தேய்ந்த பாதைகள் - மா. இராமையா

மா. இராமையாவின் முதல் படைப்பாக அவரது சுய சரிதையான தேய்ந்த பாதைகள்  படித்தேன். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை எளிய நடையில் எழுதியுள்ளார். அவர் நீண்ட காலத்திறகான எழுதியிருந்த கைபழக்கம் இருந்தமையால் ஒரு கச்சிதமான நாவல் படிப்பதன் அனுபவம் கிடைத்தது. அதோடு, ஜொகூரின் மலாய் தொன்ம கதைகளையும் உள்ளடக்கி எழுதியிருந்தார்; கோர்வையாக அல்ல, ஓர் ஆவணமாகதான். உண்மையாகவே, வாசிக்க நன்றாக இருந்தது. 

 மா. இராமையாவின் மொத்த வாழ்க்கையைப் பற்றி படித்துப்பார்த்தால், அந்நாளில் திராவிடக் கொள்கைகளுக்கு ஊறிப் போனவர்களுள் இவரும் ஒருவர் என்று தெரியவந்தது. தமிழர்கள் சஞ்சிக் கூலிகள், மலாய்காரர்களும் வந்தேறிகள், சோழர் பரம்பரை, ரப்பர் தோட்டம் எனும் வகையறாக்குள் இவரையும் அடக்கிவிட முடியும். இருந்தாலும், இவரை ஒரு எழுத்தாளராக  எப்படி புரிந்துக்கொள்ளலாம் என்பதை என் புரிதலுக்கு ஏற்றவாரு விளக்க சக ஜொகூர் எழுத்தாளராக கடமைபட்டுள்ளேன். 

 இராமையா ஜொகூரில் தங்காக் நகரில் பிறந்தார். இவரது அப்பா சியாமின் மரண இரயில்வே கட்ட அழைத்துச் செல்லப்பட்டார். ராமையாவின் உடன்பிறப்புகள் திருமணமாகியும், வேலை நிமித்தமுமாக ஜொகூரின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்திருக்கிறார். அதனால் இராமையா அவரது அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். 

 இளமையில் மா. இராமையா தமிழ், ஆங்கிலம், ஜப்பான், ஹிந்தி மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். எந்நேரமும் கல்விக்கான உந்துதல் இவரிடம் இருந்துள்ளது. ஹிந்தி ஆசிரியர் ஒரு சிங் மதத்தவர். அந்த ஆசிரியரிடம் ஹிந்தி பாடம் கற்க சென்ற அனைவருமே தமிழ் பிள்ளைகள். அந்த ஆசிரியர் தமிழை கொஞ்சம் தரக் குறைவாகப் பேசவும், இவர் சினங்கொண்டு கிளம்பிப் போக, ஒரு 'தமிழ் சமூதாய தலைவராக' மற்ற பிள்ளைகளுக்கு காணப்பட்டுள்ளார். அப்பொழுது அவர் ஒரு 'பொடியன்' மட்டுமே. அவை மெல்ல வளர, பிற்காலத்தில் இந்த குணத்தை தெரிந்துக் கொண்ட அரசியலில் இருக்கும் கேடுவாதிகள் இவரை அரசியலுக்கு பலியாக்க முயற்சிசெய்தனர். நல்ல வேளையாக அதிலிருந்து தப்பியுள்ளார்.

 ராமையாவின் சிறுவயதில் ஒரு மலாய் பள்ளியில் ஜப்பான் போர் வீரர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவருக்கு 'மிலிடிரியில்' சேர ஆசை பிறந்தது. இராமையா அவரது ஆசையை அம்மாவிடம் சொல்ல, அம்மா 'எல்லோரும் என்னைவிட்டு சென்றால் நான் என்ன செய்வது' என அழுது அடம்பிடித்து ராமையாவை படிக்க வைத்துள்ளார். இராமையாவின் படிப்புக்கு அவர் அண்ணனும் உடன் இருந்திருக்கிறார்.  இவர் திறமையாக படித்து தனது வேலையை அரசாங்க அலுவலில் தக்க வைத்துக் கொண்டார். இராமையாவின் வார்த்தைகளில் அது 'ஒராள் அஞ்சலகமாக' இருந்திருக்கிறது. இரு வருடங்களுக்கு ஒரு முறை வேறு அலுவலுக்கு மாற்றலாகி செல்ல மேலிடத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவ்வகையில் அவர், குளுவாங்க், சா ஆ, முவார், என்டாவ், தங்காக் என பல்வேறு இடங்களில் இருந்துள்ளார். - இதனால் இவரது கட்டுரைகளில் பழைய ஜொகூரின் வர்ணனைகள் இருக்குமெனவும் தோட்டபுறங்களைத் தவீர்த்து ஜொகூரின் நகரங்களைக் காட்டியிருப்பார் என நம்புகிறேன். 

 சென்ற இடங்களில் எல்லாம், தமிழ் நேசன் 'தாளிதழை' தேடியுள்ளார். அப்படி கிடைக்கவில்லையெனில், அந்த நகரத்தில் தமிழ் வியாபாரிகளுடன் நட்பு கொண்டு அவருக்கு தமிழ் நேசன் ஏஜெண்ட் வாங்கிக் கொடுப்பது தலையான கடமையாக எடுத்துக் கொண்டுள்ளார். இவர் பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளில் தமிழ் நேசன் பற்றிய கொடுத்த நுண்தகவல்களை ஒப்பீட்டு பார்க்கையில் அப்போதே வந்து கொண்டிருந்த தமிழ் முரசு, Indian Daily Mail பற்றி ஒருவரிகூட எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Indian Daily Mail ஒரு கட்டத்தில் நிறுத்தப்படும் என்று செய்தி வந்தவுடன் தமிழ் நேசன் தமிழ் மலர் என்ற இதழை வெளியாக்கியது. அதற்கும் தனது முழு ஆதரவை வழங்கியவர் இராமையா. அதே போல் அவர் தமிழ் வகுப்பு பற்றி நல்வழியில் எழுதியிருந்தாலும், அவர்காலத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளனர் என பொத்தம் பொதுவாக விமர்சனத்தை வைக்கிறார். 

 ஒர் எழுத்தாளராக இராமையா தன்னை நிறுவிய இடங்களும் உண்டு. ராமையா 'தமிழ்செல்வன்' எனும் புனைபெயரில் தமிழ்நேசனில் சிறுகதைகள் எழுதி வந்தார். ஒர் எழுத்தாளராக தன்னை நிறுவி தமிழ் நேச அன்பர்களுள் சற்றே புகழ் பெற்றிருந்த காலமது. அப்போது ஒரு இளவல் புனைபெயரில் கவிதைகள் எழுதி அவை பிரசுரமாகவும் ஆயிற்று. என் புனைபெயரில் யார் இப்படி செய்வது என்று நேசன் பத்திரிக்கைக்கு எழுதினார். அவர்களோ, அந்த இளம் கவிஞரிடம் சொல்லிவிட்டாச்சு, இனிமேல் எழுதுவதென்றால், அப்பாவின் முதலெழுத்துடன் (inital) சேர்த்து தமிழ்செல்வன் என்ற புனைபெயரில் எழுதலாம் என்று அறிவுரை செல்லியுள்ளனர். ஆனால் அதே பையன் மீண்டும் இராமையாவின் புனைபெயரில் கவிதைகள் எழுதி அனுப்பியிருந்தான். 

இராமையாவுக்கு கோவம் வந்ததாம். அதனால், புலவர் குழந்தையின் 'யாப்பதிகாரத்தை' வாசித்து மரபுகவிதைகளைப் பயின்றுள்ளார். அதை படித்தவுடன் அவர் எண்ணம் பொசுங்கியது. விடாமல், சுயமாக மரபு கற்று தமிழ்செல்வன் என்ற பெயரில் மரபு கவிதைகள் எழுதி அனுப்பியுள்ளார். இதற்கு பின், அந்த பையன் கவிதைகள் அனுப்பவதில்லை,  'இளம் எழுத்தாளரின் சுடர் அனைந்து விட்டது' என்று இராமையா வருந்தி எழுதியிருந்தாலும் இந்தச் சம்பவமே அவருக்கடுத்து வந்த இளம் எழுத்தாளர்களின் மீதிருந்த கசப்பின் தொடக்கப்புள்ளி என்று நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களும் முதியவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளிக்கு காரணம் இளம் தலைமுறையினரே என்று வல்லின நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ராமையாவின் 'தேய்ந்த பாதைகள்' சுயசரிதையை மெய்ப்பு பார்த்து புத்தகமாக்கியது அதே தங்காவில் வசித்த அவருக்கு அடுத்த வந்த இளம் எழுத்தாளர் தேவராஜன் என்பது குறிப்பிடதக்கது.

இப்படி இன்னொருமுறை தன்னை எழுத்தாளராக நிறுவியுள்ளார். மலேசிய தமிழ் இலக்கியத்தில் பதினைந்து ஆண்டுகள் இருந்த அனுபவமிருந்ததால், கவியரசு சோமசன்மா கட்டளை/வேண்டுதலுக்கிணங்க மலேசிய தமிழ் இலக்கிய வரலாறுஎழுதினார். அவர் அதன் மூக்கால் வேலையை எழுதி  இர..வீரப்பனாரிடம் அனுப்பி மேற்கொண்டு எதை சேர்க்கவேண்டுமென கேட்டு அனுப்பியுள்ளார். அதற்கு வீரப்பனார் இதுவே சிறப்பாக உள்ளதென்றும் அவரின் பங்குக்கு சில குறிப்புகளையும் அளித்திருந்திருக்கிறார்.

இச்சமயத்தில்தான், Dewan Bahasa dan Pustaka எனும் அரசாங்க புத்தகாலையம் தமிழ் வெளியீடுகளில் ஆர்வம் காட்டியது. இந்த கலந்துரையாடலில் ராமையா தங்கியிருந்த தங்காவிலிருந்து ஒருத்தர்கலந்துக்கொண்டிருக்கிறார். DWP அதிகாரிகளுடன் பேசிவிட்டு திரும்பிய இந்த ஒருவரிடம்தான் வீரப்பனார் ராமையாவின் மலேசிய தமிழ் இலக்கிய வரலாறுகுறிப்புகளை கொடுத்து ஊர் சென்று சேர்ந்ததும் இராமையாவிடம் திருப்பி கொடுத்துவிட சொல்லியிருக்கிறார்.

இரமையா விஷயத்தை தெரிந்துக் கொண்டு இந்த ஒருவரிடம்தனது படைப்பை கேட்டிருக்கிறார். அதற்கு இந்த ஒருவர் தன்னிடம் ஏதுமில்லை என்று விட்டேத்தியாக பதில் சொல்லவும் ராமையாவைவிட வீரப்பனார்தாம் அதிகமாக கோபித்து போயிருக்கிறார். பல வருடங்கள் சேர்த்து வைத்த குறிப்புகளையும் இன்னொருவரின் ஒரு மாத உழைப்பையும் திருடிக் கொண்ட அந்த ஒருவரின்பெயரை மட்டும் இராமையா எழுதவில்லை. இவர் வாழ்க்கையில், சிறு வயது சிநேகிதர்கள், பண உதவி செய்தவர்கள், அரசியல் கேடுவாதிகள், இராமையா மீது பொறமை கொண்டு  அரசாங்கத்திற்கு மொட்டை கடிதாசி எழுதியவர்கள், வேலை செய்த இடத்தில் கசாப்பு கடை வைத்திருந்தவர் வரை குறிப்பிட்டு பெயர் எழுதிய இராமையா இலக்கிய துறையில் அவரை கை கழுவிய ஒரே ஊர்காரரான எவர் இந்த துரோகத்தைச் செய்தது என்று எழுதாமல் மறைந்துவிட்டார். ஒர் எழுத்தாளைனைத் தவீர எவருமே செய்ய முடியாத விரல் சுட்டுகளில் இது அடங்கும்.

இருந்தாலும், மிஞ்சியிருந்த குறிப்புகள் கொண்டு இராண்டாவதாக மலேசிய தமிழ் இலக்கியம் வரலாறுநூலையும் எழுதி முடித்தார். [1978, கிடைக்குமிடம், திருமதி சுந்திரமேரி L.C 255, Jalan Naib Long Tangkak, Johor. சிங்கை; சோமசன்மா பதிப்பகம்]. இதை எழுதும்போதே, முதலில் எழுதிய பிரதி போல வரவில்லை என்று ராமையாவே சொல்லியிருந்தார். அவருக்குப் பின் பலரும் மிக முக்கியமாக, சிங்கை பால பாஸ்கரனும் மலேசிய-சிங்கை தமிழிலக்கிய வரலாற்று ஆவணங்கள் எழுதிவிட்டனர். இருந்தும், நிகழ்ந்த உண்மைகதைகளுடன் இராமையாவை ஒரு ஆளுமையாக, ஒரு எழுத்தாளராக கட்டமைத்துக்கொள்ள இவை உதவுகின்றனர்.

அவரது மகள்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மன உழைச்சல்கள் வழியாக அவரது திராவிட கொள்கைகள்அடித்து துவம்சம் செய்யப்பட்டது என என்னால் நுண்மையாக் உணர முடிகிறது. ஆனால், அதை இறுதி வரை அவர் காட்டிக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

இராமையாவின் முதல் மகள் அருண்மொழியை மருத்துவ படிப்பு படிக்கவைக்க தமிழகம் அனுப்பியிருந்தார். ‘அண்ணாவின் குடும்பத்துக்கு இரண்டு மெடிக்கல் சீட்இருப்பதாகவும். அதில் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்என பி.எம்.தாசு என்பவர் சொல்லியிருக்கிறார். பின், கடைசிநேரத்தில் அருண்மொழிக்கு வாங்கிய மெடிக்கல் சீட்டை அதைவிட அதிகம் பணம் கட்டிய இன்னொருவருக்கு தாசு விற்றுவிட்டான். மறு ஆண்டு, மீண்டும் அதே சீட்டைவேறொருவருக்கு விற்றுவிட்டார் தாசு. இராமையாவின் முழுநாள் திராவிட கொள்கையாளர், அவர் நம்பியிருந்த அரசியல் கேடுவாதிகளால் மகளின் படிப்பை இன்னொருவரிடம் நம்பி கெட்டார். இது அவர் நம்பிக்கை கொண்டிருந்த கொள்கையின் மேல் விழுந்த முதல் இடி. அவர் மகள் பிறகு கர்நாடகாவில் படித்து மலாயா தேர்வெழுதி தனியார் மருத்துவரானார்.

இரண்டாவதாக, ‘மலேசிய தமிழ் இலக்கிய வரலாறுபுத்தகத்தை வெளியிட கலைஞரின் இல்லம் சென்று மாலை மரியாதை செய்து நூலை கொடுத்துவிட்டு வந்தார். கலைஞரின் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடக்கவேண்டுமென்பது ராமையாவின் ஆசை. ஆனால், கருணாநிதியை பார்க்க விடாமல் சில நந்திகள்தடுத்துவிட்டதாம். நந்திகள் தடுக்கவில்லையெனில் கலைஞர்கண்டிப்பாக ராமையாவைப் பார்த்திருப்பார் என இவர் நம்புகிறார். இந்த ஆசை நிறைவேறாது என்றறிந்தவுடன். அவர் மரபு கவிதைக்கு தலைவர் என வணங்கும் கண்ணதாசனைப் பார்க்க சென்றுள்ளார்.

காலையில் கண்ணாதாசன் வீடெறிய இராமையாவை தூங்கி எழுந்து மாலை மணி நான்குக்கு கண்ணதாசன் பார்க்க வந்தாராம். இதற்காக காலையில் உணவருந்திய இராமையா பசியுடன் காத்திருந்திருக்கிறார். முகமன், அறிமுகம், வந்த நோக்கம்யாவற்றையும் சொல்லியவுடன் கண்ணதாசன் ஒரு முறுவலித்து சென்றிருக்கிறார். மறு நாள் கண்ணதாசனின் செயலாளரிடம் நூல் வெளியீட்டு திகதியை சொல்லி அனுப்பியுள்ளனர். கண்ணதாசன் வரவில்லை. அவருக்கு பதில் கலைமாமணிநாரத துரைக்கண்ணன் வந்து தலைமைதாங்கியுள்ளார். இதில், ராமையாவுக்கு மெத்தமகிழ்ச்சி.

திராவிட கோட்பாடின் ராமையாவின் தலைமுறை முதல் இன்றுவரை அதில் அர்த்தமில்லாமல் தொங்கி கொண்டிருக்க அவசியமில்லை என்பது நல்ல வாசிப்பனுபவமாக இருக்கலாம். அதேபோல், மரபுகவிதைகளில் சினிமாவைத் தவீர்த்து, எழுதியவர்களை அடையாளம் கண்டிருக்கலாம்.

ராமையாவுக்கு தமிழகத்திலிருந்து ஒரு நண்பர் இருந்திருக்கிறார். அவர், ‘சங்கொலிசோலை இருசன். இவர் தமிழகத்திலிருந்து வந்து தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள தமிழ் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று அவர்களின் தனிவாழ்க்கையையும் படைப்புகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். அந்த தேடல் கிழக்காசிய நாடுகளில் தமிழ் மணக்கிறதுஎனும் தொகுப்பில் நிறைவுற்றது. ஆக, மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆவண நூலான மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள்உடன் கிழக்காசிய நாடுகளில் தமிழ் மணக்கிறது’ [புரட்சிப் பண்ணை, 1977] நூலும் முக்கிய ஆவண படைப்புகளாகும். சோலை இருசனின் இராமையாவின் பற்றிய கச்சிதமான தனிவாழ்க்கை மற்றும் படைப்புகளைப் பற்றிய குறிப்பு தேய்ந்த பாதைகள்புத்தகத்தின் இறுதியில் உள்ளது. அதை படிக்கும் போது, தமிழ் விக்கிக்காக எழுதப்படும் அதே செறிவு இதில் இருப்பதை காண முடியும். அதோடு, சோலை இருசன் மலேசிய தமிழ்ப் புரவலர்கள் எனும் புத்தகத்தையும் தொகுத்துள்ளார். [புரட்சிப் பண்ணை, 1984]

ராமையா சோலை இருசனின் மலாயாவுக்கு வந்த வேலை முடிந்தும் ராமையாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ராமையா முதன் முதலாக தமிழகம் செல்லும்போது வழிகாட்டியாக சோலை இருசன் இருந்துள்ளார். ராமையாவின் முக்கிய அபுனைவு படைப்பான மலேசிய தமிழ் இலக்கிய வரலாறுபுத்தக வெளியீடு தமிழகத்தில் வெளியாக முன் நின்று உதவியவர் சோலை இருசன். அப்படியான மலேசிய-தமிழ்நாட்டு நட்பு இன்றளவும் பலருக்கும் தொடர்ந்து வருகிறது. சோலை இருசன் மலேசியாக்கு முக்கியமானவர்.

மா. ராமையாவுக்கு தமிழ் நாளிதழ்கள் விற்றால், தமிழ் மொழி வளரும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். பிறகு மேற்கு மலேசியாவில் மாவட்டத்துக்கு ம..கா அலுவல் உள்ளது. ஒவ்வொரு அலுவலும் நான்கைந்து பிரதிகள் வாங்கிக் கொண்டால், ஆயிரம் பிரதிகள் விற்கப்படுமென்றும். அதற்கு முன் இதே கணக்கை தமிழ்பள்ளிக்கு வைத்து போட்டார் என்றும் அவரே எழுதியுள்ளார்.

நிதர்சனம் என்னவெனில், இந்த மூன்றில் எதுவுமே, சீரான தமிழ் இலக்கிய ஆர்வதுக்கு வழிவகுக்காது என்பதே உண்மை. இந்த தமிழ் பள்ளிகளை நம்பி ஆயிரம் புத்தகம் பிரதி எடுக்கும் எழுத்தாளர்கள் இன்றளவும் இருக்கின்றனர், இவர்களை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன். அவர்தாமாக இலக்கியம் கற்கவில்லையெனில் எவர் ஒருவரையும் இலக்கியத்தில் ஈடுபடுத்த முடியாது. இராமையா  இறுதியாக வழங்கிய நேர்காணலில் சொன்னதுபோல எழுத்தாளனை உருவாக்க முடியாது, அவனாகவே அவளாகவே எழுதினால் உண்டு.

https://vallinam.com.my/version2/?p=5428.

24.05.2024

 

Comments