வாட்கண் வாலழகன் ஆதி
நண்பர்கள் ஆதியைப் பார்த்து “பரி, ஆதி eyeliner போட்டுருக்கு” என்பர். அதன் விழிகளின் ஓரங்களில் மை எழுதி, இரு மைக்கோடுகளும் கண்ணின் நுனியில் சங்கமிக்க இழுத்துவிட்டது போல இருக்கும். ஆதியின் பிறப்பிலிருந்தே அதன் கண்கள் அப்படிதான். நான் மேல்மாடி சென்றால், என் பின்னாடியே அதற்கு வரவேண்டும். வராதே என்றால், கீழே தரையில் பல்லி போல படுத்து நான் படியின் மீது ஏறிச்செல்வதை உரனுஸ், uranus போல தலை சாய்த்து பார்க்கும். அப்போது வலது காது மடங்கியும் மறு காது நிமிர்ந்துமிருக்கும். அதன் ஏக்கத்தை படிபிடி கம்பிகளின் இடையிடையே பார்த்து வென்று முன்னேறுவதே ஒரு தியாகம்தான்.
ஆதி ஒரு சுவைஞன். கல்யாண நிகழ்வுகளுக்கு சென்று வந்தால், கையோடு லட்டு கொண்டு வந்துள்ளோமா என்று அலசும். ஆதி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் வீட்டிலுள்ளவர்களின் தாடை அசைந்தால் மூக்கு வேர்த்து எழுந்து பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொள்ளும். ஒருமுறை சாப்பிட்டு முடிந்தவுடன் தித்திப்புகாக ஒரு லட்டை எடுத்தேன். நான் லட்டை வாயில் போடுவதைப் பார்த்து என்னையும் என் வாயையும் கைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது. சரி சாப்பிடு என ஒரு குட்டி லட்டை தரையில் இட்டேன்.
அதை ஆதி மீதமிருக்கும் மூன்றரை முன்பல்லைக் கொண்டு மென்மையாக கவ்வி சமையலறையுள் சென்றது. ஆதி ஒர் ஆங்கிலேய கணவான். அவரது fine diningக்கு ஒர் அளவே இல்லை. வீட்டில் இருப்பதிலேயே விலை உயர்ந்த மென்மையான கம்பளியில் படுத்து உண்ணும். சமையலறையில் நின்று பல மணி நேரங்களைக் கோரும் வேலையுள்ளதால், ஒரு உயர் தர கால் மெதியை வாங்கியுள்ளோம். லட்டை எடுத்துக் கொண்டு அதன் மேல் ஆதி படுத்துக் கொண்டது. வாயிலிருந்த லட்டை கீழே துப்பிவிட்டு முதலில் நக்கியது. வாயிலிருந்த லட்டு சேதாரமில்லாமல் விழுந்தது. பிறகு அதன் மூக்கால் லட்டை உருட்டி முன் தள்ளியது. பின், கழுத்தை நீட்டி மூக்கால் மீண்டும் லட்டை தன்னிடம் இழுத்தது. அதற்குள் மூக்கை மூன்று தடவை நக்கிவிட்டாச்சு. இப்பொழுது வாயில் லட்டை போட்டு அழுத்தி மூன்று துண்டுகளாக உடைத்து உதிர்த்து கீழே விட்டது. அதன் பின், ஒவ்வொரு துண்டையும் நுனி நாக்கில் வைத்து மோவாயில் அழுத்தி அதன் பின் மென்று திண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவையனைத்தும் செய்தது கோழியின் தொடை எலும்பை பத்துவினாடிக்குள் காலி செய்பவன்.
ஆதிக்கு இருமுறை உணவிடப்படும் (இடையிடையே அவரே கேட்டு வாங்கி கொள்பதை தவிர்த்தால்). உணவிடும்போது, ஆதியை அழைக்க “ஆதி…!! மம்மம்” எனக் கூச்சலிடுவேன். அப்போது, பிற பிராணிகளைப் போல வலது இடமாக அல்லாமல் வாலை எட்டாக ஆட்டும். ஆதி ஓடிக்கொண்டே வாலால் எட்டு போடும் அழகை நீங்கள் ஒருமுறை காண வேண்டும்.
ஆதியின் வீரப்பராக்கிரமங்க்களையும் சொல்ல வேண்டும். “எவ்வளவு
அடிச்சாலும் தாங்கும்” வகையறாதான் ஆதி. ஒர் அதிகாலையில் பின் கால்களால் உடலை தாங்கி நின்று, இரு முன்னங்கால்களால் மெத்தையில் வைத்து, என் கால்களை
அதன் தலையால் முட்டி அழுந்து ஆர்ப்பாட்டம் செய்து எழுப்பியது. இத்தனை அதிகாலையில் எழுப்புதே
என எரிச்சலுடன் எழுந்தேன். அப்போதுதான் ஆதியின் வலது கண்ணின் கீழிமை கிழிந்து கிடப்பதைப்
பார்த்தேன். ஆதியின் ‘ஏரியாவில்’ புது நாய்க்கூட்டம் ஒன்று சில தினங்களாக ஆதியிடம்
வம்பிழுத்துக் கொண்டிருந்தது. அந்த அதிகாலையில், அவை மொத்தமாக சேர்ந்து ஆதியை கவிழ்த்தன.
ஞமலி போர் சாஸ்திரத்தின் படி, விடிந்தவுடன்
போரிடுவது குற்றமாவதால் சார் வீடு திரும்பியிருக்கிறார். அப்பொழுதும் வன்மம் விடாமல்
என்னை அழைத்துக் கொண்டு சண்டையிடவே எழுப்பியது.
ஆதியின் மறத்திறங்களுள் மற்றொன்றும் உள்ளது. பூனைகளிடம் வம்பிழுப்பது.
தெருக்களில் பூனைகளைப் பார்த்தால் குரைத்து வம்பிழுப்பான். (ஆதியுடன் நடை துணை சென்றால் மட்டும்!) பூனைகள் பதிலுக்கு
முதுகை அதிபரவளைவைப்போல (hyperbola) வளைத்தால், “பேசிக்கிட்டு இருக்கும் போது ஏன்ணே
சீருறிங்க” என திரும்பி பார்க்காமல் ஓடி வரும். ஆதியின் காதும் அழகானது. பலுப்பு நிற
உரோம உடலில் காதுகள் மட்டும் கருப்பு மென் மயிர்களாலானது. அதையும் ஒரு போர் களேபரத்தில்
கடி வாங்கி காது மடங்கி வந்தான். ஒரு நாள் பிடரியில் மட்டும் சொட்டையாகி வந்தான். சமீப
காலங்களில் தான், ஆதி சண்டைக்கு செல்வதில்லை. இறுதியாக விழைத் திறம் தொழிலிருந்து விடைப்பெற்று
வந்தவர் அவரது சிகிச்சை செலவிழிருந்து என்னைக் காப்பாற்றியுள்ளார் ஸ்ரீமத் ஆதி பகவான்
அவர்கள்.
ஒருமுறை ஆதியுடன் தரையில் அமர்ந்து அதை கொஞ்சிக்கொண்டிருந்தேன்.
அப்போது என் ஜிமிக்கியை கழற்றி ஆதியின் கண்ணெதிரே, காதருகே ஆட்டி விளையாட்டு காட்டினேன்.
ஆதியும் கண்ணிமைக்காமல் பார்த்து அவ்வப்போது காதை விதர்த்தும் ஜிமிக்கியைப் பார்த்தது;
கேட்டது. பிறகு ஜிமிக்கியைத் தரையிலேயே போட்டுவிட்டு என் வேலையைப் பார்க்கச் சென்றேன்.
சிறு நேரம் கழித்து, ஆதி ஜிமிக்கியை வாயில் போட்டு தலையை ஆட்டிக்கொண்டிருந்தது. வாயில்
போட்டதை விழுங்கிவிடும் பிராயத்தை ஆதி கடந்துவிட்டிருந்ததால் , என்ன செய்கிறதென தொலைவிலிருந்து
கவணித்தேன். வாயிலிருந்த ஜிமிக்கியைத் தரையில் துப்பி முறைத்தது. இரத்த வாடை இல்லாததால்
சலிப்பு கொண்டது என நினைத்தேன். ஆனால், இல்லை. ஜிமிக்கியை மீண்டும் வாயில் போட்டு ஆட்டியது.
இந்த முறை ஜிமிக்கியிலிருந்து சத்தம் வந்தது. முதல் முறை ஆட்டியபோது, சத்தம் வரவில்லை.
இரண்டாம் முறை முயற்சித்து வெற்றி நிறைவுடன் அங்கேயே மல்லாக்க சாய்ந்து உறங்கிவிட்டது.
இந்த நிகழ்வு என்னை சில நாட்களுக்கு அலைகழிக்க செய்தது. அதற்கு
நுண்ணுனர்வுகள் தானாகவே பிறப்பிலிருந்தே இருக்கிறது. இவை எதையும் சோதனை செய்து அதற்கு
கற்றுதராமல் சோறு மட்டும் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோமென குற்ற உணர்ச்சி வந்தது.
சில நாள் கழித்து ஆதிக்கு ‘Roll’ சொல்லிக்கொடுத்தேன். நாங்கு கால்களையும் பரப்பி படுத்திருப்பவன்
உடலை உருளையாக உருட்டி அங்கபிரதோசனம் போல உருண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வரவேண்டும்.
மேல் மாடியில் நன்கு பாடம் கற்று கீழ் மாடிக்கு ஆதியை அழைத்து வந்து என் அம்மாவிடம்
ஆதிக்கு புதியதாக சொல்லிக்கொடுத்த வித்தையை காட்ட ஆதியிடம் கட்டளையிட்டேன். ஆதி என்ன
நினைத்ததோ, விசிறியின் அடியில் சென்று படுத்துக் கொண்டது.
ஆதி மிகவும் அமைதியானவன், அன்பானவனும் கூட. வீட்டில் இருப்பதே
தெரியாது. புதியவர்கள் வீட்டிற்கு வந்தால் குரைக்கும். மற்றப்படி குரைக்காது. இடி,மின்னல்,
பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசு சத்தம் கேட்டு அமர்ந்திருக்கும் எங்களது இரு
காலின் இடையில் புகுந்து குறுக்காக உடலை வளைத்து படுத்துக்கொள்ளும். விருந்தாளிகளைப் பார்த்து அதுவரையில் குரைத்துக் கொண்டிருந்தவர் அவர்கள் சோபாவில் அமர்ந்தபின், அவர்களது காலடியில் சென்று அமர்ந்து படுத்து உறங்கிவிடும்.
இப்போதும் என் அறையில் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
கனவில் ஓடுகிறதென நினைக்கிறேன். கால்களை விதிர்த்துக்கொண்டிருக்கிறது.







Comments
Post a Comment