வாசிப்பனுபவம்: தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி

Forever Young by Greg Dywer

தக்கைதான் குறிகோள். தக்கையின் மீது இரு தலைமுறை பிரதிநிதிகளின் பார்வையும் செயலும் ஆராயும் கதை இது.

கதையிலிருப்பது இரு முக்கிய கதாபாத்திரம். தாத்தாவான மாணிக்கம். பேரப்பிள்ளையான ராமு. இவர்களுடன் பாட்டியும், ராமுவின் மறைந்த அம்மாவும் உள்ளனர்.

மாணிக்கம் வெற்றிலை இடிக்க சொல்லித்தருவதும் அதை ராமு பொருட்படுத்தாது இடித்து கையில் கொப்புளங்களை விளைவித்துக் கொள்வதில் கதை ஆரம்பமாகிறது. இங்கு, ராமுவை விவரிக்கையில் “அவனுக்கொரு தனிக்குணம் முறித்துக்கொண்டு போவது” என கந்தசாமி எழுதியிருப்பார்.

இந்த முறித்துக்கொண்டு அல்லது மீறிக்கொண்டு போகும் ராமுவை கதையில் அடிக்கடி பார்க்கலாம். மாணிக்கம் தெற்குத் துறைக்கு மீன் பிடிக்க சென்றால், ராமு கிழக்கே தனது அதிர்ஷ்டத்தைத் தேடிச் செல்வான். ஓரிடத்தில் மீன் பிடிக்கும் தாத்தவைப் போலன்றி இடம் மாறி மாறி மீன் பிடிக்கச் செல்லும் ராமு.

ராமுவுக்கு எப்படி பார்த்தாலும் மாணிக்கம்தான் அவனது முதல் குரு. ஆனால், ராமுவுக்கு தாத்தாவிடம் முழு ஏற்புள்ளதா எனும் கோணத்தில் கதையை வாசிக்கலாம்.

முதல் மயிலை அவன் கைக்குச் சிக்கும்போது தாத்தா என்ன செய்வார் என தன்னுள் நினைத்துக்கொள்கிறான். “மீசையை ஒரு விரலால் தள்ளி விட்டு கொள்வார். முகம் மலரும். புன்சிரிப்பு வெளிப்படும்…”. சில இடங்களில் மாணிக்கத்திடம் ராமுவின் அப்பிப்பிராயம் கொடுக்கும் அதட்டல் தோரனையும் வெளிப்படுகிறது. “கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா. கயிறு அறுந்து மாணிக்க சறுக்கி விழுந்து கணுக்காலில் இரத்தம் வரவும், ராமு “மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா செத்த பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா” என்கிறான்.

இப்படி ராமு மாணிக்கத்திடமிருந்து விலகுகையில் மாணிக்கம் எவ்வாறாக உணருகிறார்? ராமு மாணிக்கத்தின் செயல்களையும் சிந்தனைகளையும் நிராகரித்து வருகையில் பேரனுக்குள் இருக்கும் நான் என்னாவாக ஆகிறேன் எனும் மனத்தடுமாற்றம் கதையில் பிறகு தென்படுகிறது.

வாளை மீனொன்று மாணிக்கத்திடம் அகப்படாமல் நழுவிச் சென்றுகொண்டிருக்கையில், ராமு அதை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது மாணிக்கம், “அத உன்னாலையும் பிடிக்க முடியாது உங்கொப்பனாலும் பிடிக்க முடியாது” என்கிறார். ராமுவிற்கு இது உவப்பானதாக இல்லை.

ராமு மாணிக்கத்திடமிருந்து விலக விலக, அதே அளவுக்கு மாணிக்கம் மூர்க்கமாகிறார். அவரது உச்சம் ஒரு வாளை மீனைப் பிடிப்பதில் வெளிப்படுகிறது. வாளை கிடைக்காத வெறியில் வாளைக்கு இரையாக கொக்கியில் சொறுகிய கெண்டையை சுழற்றி சுழற்றி தண்ணீரில் அடிக்கவும் மீன் பஞ்சு பஞ்சாக சிதறுகிறது. இதேயளவு மூர்க்கத்தனம் ராமுவிடத்தில் காட்டும்போது, பாட்டி ராமுவின் காவலாக வருகிறார். வந்து, மறைந்த தன் மகளின் புகழை ஒப்பாரியாக பாடுகிறார். மகளின் மறைவுக்குப் பின் இரு ஆண்டுகளுக்கு மாணிக்கத்தின் இயல்பாகிய சச்சரவு அன்று மீண்டும் தொடங்குகிறது. மாணிக்கத்திற்கு தன்னுடைய மகளுமில்லாமல் தன்னிடமிருந்து பேரனும் விலகுவதை சகிக்கயிலாமல், மாணிக்கத்தின் துயர், எரிச்சலாகி, மூர்க்கமாகிறது. இதையே பரண்மீது இரு வருடத்திற்கு முன் ஒழித்த தூண்டிலை மீண்டும் ஆயுதமாக எடுக்கும் நிகழ்வு சொல்ல வருகிறது எனவும் வாசிக்கலாம்.

“ஒண்ணு நான், இல்ல அது (வாளை)…மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும் அடுத்து ராமு மீதும் விழுந்தது”.

மாணிக்கத்தால் இறுதி வரை வாளையைப் பிடிக்கமுடியவில்லை. அன்றிரவு அந்த வாளை மீது அவர் அமர்ந்திருப்பது போலவும், மீன் அவரை பாதாளத்திற்கு அழைத்து போலவும் துர் சொப்பனம் காண்கிறார். இது மாணிக்கம் வீழ்ந்ததின் குறியீடு போல் உள்ளது.

மாணிக்கத்தால் முடியாததை, ராமு செய்து காட்டுகிறான். அவன் தோளை தொட்டது அவன் ஆளாகிவிட்டான் என்பதை மாணிக்கம் அங்கீகரிக்கும் செயல். அவன் காதை பிடித்து திருக சென்றது மாணிக்கம் “என் வழியாக நீ, என்னிலிருந்து நீ” என அவனை அனைத்துக்கொள்வது. ஆனால், ராமு அதை அறிந்திருக்கவில்லை.

 

சுக்கிரி குழும கலந்துரையாடல்,

22.06.2024

Comments