வாசிப்பனுபவம் & விமர்சனம் சிண்டாய் (சிறுகதை தொகுப்பு) - அரவின்
இந்த பத்து சிறுகதைகளை, என் வாசிப்பில் இருவகையாகப் பிரித்துக்கொள்கிறேன்; எதிர்பாரா மனிதர்கள், உறவுச்சிக்கல். இந்த இரு மையக்கருக்களையும் ஓர் ஆரம்பபுள்ளியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுகதை: (பதில்) & (கோணம்)
ஒரு சராசரி அன்றாட மனிதனுக்கு நேரெதிராக இருக்ககூடிய ஒரு கதாபாத்திரம் கதையில் வருகிறது. அந்த கதைச்சொல்லிக்கு ஆரம்பத்தில் இந்த புது ஆளின் செயலைப் பார்க்கவும் கேட்கவும், ஒவ்வாமையுடன் இருக்கும்.
பதில் சிறுகதையில், சுரங்கத்துக்கடியில் இயங்கும் இரயிலை சவப்பெட்டியுடன் இணைத்துப் பார்த்தது, புதியதாக இருந்தது. தன்னுடைய மகனின் மறைவுக்குப் பின் அதிலிருந்து விடுபடாமல், எப்பொழுதும் மரணத்தையே பற்றி பேசும் ஒரு கதாபாத்திரம் வருகிறது. தினந்தோறும், இறப்பையே பேசக்கூடியவர், இறப்பை அடைந்ததும், அவர் முகத்தில் அடையும் அமைதி கதைச்சொல்லியை ஆட்டிவைக்கிறது. அதில் ‘வேகம் கெடுத்தாண்ட’ எனும் சிவபுராண வரியை வைத்தது ஒரு ‘smart move’. ஆனால், ஒட்டு மொத்தமாக பல இலக்கியங்களில் ஈடுபாடு இருந்தால் ஒழிய இவ்வளவு நேர்த்தியாக எழுத்தில் பக்தி இலக்கிய கூறுகள் வராது என்பதை நான் அறிவேன்.
கோணம் சிறுகதையிலும், இப்படி ஒரு ஆள். நிகழாத ஒரு கலைஞர். அரசியல் பலமிருந்தால், பணமிருந்தால், வெற்றியடைந்திருப்பார் என நம்புகிறார். கிட்டதட்ட, இந்த ஆள் ஒரு தோல்வி என முடிவெடுக்கும்போது, அவரது முகத்தில் இருந்த வசீகரத்தின் காரணமாக கதைச்சொல்லி மீண்டும் சென்று இவரைப் பார்க்கிறார். மீண்டும் அவரை நோக்கி இழுக்கப்படும் இந்த ஈர்ப்புதான் அவரது மூலதனம் என அறியாத ஒரு தோல்வியுற்ற கலைஞர்.
சிறுகதைகள் (அடித்தூர்),(எலி),(அல்ஹாம்டுலில்லா),(சிண்டாய்)
நான்கு (சிண்டாய் கதை தனியாக எழுதப்படும்) கதைகளுமே உறவுச்சிக்கலைப் பற்றி பேசுகிறது, ஆனால் ஒவ்வொன்றும் சிறு நூழிலையில் வேறுப்பட்டுள்ளது.
அடித்தூர் கதையில், முதிய இணையினர் இருவர் உள்ளனர். ஒரே அடித்தூரில் கிழக்கும் மேற்காக தனிதனியாகப் பிரிந்த விருட்சம். அனைத்தும் அவரின் கட்டொழுகில் நடக்கவேண்டுமென விரும்பும் கிழவர். கிழவரின் எந்தவொரு மிரட்டல்களுக்கும் பிடிமானம் கொடுக்காத கிழவி. சன்னதம் வந்து ஆடும் கிழவி. இரு பாத்திரத்தை கிழவன் உடைத்தால், நான்காக உடைக்கும் கிழவி. முதுமையில், முற்றிலும் மனைவியிடம் ‘தோற்று’ விட்ட கிழவரின் ஆணவம் உடையும். கிழவரின் கண்ணீர் தேவியிடம் சரணடையும் ஒருவரது கண்ணீர் போல வாசிக்கமுடியும்.
எலி கதையில் எலி கொடுக்கும் தொந்தரவானது, வாசிக்கும் நமக்கே ஒரு தொந்தரவாக இருக்கிறது. ஆனால், எனது வாசிப்பில், பெலிசியா அதை விரும்புகிறாள் என்றே நினைக்கிறேன். அவளுக்கு இந்த தொந்தரவிலிருந்து வெளிவரும் அனைத்து வழிகளும் பெலிசாவுக்குத் தெரிந்தும் மந்தரித்து கொடுத்த தாளை கதைச்சொல்லியிடமிருந்து வாங்கி சென்று விட்டாள். அதை எரிக்கச் சென்றாளா என்னவென்று தெரியவில்லை, கதையில் இல்லை. ஆனால் பெலிசாவிடம் இருந்த சுய சித்திரவதை தெரிந்தது. இந்த கதையில் வரும் எலி எனும் தொந்தரவு பெலிசாவின் சுய சித்தரவைக்கான குறியீடாகவும் இருக்கலாம். அது ஒரு சிறை. அத்தொந்தரவை பெலிசியா அனுமதிக்கின்றாள் என்றே வாசிக்க தோன்றுகிறது.
அல்ஹாம்டுலில்லா கதை இந்த சிறுகதை தொகுப்பில் வந்த மிகக் கச்சிதமான கதை. எழுத்தாளர் கதையினுள் மிக எளிமையாக வாசகரைக் கொக்கி போட்டு இழுத்துவிடுகிறார். கிழவரை அன்றாடம் பாத்துக்கொள்ள திருமணமாகாத இளைஞரை தேடுகின்றனர். கதைசொல்லி தான் திருமணமானதை மறைத்து வேலைக்குச் சேறுவதால், இதனை கண்டுப்பிடித்த கிழவர் கதைச்சொல்லியை ‘துரோகி’ எனத் திட்டுகிறார். அதே சமயம், கிழவரின் பல நாள் மறைத்த தனது பழைய சினேகிதத்தை கதைச்சொல்லி ஒரு பட ஆல்பம் வழியாக கண்டுக்கொள்கிறான். கிட்டதட்ட இருவருமே துரோகிகள்தான், கிழவர் தனது வரலாற்றை மறைக்க நினைக்கிறார், கதைச்சொல்லி தனது நிகழ்காலத்தை மறைக்க முயன்று, இருவருமே தோல்வியடைகின்றனர். ராஜன் என ஒரு தமிழ் பையனைப் பார்த்ததிலிருந்து, கிழவர் மெல்ல தனது பழைய சினேகிதத்தின் வலியிலிருந்து விடுபடுகிறார். வாசிக்க மிகக் கச்சிதமான, மென்மையான கதை.
சிறுகதை : தைலம்
அரவினின் கதைகளில் நறுமணங்கள் அடிக்கடிக்க வருகின்றன. கோணம் கதையில், உணவு விடுதிகளில் மேசை துடைக்க வைத்திருக்கும், துண்டு எப்படி கொடுமணத்துடன் இருந்ததென எழுதியிருந்தார். சிண்டாயில் வரும் இறைச்சி மணம். இந்த சிறுகதையில் வரும் தைல மணம். எழுத்தில் ஐம்புலனனுபவம் அவசியம்தான், ஆனால், அதையே பிரக்ஜையுடன் செய்தால் கதை நன்றாக வருமா தெரியவில்லை, அரவின் அதை சிறப்பாக கையாண்டுள்ளார்.
சில காரணங்களுக்காக என்னால், இந்த கதையை உறவுசிக்கலுடன் பொருத்தி பார்கமுடியவில்லை. அல்லது, உறவுச்சிக்கலைப் பேசிவிட்டு அதைத் தாண்டி வேறொன்றைத் தொடும், கதைகளமாக பட்டது.
ரோக்கியா வியட்நாம் நாட்டு பெண். Masjid Jamek வீதிகளில், ஒரு பாடகியாக தன்னை நிறுவி கொள்கிறாள். இவள் பாடுவது ஜெக் எனும் மலாய் அசலூர்காரரின் பாட்டுத் தொழிலைப் பாதிப்பதாள், வழக்கமாக ஒரு பெண்ணைப் பிடிக்கவியல்லையெனில் எப்படி தகாத முறையில் திட்டு தீர்ப்பார்களோ அதே மாதரி திட்டுகிறான்.
ரோக்கியாவின் முதல் கணவர் ஸமான் சென்றதும், ரோக்கியா சிறுகுழந்தையுடன் மலவாடை அடிக்கும் ஒரு குடிலில் தனது தோழியின் தயவால், தங்கிக்கொள்கிறாள். உண்மையில் இந்த கதையில் என்னைக் கவர்ந்ததே, அதுக்குப்பின் வரும் தைல துணையில்லாமல் பாடப்போகும் புதிய ரோக்கியாதான்.
கதையில் ரோக்கியாவின் அறிமுகமே, தைல நறுமணத்துடன்தான் ஆரம்பமாகிறது. ஆனால், கதை முடியும்போது, அது அவளுக்குத் தேவைபடவில்லை. அப்பொழுது, ஸமான் சென்றபின், ஹசான் வந்துவிட்டான், அதனால் அவளுக்கு ஒரு துணைகிடைத்துவிட்டது. அவளை அத்தனை நாள் பக்கபலமாக இருந்த தைலம் ஹாசானின் வருகையால், தேவையின்றி போய்விட்டது என எடுத்துக்கொள்ளலாமா?
என் வாசிப்பில் அப்படி இல்லை. ஸமானுக்கு ஏற்கனவே மனைவியும் மக்களும் இருந்தது. அவன் ரோக்கியாவுக்கு, வீதியில் கடைபோட உதவுபவன், ஒரு எடுபுடி. ஆனால், ஹாசானின் வருகை ரோகியாவிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்துகிறது.
கதையில் ரோக்கியா-ஹசானின் உறவுக்கென அழுத்தமாக ஏதும் சொல்லபட்டுள்ளதா என நான் பார்க்கவில்லை. ஹாசானின் செயல் என்னாவாக இருக்கிறது, அதன் காரணமாக ரோக்கியா என்னாவாகிறாள் என்பது சுவாரிசியமானது.
ரோக்கியா, இயற்கையிலேயே நல்ல பாடகி, இத்தொழில் அவளுக்கு எளிமையாக வருகின்றது, அதை விரும்பியும் செய்கிறாள். அதற்கான அத்தனை ஆற்றலுடையவள். அதனாலே, ஜேக் பொறாமை படுகிறான். அவள் தவறி விழும் நேரங்களில் சரியான, சுடு சொற்களால் ரோக்கியாவைத் துன்புறுத்திகிறான்.
ஸமானுக்கு நேர் எதிராக, ஹசான் அவளது குரலினிமையைக் கண்டுக்கொண்டான். இசையறிந்தவன். அவன் ரோக்கியாவின் இசையை சொல்லின்றி பாராட்டின்றி ஆதரிக்கின்றான். அவள் அத்தனை நாள் தேடிக்கொண்டிருந்ததை ஹசானின் மூலமாக பெற்றுக்கொள்கிறாள். அதை அளித்தவன் ஹசான். உள்ளீருந்து எழும் உத்வேகத்திற்கு வெளிலிருந்து சுரம் கொடுக்கும் தைலங்கள் தேவையில்லை.
சிறுகதை : அணைத்தல்.
கதை மிக எளியது, கதைச்சொல்sலியின் தந்தை ஒரு முதலீட்டில் ஏமாந்துவிடுகிறார். இவரை நம்பி பணம் போட்ட ஒருவர் தான் குமார். குமார், ஒரு இந்தோனேசிய வாலிபனிடம் கடன் வாங்கி கதைச்சொல்லியின் தந்தையாரிடம் பணம் கொடுப்பார். கதைச்சொல்லியும் அவனது குடும்பமும் குமாரை ஏமாற்றுகின்றனர் என குமாரும் அந்த இந்தோனேசிய வாலிபனும் கதைசொல்லியின் குடும்பத்துக்கு செய்வினை வைத்ததாக கதைச்சொல்லி நம்ப ஆரம்பிக்கிறான். இதனால், குமார் கொடுத்த பணத்தை திரும்ப கொடுப்பதே, முறையென எண்ணி, நகையை அடகு வைத்து குமாரிடம் செல்ல போகும்போது, குமாரை போலிஸ் பிடித்து சென்றிருப்பர். அதனால், குமாரை வளர்த்த சின்னம்மாக் கிழவியை பார்த்து பணத்தை கொடுக்க சென்ற கதைச்சொல்லி, அவள் 7-eleven முன்பு அட்டை பெட்டியில் படுத்துகிடக்கும் அவலத்தை எண்ணி கொடுக்க வந்த பணத்தை மீண்டும் அவனுடனே எடுத்துச் சென்றுவிடுவான். எனக்கு இந்த கதை உண்மையாகவே எங்கு சிறுகதையாகிறது என தெரியவில்லை. அணைத்து வளர்த்தெடுத்த கிழவியயைப் பராமரிக்காமல் பொறுக்கியாய் திரியும் குமாருக்கு பணம் சென்று சேரக்கூடாது என நினைக்கும் ஒரு ‘ஹிரோ’ என்பது போல தான் இருந்தது எனது வாசிப்பு.
சிறுகதை : கேளாத ஒலி
அறிவியல் புனைகதை. இந்தக் கதையில் கீதா ஒரு திருமணமாகாதவள். அதை பற்றி பெரிதாக கவலையும் படவில்லை. Ai-செயலி ஒன்றை வளர்க்கும் நிறுவனத்தில், பிறர் செய்யும் தவறுகளை இடைக்கேட்கும் பதவியில் இருக்கிறாள்.
இவள் செய்யும் செயலியானது, அறிவுத்திறன் குறைந்த சிறு குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பை அவளுக்கு அளிக்கிறது. கதையில், இவள் தனது தாய்மையை வெளிப்படுத்த இந்த செயலியை ஒரு கருவியாக உபயோகிக்கிறாளா எனும் கேள்வி மட்டும்தான் எனக்கு எழுந்தது.
சிறுகதை : யாருக்கும் பூக்காத பூ
இந்த சிறுகதை தொடரிலில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை இதுதான். அரவின் ஒரு மிகச்சிறந்த sensitive எழுத்தாளரென இக்கதை காட்டும். சிறுவர்களின் உலகை எழுதுவது எளிமையான செயல் அல்ல. அப்பணியை மிக சிறப்பாகவே செய்துள்ளார்.
கதையின் ஆரம்பத்தில், கதைச்சொல்லி சிறுவனும், ரூபனும் வருகின்றனர். கதைச்சொல்லி ஒரு நிறுவப்பட்ட குடும்பத்திலிருந்தும், ரூபன் ஒரு உடைந்த குடும்பத்திலிருந்தும் வருகின்றனர். முதலானவன் நிறைய பரிசுகள் வாங்குகிறான், ரூபன் வாங்குவதில்லை. தேவாலயத்தில் விருந்துகள் நடந்தால், கதைச்சொல்லி சிறுவனை அவன் வீட்டில் அனுப்புவதில்லை ஆனால் ரூபன் red wine குடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான்.
ஏன் கதை இவ்வளவு, கருப்பு வெள்ளையாக இருக்கிறதென ஆரம்பத்தில் தோன்றினாலும், கதையின் முடிவிலும் ரூபனின் கதாபாத்திர வடிவ சித்தரிப்பிலும் பொறாமையின் தீபங்கள் எரிவதை பார்க்கலாம். தனது தகப்பனார், இறந்த அன்றுதான் வெள்ளக்கார தாஸ் வருகிறார். சிறுவர்களிடையே அவரிடமிருந்து பரிசு பெற்றால், சிறுவர்களுக்குள்ளே அது மிகப் பெரிய சன்மானம்.
அந்நாள் வரை ரூபன் கதைசொல்லியைப் பார்த்திருக்கவே மாட்டான். ஆனால், கதைச்சொல்லி தாஸிடம் பாடவிருக்கும் பாடல்வரை, ரூபன் கதைச்சொல்லியின் அத்தனை நடவடிக்கைகளையும் கதைச்சொல்லி அறியாமலே கவணித்துவைத்திருப்பான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “keep your friends close, your enemies closer”.
இந்த கதையின் முக்கிய ஏறுபுள்ளி அந்த பாடல், “யாருக்கும் பூக்காத பூ”. ஒரு சிறுவனை மற்ற பிள்ளைகள் எப்படி ஒதுக்கிவைத்திருப்பார்களோ அதைப் போல, ரூபனையும் கிட்டதட்ட அப்படிதான் வைத்திருப்பார்கள். கதைச்சொல்லி சிறுவனிடம் அனைத்துமிருந்தது ஆனால், ரூபனிடம் இழப்பைத்த் தவிர்த்து ஒன்றுமில்லை. இழந்து இழந்து ரூபன் அடைந்த ஒன்றை கதைச்சொல்லி சிறுவனால் அடையமுடியாமல் போனது சாதாரான கருப்பு வெள்ளை கதையிலிருந்து இக்கதை தனித்து இருக்கிறது.
***
முன்னுரையில் அரவின் ஒரே சமயத்தில் கூட்டுப்புழுவாகவும் வண்ணத்துப்பூச்சியாகவும், மாறி மாறி எழுதுகிறாரென எழுதியிருந்தார். கிட்டதட்ட அனைவருமே அதே நிலையில் தான் இருக்கிறோம் என நினைக்கிறேன்.
அரவினின் ஆரம்பகால கதைகள் மரணம், குகை, சூனியம், செய்வினை என ஆரம்பித்து அல்ஹம்டுலில்லா என கதைகளத்துக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் அந்த இருட்டுக்குள் ஆரம்பித்துதான் வருகிறோம் என்ற நிதர்சனத்தையும் அவரின் சிறுகதை வளர்ச்சியில் தெரிகிறது. இறுக்கமான சூழ்நிலைகளைப் பேசும் கதைகள் மாறி மேலும் விரிந்த மலேசிய கதைகளை அரவின் எழுத வேண்டுமென வாழ்த்துகிறோம்.
02.06.2025
கூலிம்.

Comments
Post a Comment