டியர் அம்பை,

தமிழின் சிறந்த நூறு சிறுகதை பட்டியலில் இடம்பெறாத அம்பையின் சிறுகதைகளை முன்வைத்து எழுதப்படும் கட்டுரை. அதிகம் பேசப்படாத இந்த சிறுகதைகள் காட்டில் ஒரு மான் (காலச்சுவடு, செப்டம்பர் 2001) & வற்றும் ஏறியின் மீன்கள் (காலச்சுவடு, டிசம்பர் 2007) சிறுகதை தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

ஒருவர் மற்றொருவர்.

சமூகமிடமிருந்து தனித்து வாழும் ஆண் இணையரின் கதை. இந்த இணையரில் ஒருவர் மேத்யு நாதன். இந்திய தந்தையும் வெளிநாட்டு தாயாரையும் உடையவர், ஓவியர். மற்றொருவர் அருளன். எழுத்திலும் இசையிலும் ஈடுபாடுள்ளவர். ஒரு பார்ட்டியில், மெத்யு தனது வேர்களைத் தேடி வந்திருப்பதாகவும், பெண்களில் நாட்டமில்லை எனவும் கூறுகிறார். மேத்யுவை விசித்திர ஜந்துவாக பிறர் பார்க்க அருளன் மெத்யுவிடம் பேச்சுக் கொடுக்கிறார். ஒரு கலைஞனை மற்றொரு கலைஞன் கண்டுக்கொள்கிறான். பறவையைப் போல் சாக வேண்டும் என விருப்பப்படுவதாக மெத்யு சொல்கிறார். இவர்கள் இருவரும் நாற்பதாண்டுகாலம் போக்குவரத்து வசதியில்லாத மலை கிராமத்தில் வாழ்கின்றனர். அதற்கிடையில் அங்கு வேலை செய்யும் சிறுவர்களுக்கு ஓவியமும் எழுத்தும் சொல்லித் தருகின்றனர். அதில் முக்கியமானவன் வீரு. கவணிப்பின்றி கேட்பார்றற்று இறக்க விரும்பிய மெத்யு, இப்பொழுது அதை விரும்பவில்லை. மெத்யுவின் வேண்டுதலுக்கினங்க தேவதாரு மரத்தினடியில் அவரை புதைத்து, வழக்கத்துக்கு மாறான ஒரு இடத்தில் பேருந்திலிருந்து இறங்குகிறார் அருளன். மலைவிளிம்பிலிருந்து குதித்து பாறையில் மோதும் அருளனின் வெள்ளை வேட்டி முரட்டு தூரிகையால் சிவப்பேறுவதை சாட்சியாக பார்த்தபடி வீரு நிற்கிறான். இந்த இணையருக்கு இல்லாத குழந்தையாக வளர்ந்த வீருவின் நிர்வாண படமொன்று அவர்களின் வீட்டில் தொங்கிக்கொண்டிருந்தது.

அம்பை இந்த கதையின் காலம் இரண்டாம் போருக்கடுத்து என்கிறார். மெல்ல சமூக கட்டுகள் உடைபட்டு, தனி மனித உரிமைகள் பேசப்பட்ட காலம். மெத்யுவும் அருளனும் தனிமனித உணர்வு தேவைகளைத் தேடுபவர்களாக உள்ளனர். இதற்காகவே சமூதாயத்திடமிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டு செல்லவும் தயங்காதவர்கள். ஒருவரை மற்றொருவர் நிரப்புவதாக உணரும் இருவரின் கதை. ஓரின சேர்க்கை அம்பை எழுதிய காலத்தில் கலாச்சார அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கலாம். எங்கள் தலைமுறையினருக்கு இது படு சாதாரணமான விசயம். ஒருவர் மற்றொருவர் ஒரு ‘feel good’ வாசிப்பைத் தந்தது.

மல்லுக்கட்டு

சென்பகம் ஐந்து வயதிருக்கும்போது அவளது தாய் சண்முகத்தின் தந்தையாரிடம் (ஐயா) சங்கிதம் பயில அனுப்புகிறார். சென்பகம் பின் அங்கேயே வளர்ந்து சண்முகத்தை மணக்கிறாள். இசை வேளாளர் பரம்பரையின் வாரிசான சண்முகம் பின்னாளில் தகப்பனுக்கேற்ற பிள்ளையாக இசை வித்வானாக பார்க்கப்படுகிறார். சென்பகம் அவரின் மனைவியாக; கேட்ட நேரத்தில் மிளகு ரசமும், கற்கண்டு பாலும் எடுத்து வரும் துணைவியராக உள்ளார். இருவரும் ஒருசேர மேடையில் அதிசயமாக பாட கதை முடிவடைகிறது.  

செண்பக-சண்முக இணையரின் உறவில் எழும் கலைச்சிக்கலும் உறவுச்சிக்கலும் இந்தக் கதையில் முக்கியமாக பார்க்கலாம் என்பது எனது வாசிப்பு. பிறப்பால் கிடைப்பதா அல்லது பயிற்சியால் கிடைப்பதா எனும் கேள்வி இந்த சிறுகதையில் உள்ளது. சண்முகத்தைவிட பயிற்சியால் ஒரு படி மேல் இருக்கும் செண்பகத்தை வெல்ல சண்முகம் அசுர பயிற்சி எடுக்கிறான். அதன்பின், கலையில் வாய்ப்பாட்டு ஒழுங்கா மனோதர்மமா என மீண்டும் இவர்களுள் ஒரு போட்டி. செண்பகம் அனைத்தையும் மீறி வெல்ல, அவள் வயதடைகிறாள். பெண் பார்க்கும் படலம் வரும்போது, வாஞ்சையுடன் உரிமையுடன் நீ என்னைதான் கட்டனும்என சண்முகம் சொல்ல, பால்ய போட்டியாளி துணைவியாக மாறுகிறாள். செண்பகத்திற்கும் அதில் பிரியம்தான்.  

அப்பாவின் காலத்துக்குப்பின் சண்முகத்துக்கு சிஷ்யப்பிள்ளையரும் கச்சேரிகளும் பொன்னாடைகளும் வந்து சேருகின்றது. செண்பகம் ஒவ்வொரு முறை பதார்த்தம் வழங்கும் போதும் சண்முகம் சிஷ்யர்களுக்கு முன் ஒவ்வொரு முறையும் பதார்த்ததில் ஒரு குறை சொல்வார். அதை அவள் மௌனமாக சிரித்து வாங்கிக்கொள்வாள். மாலையில், அன்று பாடியதில் எங்கு என்ன தவறியது எனக் கேட்டு அவளைப் பாட சொல்வார். அதை கேட்டு அவஷ்தைப்படுவது சண்முகத்தின் வாடிக்கை. இரவில், செண்பகத்திடம் கேட்டு கேட்டு அவளைத் திருப்திபடுத்துவது மற்றொரு வாடிக்கை.

சண்முகத்தால் செண்பகத்தை வெல்ல முடியாதென அவன் அறிந்தும் பகலில் அவன் நடத்தும் நாடகத்தை செண்பகம் அறிவாள். சண்முகம் அவளிடம் மல்லுக்கட்டுவதும், பின் அவளிடம் அடைக்கலமாவதும் பதிலுக்கு செண்பகம் அவனை ஏற்பதும்,அவள் சண்முகத்தை மௌனமாக புசித்து மல்லுக்கட்டுவதும், அதை அம்பை எழுத்தில் கொண்டுவந்ததுதான் இந்த சிறுகதையின் உச்சம் என நினைக்கிறேன்.

                                                                     by Raja Ravi Varma

கூட்டத்தில் துள்ளிய கன்றுக்குட்டி

அவள் (அவளுக்குப் பெயரில்லை), கதிர், உதயன் என்ற மூவரும் ஐம்படை இலக்கிய பேர்வழிகளில் அடங்குவர். இளவயதில் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்கள். இலக்கிய செயல்பாடுகளிலிந்து ஒவ்வொருவரும் மெல்ல விலக, கதிரும் அவளும் இருபத்து நான்கு வருடங்களுக்குப் பின் அமேரிக்காவில் சந்தித்துப் பேசிக்கொள்வர். அதில் முக்கியமான பேச்சு உதயனின் தற்கொலை. இதற்கிடையில், கதிருக்கும் அவளுக்கும் இருந்த உறவும், அவளுக்கும் உதயனுக்கும் இருந்த உறவும், உதயனின் கொதிப்பலைகளைக் கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் கோணத்தில் கதையில் உள்ளது.  

இந்த சிறுகதையை வாசிக்கும் போது ஈர்த்த வரி ‘நவரசங்களில் பீபத்ஸ ரசத்தின் நாயகன் அவன் என்று அவள் கேலி செய்ததுண்டு’. இந்த வரி உதயனுக்கானது. எப்போதும் வெறுப்புடன் இருப்பவன் எப்படியிருப்பான்? இலக்கியத்தில் உதயன் நக்கலான விமர்சனங்களைக் கொடுப்பவனாக உள்ளான். நிரந்தர வேலைகளில் ஈடுபாடில்லாதவன். சாயங்கால வேலை செய்தால், நட்சத்திரங்களைப் பார்க்க முடியாதென வேலையிலிருந்து விலகியவன். அவளுடன் பத்து வருடங்கள் சேர்ந்திருந்தவன். ஆனால், அதை கதிரிடம் சொல்ல வேண்டாமென கேட்டுக்கொண்டவன். அவளின் தம்பி முகுந்த் தனது காலத்துக்குப் பின் அவனது அக்காளுடன் (அவள்) இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட போது, தான் எந்த பொறுபையும் ஏற்க முடியாதவனென பயந்து அழுதவன். அந்த பீதியை அம்பை எட்வார்ட் மூங்கின் ஓவியத்தில் இருப்பவனின் பீதி என்கிறார். அனைத்திலும் வெறுப்புடைய உதயன் பயந்ததும் விரும்பியதும் மரணம் ஒன்றையே.

The Scream by Edvard Munch

கதிர் பகுத்தறிவாளன். கதிர்-அவளின் பித்தேறிய நடவடிக்கைகள் அவனின் வீட்டில் தெரிய வரவும், இரண்டு இடங்களில் வேலைமாற்றலாகி, ஸ்தெல்லாவைத் திருமணம் செய்துக்கொள்கிறான். உதயனின் மரணத்தால் தன்னிடமும் ஒன்று மரித்துவிட்டிருப்பதாக கூறுகிறான். இருபத்து நாங்கு வருடங்களுக்குப் பின் அவளின் தொடுகை கதிருக்கு தண்ணென்றிருந்தது.

இலக்கிய ஐவர் கூட்டத்தின் ஒரே பெண் அவள். அதனாலே, ஒர் ஜந்துவாக பார்க்கப்பட்டு, பின் இலக்கிய தோழியாக ஏற்க்கப்பட்டவள். எழுபதுகளில், இருத்தலியல் கோட்பாடு எப்படி ஒட்டுமொத்த தமிழ் இலக்கியமாக இருந்ததென கேலிக்கை செய்பவள். அவளும் கதிரும் இணைந்திருப்பது கதிரின் வீட்டிலிந்து கடும் எதிர்ப்பை அளிக்கிறது. அந்த சமயத்தில் ஒரு நீண்ட உணப்பூர்வமான கடிதத்தை எழுதுகிறாள். அந்த கடிதத்தைக் கதிர் தவிர அந்த தெருவில் இருந்த அனைத்து குடும்பமும் வாசிக்கிறது. அவளது தந்தை அலுவலகத்தில்  பெண்னைப் பற்றி பொதுவிடத்தில் தரக்குறைவாக ஒருத்தர் பேசி செல்கிறார். தந்தை வீடு வந்து அவளிடம் “ஏன்மா கதிருக்கு ஏதாவது லெட்டர் போட்டியாம்மா…இல்ல, கதிரோட உறவுக்காரர் எல்லார் எதிர்லயும் சத்தம் போட்டார்” என சொல்லிச் செல்கிறார். அவளின் தகப்பனார் அம்பை படைப்புலகின் சாயலில் திரும்ப திரும்ப வரும் ஒரு கற்பனாவாத தந்தை.

இந்த மூன்று கன்றுகுட்டிகளும் தாயிடமிருந்து பெறும் எச்சில் முத்தம் தரும் தண்ணென்ற உணர்ச்சியை அடையும் நிகழ்வுகளைக் கதையில் வாசிக்கலாம். நான் அறிந்து இந்த கதையில் சம்பவங்கள்தான் உள்ளன. எழுபதுகளில் இலக்கிய செயல்பாட்டில் ஈடுபாடுடன் இருந்தவர்கள் மெல்ல அவசரகாலகட்டத்தின்பின் இலக்கியத்திலிருந்து விலகி என்னவானர்கள் என்பதன் சம்பவங்களின் திரட்டாக அம்பை எழுதியுள்ளார். அனுபவமாக வாசிக்கலாம், இந்த சிறுகதையும் சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ சில குறிப்புகள் நாவலும் சம உணர்வை ஒத்த வாசிப்பனுபவத்தைத் தரவல்லது.

ஆயிரம் சொற்களும் ஒரு வாழ்க்கையும்

காமாட்சியின் மூன்றாவது குழந்தையின் பிரசவம் தான் இந்த சிறுகதையின் மையம். இந்த மூன்றாவது குழந்தை (நாயகி) திட்டமிடாதபடியால், அதை கலைப்பதிலிருந்து நாயகி வளர்ந்து ஒரு ஓவியராவதை ஒரு பேட்டியில் சொல்லப்படும் கதை. இதில் காமாட்சியின் பிரசவகாலம் தாயார் வீட்டிலும் கணவர் வீட்டிலும் உள்ள முரண்கள், சர்க்கார் மருத்துவமனைகளில் தாதியர்கள் அவலமாக நடந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள், ஊர்களில் பிரசவம் பார்க்கும் மருத்த்துவச்சிகளின் தொடுகைகளும் குணாதிசயங்கள் நிகழ்த்தும் அற்புதங்கள் சொல்லப்பட்டுள்ளது. இதில் பல பிரசவ கதைகள் அடங்கியுள்ளது. வம்சத்தில் இரட்டை பிள்ளைகள் இல்லையென ஒரு மாமி கூறி ஒரு அன்னையின் வயிறை கட்டியதால், இரண்டாவது குழந்தை கற்பை பையிலே இறந்து அதன் நஞ்சு தாயை மரித்த கதை, ஊர் மருத்தவச்சிக்கு அவள் கணவன் மலடி என அளிக்கும் பட்டமும், அவள் ஒரு நாள் பொங்கி “மலடு நீரா நானாங்காணும்?” என அனைவர்முன் சுடுசொல் சொல்ல, அதன்பின் அவள் கணவர் அவளிடம் பேசாமல்போகிறார். நாயகி பிறந்தபின், அவளைக் கருதாத அப்பாவும், அவ்வறான போக்கு எப்படி காமாட்சிக்கும் நடைமுறையாகிறதென்றும் கதையில் உள்ளது.

உண்மையில், இந்த கதை இன்றைய காலத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பது ஐயம்தான். இன்று, பெரிதளவில் பெண்பிள்ளைகளின் பிறப்பு கொண்டாடப்படுகிறது. பிரசவங்களைப் பேசும் பிற படைப்புகள் உள்ளதாவென நான் அறியேன். கண்டிப்பாக இருக்கும்தான். அவ்வகையில் அம்பை எழுதி சேகரித்தவை இவை.

இந்த சிறுகதைகள் வடிவம் சிக்கலானது. அம்பை இயற்றிய முக்கிய பணிகளில் ஒன்று பெண் இசை, நடண கலைஞர்களைப் பேட்டி கண்டு Singer and the Song, Mirrors and Gestures எனும் இரு தொகுதிகளை வெளியிட்டது. அந்த தொகுதிக்காக எடுத்த முயற்சியின் நேரடி தாக்கத்திலிருந்து எழுதிய சிறுகதையாக இது இருக்கலாம். வடிவ ஒழுங்கு ஒரு நேர்த்தியான வாசிப்பை எப்படி அளிக்கும் அல்லது சிதறடிக்கும் என அறிந்தேன்.

கைலாசம்

சிவம் ஒரு ஆராய்ச்சியாளர். அதே கல்லுரியில் இளங்கலை பயில்பவள் கமலம். சிவம் கமலத்தின் உடம்பில் பெரும் ஈர்ப்புடையவனாக உள்ளான். அதை நேரடியாக கமலத்திடம் சொல்கிறான். கமலம் மறுக்கிறாள். கல்லூரி விடுமுறைக்குப்பின் சிவம் அவனது தூரத்து உறவாகிய தேன்மொழியை மணக்கிறான். ஒரு வருடத்துக்குள்ளேயே சிவம் தேன்மொழியை அவனாகவே மற்றொருவரை மறுமணம் செய்துக் கொள்ள சொல்கிறான். தேன்மொழி மறுமணம் செய்துக்கொள்கிறாள். சிவம் அதன்பின் மணம் புரியவில்லை. தேன்மொழி சிவத்தை பாலுணர்ச்சியில்லாத பொம்பை என விவரிக்கிறாள். சிவம் தனது இறுதி நாட்களில், ஒரு குளிர்ந்த தினத்தன்று ஏரியில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறான். அவனது டையரியின் மேல் ஒரு காகிதத்தில் கமலத்தின் முகவரியிருக்க டைரியைச் சிவத்தின் மரணத்துக்குப்பின் தேன்மொழி கமலத்திடம் ஒப்படைகிறாள்.

சிறுகதையில் பதின்ம வயதுக்குரிய எதிர்பாலினரின் உடலில் உள்ள மர்மங்களை அறிய முயலும் ஆண் பெண் கதை உள்ளது. வேறு பெண்களிடமிருந்து கமலத்தை விலக்கிக்காட்டுவது அவளது கூந்தல். பச்சை புடவையில் அவளை சிறு குன்றாகவும், கூந்தல்; காட்டாறாகவும் டைரியில் வர்ணிக்கிறான். அவளுக்கு பூ வாங்கி தருகிறான். அவனது விருப்பத்தைச் சொல்லும்போது கமலம் மறுக்க அந்த நோடியில் உறைந்து போகும் சிவம் அதன்பின் கரையவேயில்லை.

இதை இருபத்தைந்து வருடம் கழித்து அறிந்த கமலம் உடல் எப்படி ஒரு அழுக்காக, சுமையாக, குரிசாக அச்சமூட்டி வைத்திருந்த காலத்தில் அவளுக்கே பெண்ணுடல் என்னவென்று அறியாத காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் சிவம் உறைந்து போயிருந்தான். ஆணுடல் பெண்ணுடல் பற்றிய விசாரனையாக பதின்ம வயதில் நிகழும் ஈர்பை வெல்லும் கமலத்தின் பயணமும் அதில் அமிழ்ந்து உறைந்து போகும் சிவத்தின்  பயணமும் ஒவ்வொரு படிநிலையுடன் அம்பை எழுதியுள்ளார். சிவத்திற்கு கமலம் கைலாசம் என தோழிகளுடன் சேர்ந்து பெயரிட்டிருப்பாள்; தூய உறை பனி குளிர்.

***

நன்றி சொல்வனம், அம்பை 200

Dear Ambai, Thanks for Writing. We love you.


Comments