா
ஜொகூர்
23.12.2025

Comments
Post a Comment