வாசிப்பனுபவம் - சாசனம் - கந்தர்வன்

கதைச்சொல்லியின் தாத்தா காலத்தில், ஒரு ராஜா அவரின்  ஊருக்கு வருகிறார். ராஜாவுக்கு ருசியான போஜனங்களைச் செய்ததால், தாத்தாவுக்கு நிலம் கிடைக்கிறது. புது பணக்காரருக்குச் ஒரு புதிய வீடும் கிடைக்கிறது. அந்த புதிய வீட்டில், தாத்தாவின் ஜாடையில் ஒரு பெண் இருக்கிறாள். கதைச்சொல்லியின் அப்பாவுக்கும் இந்த பெண்ணுக்கும்  பதின்மூன்று வயது வித்தியாசம். 

அந்த பெண்ணுக்கு திருமணமானவள். தாத்தாவின் இந்த புதிய வீட்டில், ஒரு கிழவி, அந்த பெண், அவன் கணவன் என மூன்று பேர் உள்ளனர். அந்த குறிப்பிட்ட நிலத்தில் பன்றிகளும், அதன் கழிவுகளும், உடன் குறவர் கூட்டமும் உள்ளது. இந்த கழிவான இடத்தில்தான் இந்த குடும்பம் அங்கு வாழ்கிறது.

கதைச்சொல்லியின் அப்பாவுக்கு, அந்த மரமிருக்கும் இடம் மட்டும் தன் பரம்பரை சொத்து (சில கொலைகளுக்குப் பின் ஆக்கிரமிக்கப்பட்ட) என தெரியும். ஆனால், இந்த புளிய மரத்தை நட்டது தாத்தாதான். தீவிர பேச்சிலும், அந்த மரத்தை தாண்டுகையில், ஒரு முறை திரும்பி பார்த்துவிடுவாராம். சுற்றி நிலமிருந்தாலும், இல்லாத இந்த ஒன்றின் மீது அதிக ஆசையுடையவர். 

புளி உலுக்கலின் போது அந்த கிழவி, புளிய மரத்தை தொட்டு, தடவி, கண்ணீர் விட்டு ஒரு சிறு சடங்கை ஆரம்பித்து விட்ட பின்னரே இந்த உலுக்கல் நிகழும். கிழவி அந்த மரத்தை மறைந்த  கதைச்சொல்லியின் தாத்தாவாக நினைக்கிறார். ஆனால், இந்த சடங்கை மொத்தமாக கதைச்சொல்லியின் அப்பா வெறுக்கிறார், அவருக்கு கிழவின் செய்கை அறுவெறுப்பாகிறது. புளி உலுக்கலின் போது பெற்ற புளியின் ஒரு மிச்சத்தைக் காலால் எட்டி ஒரு குவியலாக்கி அந்த குடும்பத்திடம் கொடுக்கிறார். 

தனது கருணையினால் மட்டுமே அந்த குடும்பம் வாழ்கிறது என நினைத்துக்கொள்கிறார். ஆனால், கருணை என்ற போர்த்தப்பட்ட இந்த அவமரியாதையை அந்த கிழவி தாங்கிக் கொள்கிறாள். ஆனால், இரண்டாம் வழிதொன்றல்களால், இந்த அவமரியாதையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

தாத்தாவின் உடைமைகளாய் இருந்த நிலங்களைக் கதைச்சொல்லியின் அப்பாவால்,  ஏற்க முடிந்தது. ஆனால், தாத்தாவின் இந்த மறு குடும்பத்தை ஏற்க முடியவில்லை. நிலப்பிரபுவுக்கே உண்டான அனைத்து தோரணையும் உடையவராகிறார். இந்த அவலத்தைக் கண்டுகொள்ள முடியாமல், அனைவரும் முக்கியமாக கிழவி எதிர்த்து நிற்கும் போது, மிரண்டு போகிறார். அவரால், அந்த நிலத்தை ஒன்றும் செய்ய முடியாததால், அமைதியாகுகிறார். 

என் வாசிப்பில், அந்த கதைச்சொல்லியின் தாத்தாவே இப்படி ஒரு ஏற்பாட்டை நிகழ்த்தியிருக்கிறார் எனத் தோன்றுகிறாது. அவரது காலத்துக்குப் பிறகு எவராலும், இந்த குடும்பத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடியாமலிருக்க செய்த ஏற்பாடு என நினைக்கிறேன். 

அதே சமயம் இப்படி ஒரு ஏற்பாடு இல்லையெனில், கதைச்சொல்லி அப்பா ஒரு நிலப்பிரபுவாக என்ன செய்திருப்பார் என்றும் யூகிக்க முடிகிறது. 

 

(Drawing, Indian Tamarind Trees, Jamaica, July 1865)
Frederic Edwin Church

Comments