பாய்மரக்கப்பல் வாசிப்பனுபவம்
பாய்மரக்கப்பல் பாவண்ணனின் முக்கிய ஆக்கமாகவும் குடும்ப தொழில் விவசாயத்திலிருந்து நகர்ந்து நுகர்வுக்கு செல்லும் கதையாக பரவலாகவும் பேசப்பட்டு விட்டது. இந்த வாசிப்பனுபவத்தில் சில கதாபாத்திரங்களை அணுகி பார்க்கிறேன்.
முத்துசாமியின் சிற்றப்பா
முத்துசாமியின் சிற்றப்பாவிற்கு பாகப்பிரிவினையில் துரோகம் நடந்ததாக நம்புகிறார். அண்ணன்களை தகப்பனராக பார்த்திருந்த காலகட்டத்தில் முத்துசாமியின் சிற்றப்பாவும் விதிவிலக்கல்ல. இவரும் முத்துசாமியின் அப்பாவின் மேல் மரியாதையும் பக்தியும் உள்ளவர். அத்தனையும் எப்படி ஒரு ஆட்டுக்குட்டியால் சில கணங்களில் கவிழ்ந்து தலைகீழாகிறது என்பது ஒரு நல்ல கேள்வி. இத்தனை பிரியமும் பக்திவிசுவாசமும் வீண், அண்ணன் அதை திருப்பி தரவில்லை, துரோகம் செய்துவிட்டார், நிற்கதியாக நிறுத்திவிட்டார் என எண்ணும் முத்துசாமியின் சிற்றப்பாவின் ஆற்றாமை இறுதியில் இரத்த கலவரத்தில் முடிகிறது. அதற்கு பலியானவர்கள் முத்துசாமியின் குடும்ப பெண்கள், முத்துசாமியின் மனைவி வனமயில் உட்பட.
ஆறுமுகம்
முத்துசாமிக்கு முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம் என மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் முனுசாமி பிரஞ்சு பட்டாளத்துகாரராய் போய்விடுகிறார். ரங்கசாமி சாமியாராய் போய்விடுகிறார். இதில் ஆறுமுகம் ஒரு தனி கதை. ஒரு ஐயரிடமிருந்து பெறும் காணி நிலத்தை இருபது காணியாக்கிய முத்துசாமிக்கு துணையாக நின்றவன் ஆறுமுகம். வெளியூர் காரியங்களுக்கு இவனைதான் அனுப்பி முக்கிய ஆளாகியிருந்தான். ஆனால் ஆறுமுகத்துக்கு எப்படியோ சாராய பழக்கமிருந்தது. எவரோ ஆறுமுகத்திற்கு சாராயத்தில் விசம் கலந்து கொடுத்துள்ளனர். அதனால், சிகிச்சை பயனலிக்காமல், சக்கர நாற்காலியில் முடமாகிறான். அன்றிலிருந்து முத்துசாமியின் குடும்பத்துக்கும் விவசாயத்துக்கும் நூலறுந்து போகிறது. ஆறுமுகம் இதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகிறான். ஆறுமுகம் அவனது அப்பாவை பாயும் நதியாகவும், தன்னை தேங்கிப் போன குட்டையாகவும் நினைத்துக்கொள்கிறான்.
துரைசாமி
ஆறுமுகத்தின் மகன்தான் துரைசாமி. குறுநாவலின் முதல் வரியிலேயே ராஜ்தூத்தில் வந்திறங்கும் முத்துசாமியின் ஒரே பேரன். இவனது பெரியப்பாக்களுக்கு விவசாயத்திலிருந்து விடுபட கிடைத்த காரணங்களைப் போல இவனது காரணம் அரசியல். பள்ளி செல்லும் வயதில் அடுத்த ஊருக்குச் சென்று சினிமா பார்த்து தாத்தாவிடம் மாட்டிக் கொள்கிறான். முத்துசாமி அவனை தலைகீழாக ஒரு கொட்டகையில் கட்டுகிறார். அவனுக்கு கீழ் வைகோலைப் பரப்பி தீயிடுகிறார். துரைசாமியைப் பலவாறாக அடித்தாலும் அவனுள் “நான் அப்படிதான் செய்வேன் என்ன செய்வ” என சிறுவயதில் நினைத்துக்கொள்கிறான். முற்றிலும் அவனது முழு குடும்பமே அநாகரிகமானவர்கள். அவர்களிடமிருந்து பிரிந்து செல்பவனாக, குறைந்த உழைப்பில் மிகுந்த செல்வந்தனாக ஆக விரும்புவன். அவன் ஒரு சாராய கடையையும் வைக்கிறான். அவன் ஆசைபட்டது போல் ஒரு பெரிய வீட்டை கட்டி எழுப்புகிறான். ஆனால், திறப்புவிழாவன்று தாய்தந்தையரை, குடும்பத்தை அழைக்கவில்லை. அடுத்த எம்.எல்.ஏ-வாக வர ஆசைப்பட்ட துரைசாமியின் கனவுகள் ஒரு சம்பவத்தில் தலைகீழாக மாறுகிறது. அவன் வைத்திருந்த சாராயக் கடையில் விஷ சாரயம் குடித்து நான்கு பேர் மரணமடைகின்றனர். அதை மூடி மறைக்க அவனுக்கும் மேல் உள்ளவர்களிடம் பணத்தைக் கொடுக்கிறான். அவர்களோ இவனை ஏமாற்றி பணம் பறிப்பத்தைக் கூட அறியாமல் பணத்தை இறைக்கிறான். இதற்கிடையில் சாராய மரணத்தை சாக்காக வைத்து அதிர்கட்சியினர் ஆக்ரமிப்பை ஆரம்பிக்கின்றனர். அவன் நம்பும் அனைத்தும் அவனை கைவிடுகிறது. குடும்பமில்லாதவனாக இறுதியில் ஆகின்றான்.
ஆறுமுகத்திடம் ஒரு கேள்வி எழும்புகிறது. இத்தனை மூர்க்கம், கண்டுகாதின்மை, அலட்சியம் அவனுக்கு எங்கிருந்து பிறந்தவை? அவன் முன்னோரின் உழைப்பிலிருந்து பெற்றுக்கொண்ட துரைசாமி, அவர்களுக்குத் திருப்பி கொடுக்க அவன் குழந்தையைத் தவீர ஒன்றுமில்லாதவனாகிறான். ஆறுமுகத்தின் மனைவி மல்லிகாவிடம் உறவு கொள்கிறான். ஆனால், மல்லிகாவின் நினைவில் வேறு ஒருவனின் முகம் வந்துபோகிறது. ஒர் ஆண் தோற்கும் இடமது. அவனது குடும்பத்திடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்வதும், அரசியலில் இருந்த மூன்றாமவரை பக்தி விசுவாசத்துடன் நம்புவதும். பிறகு அவர்களாலே கைகழுவப்பட்டு ஏமாற்றப்படுவதன் காரணம் சுய குடும்பத்தை நம்பாதிருந்ததால் என கதை செல்கிறது.
முத்துசாமி
மாட்டை ஓட்டிக்கொண்டிருக்கும் முத்துசாமியிடம் அவரது தந்தை முத்துவுக்கு கலப்பையைக் கொடுப்பதில் விவசாயி முத்துசாமி உருவாகிறான். முத்துசாமியின் தந்தை ஒரு மாடு மிதித்ததால் முத்திரப்பை சேதாறமாகி வயிறு வீங்கிப்போகிறது. மூத்திரக்காய் நாட்டு மருத்துவம் பயனலிக்காத போது, உறவினர்களுக்கு செய்தி சொல்லப்படுகிறது. முத்துசாமியின் தந்தை மரணம் தூரமில்லை என நன்கு அறிகிறார். அவர் இறப்பதற்குள் மூத்த பையன் முத்துசாமிக்கு திருமணம் நடந்தாக வேண்டுமென்கிறார். அத்தை பெண் வனமயிலுக்கும் முத்துசாமிக்கும் திருமணமாகிறது. முத்துசாமி சொத்துசண்டையில் வனமயிலை இழக்கிறார்.
அவரது மூன்று மகன்களுக்கும் ஏற்பட்ட தீக்கதி அவரின் பாரமாக உள்ளது, பேரன் துரைசாமி எப்படியும் வழிக்கு வரப்போவதில்லை என தெரிந்துக்கொள்கிறார். நாவலின் இறுதியில் முத்துசாமி, ஒரு முட்புதிரை திருத்தி தென்னை கன்று வைக்கிறார். அதுவே பிள்ளை, பேரன் உறவு என்பதை அறிவிக்கிறார். தன்னால் இயன்ற நேர்மறை செயலை அவர் செய்கிறார். மண் ஒன்றை தவீர புக்கிடம் இல்லாத அவர் இப்படி இறுதியில் செய்வததுதான் பாய்மரக்கப்பலின் பரவாலான வெற்றி எனப் பார்க்கிறேன்.
பிச்சாண்டி
பிச்சாண்டி முத்துசாமியின் இரண்டாம் தாரம் நாவம்பாவின் தூரத்து சொந்தம்.
பிச்சாண்டியின் அறிமுகத்திலே அவனது முழு சுபாவத்தையும் நேர்த்தியாக எழுதியிருப்பார். ஊரைவிட்டு வந்த பிச்சாண்டி ஒரு ஸ்டேசனில் படுத்து தூங்கியிருப்பான். காலையில் அங்கு ஒரு லாரியில் வாழைத்தண்டுகளை ஏற்றிக்கொண்டிக்கும் ஓசையைக் கேட்டு எழுந்தரித்தவன் யாரும் கேட்காமலே ஓடிப் போய் உதவுவான். அந்த லாரிக்காரரிடம் தான் ஒரு அனாதை என அறிமுகபடுத்திக்கொண்டு நாவம்பாவை சந்திக்க வருவான். பிச்சாண்டிக்கு சோறிட்டு முத்துசாமியுடன் வைத்துக் கொள்வார். இதனாலேயே, முத்துசாமியிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துக்கொள்வான்.
துரைசாமி இவனை வேலையாளைப் போல பார்ப்பான். மீசை முளையா வயதில் துரைசாமி பிச்சண்டியை அழைத்து பீடி வாங்கி வர சொல்லும்போது, அதை முத்துசாமியிடம் சொல்லிவிடலாமா என யோசிப்பான்.
முத்துசாமிக்கு துரைசாமியின் இடத்தில் இறுதிவரை பிச்சாண்டி இருந்தான். இவனிடம் அதிசயைக்க வைப்பதென்னவென்றால், துரைசாமிக்கு ஈடாக இவன் இருந்திருக்கிறான் எனும் அறிதல் முத்துசாமிக்கு இருந்ததா என பிச்சாண்டி கண்டுகொண்டது போல் கதையில் எங்கும் வரவில்லை.
தாண்டவராயன் (எ) சத்தியசீலன்
இந்த பெயர்மாற்றம் அவனது தந்தை காத்தவராயன் ஒரு காந்தியவாதி என காட்டுகிறது. அவன் பிறந்து மூன்று வயது வரை அப்பாவை பார்க்கவில்லை. வளர்ந்தவுடன் விவசாயம் செய்ய அவனுக்கு விருப்பமும் இல்லை. அதனால், நாடக கம்பெணிகளில் ஏறி இறங்குகிறான். வசனங்கள் பேசி குரல் உடைகிறது. அதனால் சண்டை கற்றுக்கொண்டு சினிமாவில் சேருகிறான். அதில் எப்படி சம்பாரிக்கிறான் எனவும், விவசாயத்திலிருந்து எப்படி அவன் சம்பளம் எப்படி பல்மடங்கு என்பதை வேடிக்கையாகவே சொல்கிறானன்றி ஆணவத்தால் இல்லை. பிறகு, முத்துசாமியிடம் தனக்கு பெண் பார்க்க சொல்லிவிட்டு கடைசியில் விவசாயம் செய்வதாக தெரிவிக்கிறான். முத்துசாமிக்கு இருக்கும் ஆதரவான வாரிசுகளில் சத்தியசீலன் ஒருவன்.
***
பாவண்ணனின் உவமைகளில் ஒன்று இது “உழுதுகொண்டே செல்லும் கலப்பை துனி ஏதோ ஒரு வேரில் பட்டுத் தடுமாறியது போல ஓர் எண்ணம் அவரைக் குழம்பியது”. விவசாயிகளுக்குரிய பேசுப்பொருளுக்குரிய உவமை.
பாய்மரக்கப்பலின் முதல் அத்தியாயத்திலேயே நாவலின் முழு பேசுபொருளையும் நேரடியாக தெளிவாக எழுதியுள்ளார். இதே கச்சிதத்தை மனித உறவு, மனவோட்டத்திற்கும் எழுதியதனால், பாய்மரக்கப்பல் அளவில் சிறியதாக உள்ளது. எளிதில் வாசிக்கக்கூடிய குறுநாவலாக அமைகிறது.
31.08.2024

Comments
Post a Comment