யோக ஆயுர்வேத முகாம், பாரதி விழா 2025

 மூன்றுநாள் யோகா & ஆயுர்வேத முகாம்

31.10.2025 - 2.11.2025



மூன்று நாள் முகாமில், யோக ஆயூர்வேத வகுப்புடன் பாரதி விழாவும் சுங்காய் கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றது.

 

யோக வகுப்புகளைக் குருஜி சௌந்தர் வழி நடத்தினார். குருஜி சௌந்தர் பதஞ்சலி யோக மரபைக் கடைபிடிக்கிறார். (என்று தமிழ்விக்கியில் படித்து தெரிந்து கொண்டேன்). யோக வகுப்புகளில் முதல் அரைமணி நேரம் குருஜி யோகம் சார்ந்து அறிமுகம் அளித்து, அதன்பின் ஆசனங்களைக் கற்றுத் தந்தார்.



இப்படி ஐந்து (5) அமர்வுகளில் பதிமூன்று ஆசனங்களைக் கற்று தந்தார். இது யோகத்தின் முதல் அடுக்கான அன்னமய கோஷத்தின், அதாவாது உணவால் உண்டாகும் உடலுக்கான பயிற்சியாக உள்ளது. முகாம் முடிந்து ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது. முதல் ஒரு வாரத்தில் மேற்கொண்ட யோகப் பயிற்சியிலிந்து பதிமூன்று ஆசனமும், நமது முதுகுதண்டை மையப்படுத்திய syllabus என்று உணர்கிறேன்.

 

இராண்டாவதாக, உடலின் இயக்க சக்தி என கருதப்படும் பிராணனுக்கு, பிரானாயமா உட்பட சில மூச்சுபயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன. இந்த பயிற்சி பிராணமய கோஷத்திற்கானதாகும்.

 

யோகத்தின் மூன்றாவது அடுக்கு மனோமய கோஷத்தையே நான் இங்கு எழுத வந்தது. அதேபோல், ஆசனங்களையும் மூச்சுபயிற்சிகளையும் முடித்தப் பின் சாவாசனாவில் படுத்து கேட்க மூன்று மந்திரங்களை கற்று தந்தார். அவை,

 

i. மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

 

மந்திரம் : ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்

 

பொருள் : நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம்.

 

பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக.

 

ii. காயத்ரி மந்திரம்

 

மந்திரம்: ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்.

 

பொருள்: "பூமி, மத்திய, மேல் உலகம் ஆகிய மூன்று உலகங்களை உருவாக்கிய, அந்த சூரியனின் ஒளிமிக்க, வணக்கத்திற்குரிய சக்தியை நாங்கள் தியானிக்கிறோம். அந்த சக்தி எங்கள் புத்தியை உன்னதமான வழியில் பிரகாசிக்கச் செய்யட்டும்".

 

iii. துர்கையின் 32 நாமமாலை

 

எனக்கு நினைவிருக்கும் வரை, இந்த மந்திரங்களைக் கேட்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியதென்றும், நமது உடலும் மனமும் அதன்பின் அதற்கு வேண்டியதை அதுவே செய்துக்கொள்ளும் என்றும் குருஜி சொன்னதாக நினைவுகூறுகிறேன். சில நாட்கள் சரியாக ஆறு மணிக்கு எழவில்லை என்றால், ஆசனங்களையும் மூச்சுபயிற்சியும் முடித்துவிட்டு, வேலைக்கு கிளம்பி வாகணம் ஓட்டும் அந்த வேளையில் bluetoothல் மந்திரங்களைக் கேட்டதுண்டு. இந்த கட்டுரையை எழுதும் முன், இந்த மந்திரங்களின் அர்த்தமென்ன வென்று எனக்குத் தெரியாது. இந்த அறியாமையை இங்கு பதிவு செய்வதற்கு ஒரு காரணமுண்டு.

 

இடையில், ஒரு வழக்கு விசயமாக, காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்தது. எனது கட்சிக்காரருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், கட்சிகாரரின் நண்பர் ஒரு தடினமான penknifeல் எனது கட்சிக்காரரின் வலது புருவத்திலிருந்து இரண்டு செண்டிமீட்டர் மேலிருந்து கீழுதடு வரை வெட்டியிருந்தார், நல்ல வேளையாக கண்ணுக்கு ஒரு காயமில்லை. icecreamஐ கரண்டி கொண்டு துழாவி எடுப்பது போல், penknife கொண்டு கட்சிகாரரின் இடது கையின் bicepsஐ கிழித்து எடுத்திருக்கிறார். வெட்டே வளைவாக விழுந்துள்ளது. அதனால், கட்சிக்காரரின் இடது கையில் ஒரு சிறு குழியே ஏற்பட்டிருந்தது. கட்சிக்காரர் மறுநாள் காலையே காவல்நிலையத்தில் புகார் செய்யவும் அந்த குறிப்பிட்ட நண்பரின் தாயார் கட்சிக்காரரின் காலில் வந்து விழ, கட்சிக்காரர் அந்த தாயாரின் கோரிக்கைக்கு இணங்கி புகாரை வாபஸ் வாங்க சென்றிருக்கிறார்.

 

இங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது. புகார் செய்த ஒருவர் அந்த புகாரைத் திருத்தம் செய்யவும், வாபஸ் வாங்கவும் முழு உரிமை உள்ளது. எந்த காவல் அதிகாரியும், மூன்றாம் மனிதரும் புகார் செய்பவரின் உரிமையை தடுக்கவோ, தளர்த்தவோ கூடாது. எனது கட்சிக்காரர் கொடுத்த புகாரில் சில தகாத பொருட்களின் பெயர் இருக்க போக, காவல் அதிகாரி வாபஸ் வாங்க முடியாதென்றும், அந்த நண்பரைப் பிடிக்க தகவல் தெரிவித்து விட்டதாகவும் முதலில் என் கட்சிகாரரிடம் சொல்லியிருக்கிறார் -கொஞ்சம் கராராகவே- . அதன் பின்பே இந்த தகவல் எனக்கு தெரிய வருகிறது.

 

முதலில் இந்த கேஸுக்கு நியமித்திருக்கும் விசாரணை அதிகாரியை அழைத்து, எனது கட்சிக்காரர் வாபஸ் வாங்குவதைத் தடுக்க வேண்டாம் என்று நயமாககூறவேண்டும். போலிஸும் நயமாக’ “புவான், நான் fileஐத் திறந்து விட்டேன். procedure வழி என்ன செய்ய வேண்டுமோ நான் அதையே செய்வேன். வாபஸ் வாங்குவது அவரது உரிமைஎன்று கூறிய பின் நீங்கள் எந்த கம்பேணியிலிருந்து அழைக்கிறீர்கள்எனக் கேட்டார். நான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற எந்த செக்சனையும் நான் படித்ததில்லை.

 

இந்த உரையாடல் முடிந்ததும் அந்த இரவே, எனது கட்சிக்காரர் புகாரை வாபஸ் வாங்க சென்றிருந்தார். சென்ற இடத்தில் இன்று போய், நாளை வாஎன அனுப்பியிருக்கின்றனர். இதை என்னிடம் சொல்லாமல்,  கை வலியில் கட்சிக்காரர் வீடு சென்று உறங்கிவிட்டார். அந்த இரவே, வெட்டியவரையும் பிற நண்பர்களையும் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கச் சொல்லி கட்டளைச் சென்றுவிட்டதாக எனக்கு வேறு இடத்திலிருந்து தகவல் வந்துவிட்டது.

 

வாபஸ் வாங்க தயாராக இருந்தும் அதிகாரியின் உள்விளையாட்டை அறியாத என் கட்சிகாரர் மருந்துண்டு யோகநித்திரையில் இருந்திருக்கிறார். மறுநாள் காலை, நான் தொலைப்பேசியில் அழைத்து கேட்ட கேள்வியில், கட்சிக்காரர் முதல் வேலையாக காவல் நிலையம் சென்று வாபஸ் வாங்க முயன்றிருக்கிறார். அங்கிருந்தவர், முடியவே முடியாது என கட்சிக்காரரைத் துரத்தியிருக்கிறார். கட்சிக்காரர் பக்கத்தில் இருந்த மற்றொரு காவல் நிலையத்திற்கு சென்று முயன்றிருக்கிறார், அங்குள்ளவர்கள் முகத்தில் வெட்டு விழுந்திருக்கிறது, இந்த வடுவை எப்படி இனிமேல் அகற்றுவாய் என உட்கார வைத்து பாலூட்டாத குறைக்கு பக்குவமாக brainwash செய்துள்ளனர். இதைதான் good cop bad cop என்று கூறுவோம்.

 

மணி காலை 10.30 ஆகியும் இன்னும் இந்த வேலை முடிந்தபாடில்லை. நீதிமன்றத்திலிருந்து நான் வெளியானப்பின், எனக்கு கட்சிக்காரர் அழைத்தார். அதிகாரிகள் அத்துமீறுவதைச் சகிக்க முடியவில்லை, உடனே நீதிமன்றத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னேன்.

 

அடுத்து நான் எல்லா வகையிலும் செய்வப் போவது சட்டரீதியாக சரி என்று எனக்குத் தெரியும். ஆனால், காவல் நிலையத்திற்கே சென்று காவல் அதிகாரியிடம் நீ செய்வது அத்துமீறல் என்று சொல்லி வேலையை முடித்து கொடுக்க, உள்ளாற ஒரு நடுக்கம் எழாமலில்லை. நீதிமன்றத்தில் எந்த ஒரு காவல் அதிகாரியாக இருந்தாளும் எதற்கும் என்றும் அஞ்சியதில்லை, ஆனால் அன்று நிலைமை வேறு. அவர்கள் இடத்திற்கே சென்று அவர்கள் சட்டையையே பிடிக்க வேண்டும்.

 

காவல் நிலையத்திற்கும் வந்தாகிவிட்டது. கட்சிகார்ருக்கு உள்ளே என்ன நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது, ஏன் வாபஸில் இத்தனை சிக்கல், அதிகாரியின் உண்மை நோக்கம் என்ன என்று புரியவைத்து விட்டு செல்லுகையில் ஓர் ஆச்சரியம் நடந்தது. என்னை அறியாமல், பிராத்தனையே செய்யாத நான், துர்கா துர்கா துர்கா என உள்ளார முழங்விட்டு காவல் நிலையத்தினுள் நுழைந்தேன். என்னைப் பார்த்ததும், counterல் அமர்ந்திருந்த அதிகாரி என்ன வேலை மேடம் என்றார், “tarikh balik repot” என்றேன். அவர்கள் முடியாதென்றால், அடுத்து என்ன பேச வேண்டுமென்பதை முன்னாடியே ஒரு இருபது நிமிடமாவது அசைப்போட்டிருப்பேன். அவர் முன்னிலையில் துளி பயமில்லை. “சரி மேடம். விசாரணை அதிகாரியிடம் சொல்லியாச்சாஎனக் கேட்டார். “நேற்றெ சொல்லிவிட்டேன்என்றேன். அடுத்து அந்த அதிகாரிக்கு அழைத்து கேட்க போகிறார் என நினைத்து எனது சொற்றாயுதங்களையும் நினைவில் சேகரித்து கொண்டேன்.  ஒகே mdm” என்று சொன்னதைச் செய்து கொடுத்தார்.

 

உண்மையில் அந்த மந்திரங்களைக் கேட்பதால் நமக்குள் என்ன நிகழ்கிறது எனத் தெரியவில்லை. மேலிருப்பது எனக்கு நடந்த உண்மை சம்பவம்.

 

இதே போல் நான் உச்சாடனம் செய்து கொண்டிருக்கும் மந்திரங்களுள் மற்றொன்ரு கரமோ கரமோ கரமோ” (செய்வேன், செய்வேன், செய்வேன்). இதை டாக்டர் சுனில் ஒரு அயூர்வேத அமர்வில்தான் சொன்னார், ஆனால் எந்த காரணத்திற்கு எனச் சரியாக நினைவில்லை.

 

முகாம் முடிந்தபின் மரணமின்மை எனும் மானுட கனவு புத்தகத்தில் ஆயுர்வேதம் ஒர் அறிமுகம் என்ற கட்டுரையை வாசித்தேன். அதன் பின்புதான் முழு முகாமே, அதைதொட்டி அமைந்தது என்று புரிந்துக்கொள்ள முடிந்தது.

 


முகாமில் ஒரு அளவுக்கு மேல் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. அதன் முக்கிய காரணமாக நான் நினைப்பது அதில் குவிந்து கிடந்த சமஸ்கிருத எழுத்துகள் என நினைக்கிறேன். இதை ஒரு குறையாக சொல்லவில்லை. மூல நூல்களிலிருந்து வந்த பாடம் அப்படிதான் அமைந்திருக்க முடியும் என நம்புகிறேன். ஆனால், எனக்கு அவ்வாறான சொற்கள் பரிட்சயமில்லை என்பதால், அதை உள்வாங்கிக் கொள்ள கடினமாக இருந்தது. பள்ளியில் உயிரியல் பாடத்தையே விரும்பி படிப்பேன். அறவே பிடிக்காத பாடம் வேதியியல். முன்னாள் பிரதமர் மஹாதீரின் திட்டம்படி STEM (Science, Technology, English, Mathematics) மலாயிலிருந்து ஆங்கிலத்தில் மாறியது. சரியாக, என் பருவ மாணவர்கள் SPM தேர்வுக்கு முன் பாடத்திட்டங்கள் ஆங்கிலத்திலிருந்து மலாய்க்கு மாற்றப்பட்டன. அங்கு அடைந்த தடுமாற்ற நிலையை ஆயுர்வேத முகாமில் மீண்டும் அடைந்தேன். ஆனால், ஆயுர்வேத கட்டுரைகளை வாசிக்கும் போது, டாக்டர் சுனில் என்ன சொல்ல வந்தார் என்பது புரிந்துக்கொள்ள முடிகிறது.

 


முகாமில் நடந்த முக்கியமொரு நிகழ்ச்சி பாரதி விழா. சுனிலைப் பாக்கும்போதெல்லாம் பச்சை சட்டையுடன் கரை  வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு யார்யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். பாரதி விழாவின் ஆரம்பத்தில் கர்நாடக கச்சேரியும், அதன் பின் நடனம், நாடகம் என நிறைவாக இருந்தது. ஆரம்ப பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கல்வியா, செல்வமா, வீரமா நாடகம் மிக பிரமாதம். கலைமகள், திருமகள், மலைமகள் நாடகம் முடிந்து கெண்டீனில் சாப்பிடும்போதும் கிரீடங்களைக் கழற்றி வைக்காமல் தேவியர்கள் போஜனம் செய்து கொண்டிருந்தனர். அப்படியான தேவிகளுடன் அமர்ந்து உண்டதில்தான் நான் எவ்வளவு பாக்கியம் பெற்றிருக்கிறேன். மலைமகள் குமாரியின் முகம் இன்னமும் நினைவிருக்கிறது. அழகான சிறுமி. தைரியமாக பேசினாள். புஸ்டியான கருப்பு குட்டி குழந்தை. பச்சை புடவை.


இந்த விழவில் குருஜி சௌந்தர் பாரதியை ஒரு ரிஷி என்றார். ரிஷி கட்டளைகளை இடுபவர். பாரதி அப்படி ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றுதான் பாடுகிறான் என்றார். பாரதி காணி கேட்பது அவனுக்கில்லை, பிறர் நலன் கருதி உழைத்திடவே என்கிறார். பாரதி வேத, வேதாந்த கல்வியைக் கொண்டவர். அதனால், இந்த ஊருக்கு உழைத்திடல் எனும் பாடலில் வருவது பஞ்சமஹாயக்ஞம் எனும் ஐவகை வேள்வி. பூமிக்கு, சக மனிதனுக்கு, மூத்தவர்களுக்கு, ஆசிரியருக்கு, நம்மை விட மேலுள்ள ஒரு சக்திக்கு என்ன அளிக்கிறோம் என்பதையே பாரதி தனது, கவிதை, கதைகளில் மீள மீள எழுதிகிறார் என சௌந்தர் சொல்கிறார்.

 

சுனில் சாரின் உரையில் பாரதி அச்சமில்லாமலெல்லாம் இல்லை, அவன் பயத்தைப் போக்க அதன் எதிர்நிலையைலிருந்து போராடுகிறவன் என கூறினார். இந்த புதிய பார்வை இன்றைய சபைக்குச் சென்று சேர்ந்திருக்குமா என அரவினுடன் பேசிக்கொண்டிருக்கையில் அரவின் இந்த கேள்வியைக் கேட்டார். நான் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என எண்ணிக்கொண்டேன்.


முகாமில் அடுத்ததாக நான் பெற்றது நண்பர்கள்தான். அதில் முக்கியமானவர், விஜயலட்சுமி. மலேசிய எழுத்தாளர், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நூலகத்தில் நூலகராகப் பணியாற்றுகிறார். எனக்கு விஜியை நூலகராக, ஒலிப்பேழை எனும் மலேசிய கதைகளை யூடியூபில் பதிவேற்றம் செய்பவராக, கே. எஸ் மணியம் சிறுகதைகளை மொழிபெயர்த்தவராகத் தெரியும். தமிழ்விக்கியில் அவரது பக்கத்தைப் படித்த பின் தான், மலாயா பல்கலைகழகத்தின் நூல் சேகரிப்பு, துன் சம்பந்தனின் முன்னெடுப்பால் அமைந்த தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் பொதுநூலகம் அமைய முதன்மை பொறுப்பு ஏற்று நடத்தியவர் என தெரிய வந்தது.

 

வருடக்கணக்கில் சீரமைப்பு, ஒழுங்கு படுத்தும் வேலைகளில் ஈடுபட்டதால், எதையும் நேர்த்தியாக செய்யும் பண்பினை அவரிடம் பார்க்கிறேன். தினமும் ஐந்து கிலோமீட்டர் ஜாகிங் செய்கிறேன் என்றார். சைவமாகதான் சாப்பிடுவேன் என்றார். காலை ஆறு மணிக்கு குளியலைறையிலிருந்து பாட்டு பாடினார். அதுவும் சத்தமாக. [சிரிப்பு இமோஜி போட்டுக்கொள்ளவும்] தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவருக்குப் பழக்கப்பட்ட அந்த அமைதியும், நிசப்தமும் தேவைப்படுகிறதோ என என்னிக்கொண்டேன். ஆயுர்வேத முகாமில், அவரரவர் எந்த பிராகிருதி என அறியும் வகுப்பு ஒன்று நிகழ்ந்தது. தான் மூன்று பிராகிருதியின் சம உடலைக் கொண்டதாக கூறி குழப்பமடைந்தார். “தலைவி உங்களுக்குத் தான் என்ன ஐடியல் பாடிஎன்று நான் தேற்றியும் அவர் தேறுவதாக காணோம்.


இனிமையான மூன்று நாள் முகாம்இனிமையான மூன்று மனிதர்கள்மீண்டும் சந்திப்போம்.


விஜி, நான், புண்ணியவான், ஜி.எஸ்.தேவகுமார்

13.12.2025

ஜொகூர்.

 

 படங்கள் : விஜி & சண்முகா

Comments