வேங்கை வனம் - எம். கோபாலகிருஷ்ணன்
வாசிப்பனுபவம்
வேங்கைவனம் நாவல் எம். கோபாலகிருஷ்ணன் எழுதி 2022ல் வெளிவந்துள்ளது.
வேங்கைவனம் நாவலில் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பாகம், வேட்டை காடு இரண்டாவது
அணிநிழற்காடு. 2017ல் எம்.கோபாலகிருஷ்ணன் ராஜஸ்தானில் இருக்கும் ரந்தம்பூர் வனத்துக்கு
செல்லவும் அங்கு பரவலாக அறியப்பட்ட மச்லி எனும் பெண் புலியை அறிந்துள்ளார். மச்லிக்கு
இருக்கும் உலகலாவிய கவணிப்பும் அன்பும் ஆசிரியரை ஒரு எண்பது பக்க குறுநாவலை எழுத வைக்க
செய்துள்ளது. இருந்தும், ரந்தம்புரின் வரலாற்றை மொத்தமாக சொல்ல அந்த
குறுநாவலின் கால விரிவுதான் வேங்கை வனம்.
வேங்கை வனத்தில் இருக்கும் வனம்தான் முதற்பகுதி; வேட்டை காடு. முதற்பகுதியில் மூன்று விசயங்களைக் கவணிக்கலாம். முதலாவது, ஒர் அரசு மற்றொரு அரசைக் கவிழ்த்தும் வாடிக்கை. முதற்பகுதியில், ஹமீரா சௌகான் கோட்டை கட்ட பழங்குடியினரை விரட்டுவதிலிருந்து, அக்கோட்டையை முற்றுகையிட கில்ஜியும், அவனுக்கடுத்து அக்பர், ஜாஹங்கீர், ஷாஜஹான் மன்னர் காலத்துக்கடுத்து முதலாம் உலகப் போருக்கு பின் புலி வேட்டையாட வரும் ஸ்கோட்லாந்து யதும் சாராவும் யூதனான டேவிட்டும், இவர்களுக்கடுத்து பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலம் வரை எழுதியுள்ளார்.
இந்த வனம் எவரெவரால் கையாளப்பட்டுள்ளது, அவர்களின் காலத்துகேற்ற
அரசியல் சிக்கல்களும் அக சிக்கல்களையும் கால வரிசையின்படி ஆசிரியர் எழுதியுள்ளார்.
இங்கு இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்க செய்வது அவர்கள் மேற்கொள்ளும் புலிவேட்டை. பழங்குடியினர்
தொட்டு அரசு வரை புலிகள் தேவைகளுக்காக, போர் ஒத்திகைக்காக, விளையாட்டிற்காக, பின் மாளிகை
சுவரின் நினைவு பொருளுக்காக வேட்டையாடப் படுகிறது.
இரண்டாவது, வேட்டைகள். வனத்திற்கு வரும் ஒவ்வொருவரும் புலி
வேட்டைதான் செய்கிறனர். ஆனால், ஒவ்வொரு வேட்டையையும் வெவ்வேறாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
இது ஒரு முக்கியம்சம். சௌகான் காலத்தில் வேல், அம்புகளை பாய்ச்சி புலிவேட்டையாடப்பட்டது.
யதும் சாரா எனும் பெண் பிஸ்டோலைக் கொண்டு புலியின் நடு மண்டையில் சுடுவதும் மன்னர்கள்
புலிகுட்டிகளை சிறை பிடித்து தாய் புலியை வரவைப்பதும், எருமையை பலியாக கட்டி வைத்து
புலி பிடிப்பதும், ஒரு புலியை நாற்பது பேர் விரட்டவும் அதை யானை மேல் அமர்ந்திருப்பவர்
இலகுவாக சுடும் சாகச காட்சிகளும் வர்ணனையாக உள்ளது. அப்பொழுது அவர்களுக்கு உதவும்
துணை வருவோர்கள், யானை பாகன்கள், புலி தோல் உரிப்பவர்கள், மன்னர் பரம்பரைக்கு சுமை
தூக்கி வரும் நாற்பது அறுபது பேர்களின் முழு காட்சியும் அதில் அடங்கும்.
மூன்றாவது, அன்னையாக இருப்பவர்களின் வேட்டை பிரியத்தை எழுதியுள்ளார்
ஆசிரியர். அன்னை எப்படி வேட்டைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் எனும் கேள்வி
இங்கு எழுகிறது, வேட்டையில் எது அவளை ஈர்க்கச்செய்தது எனும் கேள்வியை முதற்பகுதியில்
அலசி பார்க்கலாம்.
கதையில் வரும் மார்த்தா எனும் மார்கரெத்தா ஹென்ஸ்மென். இவளுடன்
மிச்செல் ஸ்மிதும் வனத்துறை வழிகாட்டியாக ஜொயெலும் ரந்தன்பூருக்கு 1901ல் வருகின்றனர்.
மிச்செல் ஒரு பரம்பரை வேட்டைக்காரனுக்குரிய செருக்குடன் காணப்படுகிறான். மார்த்தா அவனது
பிரியத்துக்குரியவள். ஜொயெல் ஒரு வழிகாட்டி என்பதால், அமைதியாக அதிகம் பேசக்கூடாதவனாக
வருகிறான். தொடர்ந்து புலிகளை வேட்டையாடி செருக்கு குறையாத மிச்செலின் பேச்சை மறுத்துப்
பேசுகிறாள் மார்த்தா. அமெரிக்க அரசுக்கு செவ் இந்தியர்கள் கட்டுப்படாதவர்களாகவே
இருந்தனர். இந்த பழங்குடியினர் தங்களுக்கு உடையதை தானே வேட்டையாடி, அரசு வகித்த எல்லைக்குள்
உட்படாதவர்களாய் சுதந்திரமாக இருந்ததாகவும். அதை அரசு ஏற்க மறுத்து செவிந்தியர்கள் வேட்டையாடி
உண்டு வாழ்ந்த பைசன்களை திட்டமிட்டு இனவழிப்பு செய்ததையும் சுட்டிகாட்டுகிறாள். மிச்செலும்
அவனது மூதாதையர்களும் ஒரு நூற்றாண்டாக பைசன்களை வேட்டையாடி அவை அழிந்துபோனதாகவும்,
அதனால் சிவப்பு இந்தியர்கள் மலிந்து குறைந்து அரசிடம் தாழ்த்தப்பட்ட உண்மையையும் எடுத்துரைக்கிறாள்.
இருந்தும், மிச்செலை ஒரு ‘alpha male’ ஆக பார்த்ததால், அவனை பிரிய அவளால் முடியவில்லை.
ஒரு புலிவேட்டையில், மிச்செல் படுகாயம் அடைந்து மருத்துவம் செய்யப்படவும், ஜொயெலுடன்
மார்த்தா வனத்திலிருந்து புறப்படுகிறாள்.
மற்றொரு அன்னை யதும் சாரா. ஒரு ஸ்கோட்லாந்து பெண்மணி. அவள் நாடற்று திரிந்துக் கொண்டிருந்த டேவிட் எனும் யூதனை வழித்துணையாக அழைத்து
வருகிறாள்; கணவனென பிறரிடம் அறிமுகம் செய்கிறாள்; உடன் வைத்திருக்கிறாள். ஐரோப்பாவில் நிகழ்ந்த
அறுபது லட்ச யூதர்களின் ஒழிப்பில் டேவிட்டின்
குடும்பமும் அடங்கும். முதல் நாள் வேட்டையில் யானை மீது அமர்ந்திருந்த சாராவை கீழே
இழுக்க புலி பாயவும் சாரா தனது பிஸ்டோலை புலியின் வாயில் குறிபார்த்து சுட ஆரம்பிக்கும்போது
புலி பிஸ்டோலைக் கடித்துவிடும். அவளால் சுட முடியாத அப்த வேளையில் டேவிட் புலியைச்
சுட்டு சாராவைக் காப்பாற்றுவான். சாரா ஒரு நாள் முழுக்க உடல் தேற வலிமையிழந்து படுக்கையில் மருந்துண்டு
கிடப்பாள். மறு நாள், டேவிட் தன்னை மணப்பாயா என சாராவிடம் கேட்பான். சாரா அதற்கு அனலாய்
எழுந்து யூதர்களே இப்படிதான் சரியான நேரம் பார்த்து திட்டமிட்டு கவிழ்ப்பார்கள் என
கத்துவாள். அவன் பெயரைக் கொண்டே விவிலியத்தில் வரும் டேவிட் கோலியாத்தைத் திட்டமிட்டு
கொன்று அவனது அழகான மனைவியையும் அபகரித்துக் கொண்டதாக ஒட்டு மொத்த யூதர்களை சகுணம்
பார்த்து கவிழ்ப்பதில் வல்லவர்களென பரிகாசம் செய்வாள். டேவிட் தன்னை ஒட்டுமொத்தமாக
நிராகரிக்கப்பட்டவனாக உணர்கிறான். சாராவும் உலகமும் தன்னை வேட்டையாடுகின்றனர் என தாழ்ந்து
போகிறான். அடுத்த நாள் அவன் சாரவுடன் வேட்டைக்குச் செல்லவில்லை. சாரா மறுநாள் இரவு
அவனிடம் “சாரி டியர்” என மன்னிப்பு கேட்கிறாள்.
இவ்வளவு இருந்தும், அணிநிழற்காட்டின் மையம் மச்லி. மச்லி
எனும் புலியின் பிறப்பு முதல் இறப்பு (2016) வரையிலான சம்பவங்கள் அனுமதித்த புனைவுதான்
அணிநிழற்காடு.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண் (742)
அணிநிழற் காடென்பது ஒரு ஏரியில்
தனித்தனி குட்டி தீவுகளை இணைக்கும் நீர்பரப்பு.
அணிநிழற்காட்டில் அடர்ந்த காடுகள் இல்லை. இது ஒரு நாட்டின் அரணாக அமைவதனாலேயே கதையின்
ஆரம்பத்தில் சௌகான் தேடிச் சென்று கோட்டையைக் கட்டியுள்ளான். நீரும் மண்ணும் என சொல்லியிருக்கலாம்,
மணிநீர் சொல்ல வேண்டிய அவசியமென்ன? Crystal clear என்ற நீரென எடுத்துக்கொள்ளலாம், மலையில் இருக்கும் கோட்டைக்கு சுற்றிலும் நடப்பதை ஆடியைப் போல் எடுத்துக் காட்டும் மணிநீர்.
வேங்கை வனத்தின் இரண்டாம் பகுதி அணிநிழற்காட்டை முதற்பகுதி வேட்டை வனத்தின் பிரதிபலிப்பாக
வாசிக்கலாம்.
மச்லியின் தொடக்கமே அது தனது தாய்ப்புலி நூர்ஜஹானை விரட்டிவிடுவதுதான். இது விலங்கின் ஆதிகுணம்
என அறிகிறோம். ரந்தன்பூர் வனத்தில் தனது இருப்பிடத்தை நிலை நாட்ட மச்லி செய்யும் காரியமிது.
இங்கு, கிட்டதட்ட வேட்டை வனத்தில் வந்த அனைவரையுமே இங்கு பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்,
அதுவும் முக்கியமாக முகலாய காலத்தில், ஜஹங்கிர் மெஹரை மணமுடிக்க அக்பர் சம்மதிக்கவில்லை.
அதனால், ஜஹங்கிர் அக்பர் மீது படையெடுத்து வருகிறான். அதை அக்பரின் படை சாயங்கால நடைக்குச்
செல்வது போல முற்றுகையிட்டு வருகிறது. முன்னோரை விரட்டிவிடும் இக்குணம் விலங்கு
குணமாக வாசிக்க வாய்ப்புள்ளது.
மச்லியின் காலம் முடியும் போது, அவள் மகள் சுந்தரி தாயை விரட்டிவிட்டு
புதிய ராணியாகிறாள். இந்த சம்பவத்தை நேரடியாகவே, முதற்பகுதியில் நேரடியாகவே வைத்துள்ளார். ஷாஜஹானின் மனைவியருள் ஒருவர் அர்ஜுமான் (மும்தாஜ்). ஷாஜஹானுக்கு மற்றுமொரு
திருமணம் முடிக்க வேண்டுமென்பது மெஹரின் ஆசை. ஆனால், அர்ஜுமான் அதை சம்மதிக்கவில்லை.
இதனால், மெஹர் ஷாஜஹானை அடுத்த பாதுஷாவாக ஆகாமல் இருக்க சில காய்களை நகர்த்துகிறார்.
மேற்கொண்டு என்ன நடக்கும் என ஷாஜஹான் அர்ஜுமானிடம் வினவ, ஷாஜஹானுக்கு நடக்கவிருந்த
திருமணத்திற்கு தான் ஒப்புதல் தராததே அர்ஜுமான் தனது எல்லையை கட்ட ஆரம்பத்திருக்கும்
ஒரு யுக்தி என்கிறாள். மெஹர் புலிகளின் ராணி
என்றால் தானும் ஒரு குட்டிப்புலி என்கிறாள். இறுதியில் என்ன நடக்கும் என ஷாஜஹான் கேட்க,
இறுதியில் மெஹர் தனக்கு விட்டுகொடுத்துவிடுவாள் என சொல்கிறாள் அர்ஜுமான். அர்ஜுமான் மெஹரின் அண்ணன் மகள் ஆனதால், இப்படியாகதான் நிகழ வேண்டும் என்கிறாள். தன்னுடைய எல்லையைச்
சிறுநீர் கழித்து தெரிவிக்கும் எளிய விலங்கியல் செயல்தான் இது. ஆகவேதான், முதற்பகுதியில்
இருக்கும் பல சித்தரிப்புகளை இரண்டாம் பாகத்துடன் பிரதிபலிப்பதாய் வாசிக்கலாம்.
இந்த நாவலின் முக்கிய சாராம்சமென்பது மனிதன் எத்தனை பகுத்தறிவாளனாகவே இருந்தாலும், அவனது விலங்கு குணம் தென்படுவதில்லாமல் இல்லை. இதற்கான முழுமுதல் உதாரணம் ஜஹாங்கிர். அவன் மெஹரை தனது இருபதாம் வயதில் பார்க்கிறான். மெஹர் அவனை போர் திறன், ஓவியம், அழகு, குதிரை யோட்டம் என அனைத்தாலும் அவனது அகந்தையை வெல்கிறாள். இதுவே, அவன் மெஹரின் மீது பித்துபிடித்தலைபவனாக மாற்றுகிறது. மெஹர் ஒரு தேவதையெனில் அவளை பிடிக்க விழையும் ஜின் இவன் என அர்ஜுமான் சொல்கிறாள். அக்பர் காலத்துக்குப் பின், மெஹரை மணக்க விரும்புகிறான் அவளை அவன் அடைய கதையில் வரும் காரியமெல்லாம் செய்பவனானவனின் விலங்கு தன்மை புலப்படுகிறது. மனிதன் என்ன கலை, தத்துவம், அறிவியல் என முக மூடிகளை போட்டுக்கொண்டாலும், விலங்கு குணம் எட்டிப்பார்க்காமல் போவதில்லை.
விமர்சனம்
மேற்கூறிய வாசிப்பு ஒட்டுமொத்த நாவலை தொகுக்க வசதிபடுகிறது.
ஆனால், வலிந்து பொருள் கொள்ள கூடிய ஒன்றாக அமையலாம். ஏனெனில், இரு பகுதிகளும் வெவ்வேறான
genre என்று சொல்லும் வகையில் மாறுபட்டது, தொடர்பில்லாதது. முதற்பகுதியான வேட்டை வனம்
வரலாற்று புனைவு. இதில் மையமில்லாத கதைகளும் கதாபாத்திரங்களும் சலீப்பூட்டும்படியான
அதீத தகவல்கள் உள்ளன. இவர்கடுத்து இவர் எனும் வகையில் ஒரேமாதிரியான சுழற் கதைகள் போல
இருந்தன.
இரண்டாம் பகுதியான அணிநிழற்காடு மொத்தமும் சூழியல் கதையாக
மாறுகிறது (இருப்பினும் ஒரு புலியை ஆளுமையாக கொண்டு வந்ததால், வரலாற்று புனைவிற்கும்
இடமுள்ளது). வேட்டை வனமும் அணிநிழற்காடும் தொடர்பற்று வாசிப்பனுபவத்தை குலைக்க செய்கிறது.
வாசகன் அவனாகவே அவனுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து இரு பகுதியையும் தொடர்புபடுத்தலாம்.
இல்லையெனில் இரு வேறு அனுபவங்களாக எடுத்துக் கொள்ளலாம். தடையற்ற வாசிப்பனுபவம் வேண்டுபவற்களுக்கான
நாவல் இதுவல்ல.
நிஜத்தில் முக்கிய காதாபாத்திரம் பகதூர் சிங். இவர் புலிகளை அரசிடமிருந்தும் ஊழலிடமிருந்தும் காப்பாற்றியவர். மற்ற அதீத தகவல்களைப் போலவே பகதூர் சிங்கின் தகவலும் சிதறி அமைந்தது.
வேங்கை வனத்தின் வெற்றிகள் என உண்டு. பதாம் தலா ஏரி, மச்லியின்
முழு வாழ்க்கையை, ரந்தன்பூரின் மொத்த வரலாறு, கணேஷ், காளி கோவில்களை படிக்கவும் அங்கு
செல்ல வேண்டுமென்ற அவாதான் நாவலின் வெற்றி.
சொல்லாழி குழும கலந்துரையாடல்
சிங்கப்பூர்
28/07/2024










விரிவான வாசிப்பனுபவத்துக்கும் விமர்சனத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteWelcome 😊
Delete