சிங்கா [10] சிங்கை எழுத்தாளர் விழா
சிங்கா
[10]
குறுங்கதைகள் வகுப்பு முடிந்ததும், எழுத்தாளர்
ரமா சுரேஷ் என்னை சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு அழைத்து அதற்கான நுழைவுச் சீட்டை
வழங்கினார். இந்த நிகழ்வு Rafflesல் நடைபெற்றது. ரபெல்ஸ் சிங்கையின் மையநகரமெனலாம்.
ரபெல்ஸ் என்பவர் ஆங்கிலேயர்களால் சிங்கையின் தந்தை எனப்படுகிறார் ‘Founder of
Singapore’. Kranjiயிலிருந்து Raffles Place இரயில் பயணம் ஒன்றறை மணி நேரம். வெளியே
மழை. இனிய உறக்கம். யாருடைய தோள்பட்டையிலோ, யாருக்குத் தெரியும்!?
இரயில் நிலையத்திலிருந்து ஒரு வழியாக தேடி
அலைந்து, நிகழ்ச்சி நடக்கும் நிகழ்வுக்கு நடந்து சென்றேன். இங்கு ஒரு பாலமும் அதன்
பக்கத்தில் இருந்த சிற்பமும் தான் எனக்கு இந்நாளின் பயணத்தை மனதில் தங்கச்செய்வது.
அந்தச் சிற்பத்தில் ஒரு ஆங்கிலேயர் சீன வியாபாரியிடம் வணிகம் பேசுகிறார். அவர்களுக்குப்
பக்கத்தில் மாட்டுவண்டியில் ஒரு மலாய் கூலி மூட்டையை இறக்குகிறான். அந்த மூட்டையை சுமக்கும்
ஒரு சட்டையில்லாத இந்தியக் கூலி.
ஒரு சுற்றுலாப்பயணிக்கான அத்தனை அம்சமும் நிரம்ப, வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருக்கையில், என்னைப் பார்த்து ரமா கையசைத்தார். என்னைப் பார்த்துதானா இல்லை வேறு யாராவதா என நான் திரும்பிப் பார்க்க ரமா குழம்பிவிட்டார். ‘நம்மளை இப்போது அடையாளம் காண்கிறார்கள். சிங்கப்பூரில் இனிமேல் சுதந்திரமாக சுத்த முடியாது போலயே’ என அவரை நோக்கி சென்று நுழைவு அட்டையையும் பெற்றுக்கொண்டேன். அவர் தனது இரு மகள்களுடன் வந்திருந்தார். சிங்கையின் பால எழுத்தாளர்கள் என எண்ணிக்கொண்டேன்.
முதலில் நான் செல்லவேண்டியது, The Old
Parliament. சிங்கையின் பழைய நாடாளுமன்றம். இக்கட்டிடம் இருக்கும் நிலத்தை சிங்கையின்
வளர்ச்சிக்கு ஜொகூர் சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் வாங்கிக்கொண்டனர். அப்போது, அங்கு
ஒரு வணிகர் எழுப்பிய மனைதான் இக்கட்டிடம். நிலப்பிரச்சனைகளால் அந்த வணிகர் இக்கட்டிடத்தில்
குடிபுகவேயில்லை. அதன்பின், இக்கட்டிடம் சிங்கையின் நாடாளுமன்றமானது, புதிய நாடாளுமன்றத்தைக்
கட்டி எழுப்பும் வரை. இப்போது, கலைக்கான நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு நடைபெற்ற
‘இலக்கிய விமர்சனம் குறித்த பார்வைகள்; Perspectives on Literary Critique in Tamil Literature’
எனும் அரங்கிற்குத் தான் என்னை அழைத்திருந்தனர்.
அடுத்த அமர்வு பெருமாள் முருகனின், ‘திருப்புமுனை: தமிழ்ப் புனைவிலக்கியங்களின் திருப்பங்களும்
வளர்ச்சிகளும்; Twists & Turns in the History of Tamil Fiction’.
சிங்கை எழுத்தாளர்கள் நிகழ்வின் மையமே Plot Twist என்பதால், இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பார்
என யூகிக்கிறேன். அதற்காக, ஒரு Slide Showவைத் தயார் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
அமர்வு முடிந்ததும், நான் எடுத்து வந்திருந்த அவரின் The Pyre புத்தகத்தில் கையொப்பம்
வாங்கிக் கொண்டேன். என்னைப் பற்றி அவர் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். நானும்;
”அது என்னசார்
அப்படி ஒரு காதல் உங்களுக்கும்… (பெருமாள் முருகனின் முகம் வெளிறியது) டி.எம். கிருஷ்ணாவுக்கும்”
என்றேன்.
மழைகொட்டியது
போல் சிரித்து; ”அத நீங்க அமர்வுல கேட்டிருந்தா சொல்லிருப்பேன்” என்றார். சிரித்து
வைத்தேன்.
அடுத்த அமர்வுக்கு நேரமிருந்ததனால், பக்கத்தில் Victoria Theatre & Victoria Concert Hall (VTCVH)க்கு சென்றிருந்தேன். 1905ல் கட்டப்பட்ட மண்டபம் இது. இங்கும் சிறுவருக்கான நிகழ்ச்சிகள் இருந்தன. மேற்கத்திய இசை வாத்தியங்களை அதன் பயிற்றுனர்கள் சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் Harpன் நரம்பை மட்டும் தீண்டினேன். முதல் முறையாக மேற்கத்திய இசைக்கருவிகளை நேரில் பார்த்த நல்ல அனுபவம். ஓர் ஓவியத்தில் வர்ணத்தின் பங்கு என்னவோ அவையே ஒரு சிம்பனியில் இசைக்கருவியின் பங்கு என சமீபத்தில் வாசித்தேன். விக்டோரியா மண்டபத்திலிருந்து வந்ததும், கீழே ஒரு Souvenier கடைக்குச் சென்றேன். சிறுவர்களுக்கான புத்தகங்களைப் பார்த்தேன். வில்வாடியைப் பலரும் கேட்டிருப்போம். இசையுடன் எழும்பும் கதை புத்தகமாக வில்வாடியைக் கொண்டுச் சேர்க்கும் சிறுவருக்கான கதைபுத்தகங்களைக் கண்டு வியப்படைந்தேன். சிங்கப்பூரில் செலவழிக்கும் சக்தி என்னிடம் இல்லையென்பதால், அங்கிருந்து வெளியே வந்தேன்.
விக்டொரியா மண்டபத்தின் வெளியே நீண்ட புல்தரை. மண்டபத்தின் வாசலில்
Sir Rafflesன் சிற்பம். மழை பெய்து முடிந்திருந்தது. நீண்ட நீள் வடிவ புற்றரையில் ஏராளமான
வெளியூரார்கள். சிங்கையின் மலாய் இணையர்கள் Pre-wedding shoot செய்துக்கொண்டிருந்தனர்.
கட்டடத்தின் பார்க்கிங்கில் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. இன்னும் பேருந்துகள் வந்து
கொண்டே இருந்தன. சுற்றுலாபயணிகளின் திரள். எங்கும் சிறுவர்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர்.
முதலில் எரிச்சலாகவும், பின் இனிமையாகவும் இருந்தது. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு தண்ணீர்
பெலூன் ஊத வாங்கிக் கொடுத்து, சிறுவர்களுடன் அவர்களும் விளையாடிக்கொண்டிருந்தனர். பக்கத்தில்
ஒரு கூன் வளைந்த முதிர் சீன தம்பதி. சின்ன மோட்டார் வண்டியில் டின் பானங்களும் ஐஸ்
கிரீமும் விற்றுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்தவுடன் எனக்கு Dataran Merdeka நினைவுக்கு
வந்தது. மூன்று வருடங்களுக்கு முன், வல்லினம் நிகழ்ச்சி முடிந்து என் கல்லூரி தோழி
பத்ரீஷாவைப் பார்க்கச் சென்றேன். அவள்தான் அழைத்துச் சென்றாள். 1957ல் பிரிட்டிஷாரிடமிருந்து
மலேசியாவுக்கு விடுதலையாகிவிட்டதென அதிகாரப்பூர்வமாக அறிவித்தது Dataran Merdeka,
Kuala Lumpur திடலில்தான். திடலின் நேரெதிரில் அன்றைய உச்சநீதிமன்றம். அதற்கு மிக அருகில்தான்
கோபால் ஶ்ரீ ராமின் அலுவலகம். அவர் அப்போது உயிருடன்தான் இருந்தார். The duty of
the judiciary is to interpret the law. அவர் அதைதான் செய்தார். அவருடைய தீர்ப்புகளே
எங்களுடைய பாடத்திட்டம். கர்நாடக இசைப் பிரியர். கல்லூரி இறுதியாண்டில் அவர் மறைந்தார்.
பத்ரீஷாவும் நானும் பேசிக்கொள்வதில்லை என்று நினைவுக்கு வந்தது. பின், பூலோகத்தில்
கால் பதிந்ததும், அடுத்த அமர்வுக்குத் தாமதமாகிவிட்டது எனத் தெரிந்தது.
அடுத்த
அமர்வு இலக்கிய விமர்சனம் குறித்த
பார்வைகள் (Perspectives on Literary Critique in Tamil Literature).
The Arts House, Living Room (பழைய நாடாளுமன்றம்)த்தில் நடந்தது. மொத்த அமர்வைப் பற்றி
சிங்கை விமர்சகர் சிவானந்தம் நீலகண்டம் சிரங்கூன் டைம்ஸில் எழுதிவிட்டார்.
அமர்வுக்குப்
பின், ஒரு முதிய எழுத்தாளர் எழுந்து, ”நீங்கள் பேசிக்கொண்டிருப்பது சிங்கப்பூர் இலக்கியமல்ல.
இந்த… பணிப்பெண், தமிழ் வகுப்பு, இதுதான் சிங்கப்பூர் இலக்கியம்” என்றார். சற்றே அர்த்தமில்லாமல்
காரசாரமாகச் சென்றது.
அறுதியாய்
சார் ”படைப்புல சத்தியம் இருக்கனும்” என்றார்.
விமர்சனம்
எனக் கூறுகையில் அடிக்கடி அவர் இப்படி சொல்வார்; அன்றும் கூறினார்.
”என் அக்கா பையன நா அடிக்க முடியாது, ஆனா என் பையன திட்டி அடிக்க முடியும்” என்பார். அத்தனை
உரிமையும் அக்கறையும் எடுத்துக் கொள்பவரே விமர்சனம் செய்ய முடியும் என்பது எனது தனிபட்டப்
புரிதல்.
அமர்வு முடிந்ததும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி, அவர்களிடம் கையொப்பம் கேட்கலாம். நான் புத்தக கடைக்குச் சென்றேன். அங்கு ஒரு இணையர்;
”இதில் சுனிலுக்கு
யுவ புஸ்கர் கிடைச்ச புக் எது?”, என அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
நான் வழக்கமான
ஆர்வக்கோளாறுடன் ”அம்பாறத்தூணி” என்றேன்.
”அம்பாறத்தூணியா?”
இருவரும் என்னைப் பார்த்தனர்.
பின் நினைவு
வந்தவளாய் ”இல்ல இல்ல அம்புப்படுக்கை” என்றேன் புத்தகத்தைக் கை காட்டி. பின், அங்கு
ஒரு நொடி கூட நிற்கவில்லை.
தெரிந்தவர்களிடம்
பாய் சொல்லிவிட்டு வந்த வழியே கிளம்பலானேன்.
இம்முறை
ரயிலிலும், பேருந்திலும் உறக்கமில்லை. இந்த இரயில் கூட என்ன சொல்கிறது…, உனது பயணம்
எங்கு முடிவடையும் என்று தெரிந்து ஏறு. இல்லை நான் என் போக்கில் கொண்டு நிறுத்துவேன்.
இனிமேல், எனக்கு சிங்கை வருவதற்கான காரணமென ஏதும் இல்லை. வரும் சனிக்கிழமைகள் என்னுடையதாகிவிட்டன.
இனிமேல் காலையில் எழுந்து பறக்க வேண்டாம். இங்கு நண்பர்களைத் தேடிக் கொள்ள எத்தனிக்கவில்லை,
சிங்கையைச் சுற்றி பார்க்க வரவில்லை, என்னை ‘நிரூபிக்க’ வரவில்லை, கற்க வந்தேன். வகுப்பின்
பத்து சதமாவது கற்றேன் என நினைக்கிறேன். மற்றவை தன் போக்கில் நிகழ்ந்தன. நான் சிங்கைக்குச்
செல்ல வேண்டும், emergencyக்கு கொஞ்சம் பணம் தா என்றதும் 50 டாலரை நீட்டிய தோழி ரேஸ்மா
நினைவுக்கு வந்தாள். அவளே எனது போக்குவரத்துக்கான nets அட்டையும் அதில் பணமும் போட்டுத்
தந்தாள். என்னைவிட நல்ல வாசகியாக இருக்கும் திறம் கொண்டவள்.
ஒரு மாணவராக
இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு வெளியூர் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. வாசிப்புக்கும்
இலக்கியத்திற்குமான வசதியை ஏற்படுத்தி தருவது நம் பணியாற்றும் தொழிலே. என்றும் அதை
மட்டும் விடலாகாது என உணர்ந்தேன்.
ஆசிரியர்
மாணவர் அமர்வு நினைவுக்கு வந்தது. நீண்ட கால பழக்கம் போல நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
ஆனால், இன்று நிகழ்ச்சியில் சாரிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை
என்பதை அறிந்தேன். ஒருவகை friction இருப்பதை உணர்ந்தேன். பின் அவரே, ஒரு கட்டத்தில்
ஹாய் என கைகாட்டினார். நானும் மரியாதையாக தலை தாழ்த்தி சிரித்து வைத்தேன். அப்போது
one-to-one sessionல் இருந்த இருவர் யார்? அங்கு இருந்தது சுனிலும் இல்லை, பரிமித்தாவும்
இல்லை. அவர்கள் கலையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடல்களுடைய ஆசிரியர்-மாணவர் குரலின்
பிரதிபலிப்பு. அதில் எனக்கு எந்த பங்கேற்பும் இருக்க முடியாதென தோன்றுகிறது. பெயர்களை
இட்டு நிரப்பிக் கொள்ளலாம். வரலாறும் தத்துவமும் தொன்மமும் படிக்கும்போதும் இப்படி
எனக்குத் தோன்றும். நமக்கு முன்னவர்கள் அடைந்த ஒன்றையே நாம் இப்போது அடைகிறோம் எனில்,
நாம் வெறும் பெயர்கள் தானே? காலம் என ஒன்று உள்ளதா? என்றென்றைக்கும் நிலைக்கும் ஒரு
roller coaster rideல் நாம் இன்று ஒரு ride சென்றோம். அவ்வளவுதானே?
காலை
இரயில் பயணத்தில் நான் உறங்க தோள் தந்த அந்தப் பையனின் முகத்தை மனக்கண்களில் கொண்டு
வர முயன்றேன். முடியவில்லை. முகத்தைப் பார்த்திருந்தால்தானே முடிந்திருக்கும். சற்றே விழிப்பு வந்ததும், பக்கத்தில் இருப்பது ஆண் என உணர்ந்தவுடன் வலதாக திரும்பி
உறங்கியவளுக்கு எப்படி வரும்? ஒரு வழிப்போக்கனுக்கு இத்தனை வலியுறுத்தல் தேவையில்லை
எனப்பட்டது.
எனது பிதற்றல்கள் எனக்கே தாங்கமுடியவில்லை என்னும் போதுதான் ஜெ.பி சுங்கை சாவடியில் பேருந்து அடைந்தது. மீண்டும் சிங்கை வர வேண்டிய அவசிய காரணங்கள் இல்லை என மீண்டும் எனக்குள் சொல்லிக்கொண்டேன். அனைவரும் இறங்கியவுடன் நான் இறுதியாக இறங்கினேன். ஒரு காலை JBயில் ஊன்றி, மறுகாலை பேருந்தில் வைத்தப்படி பேருந்து ஓட்டுனரைத் திரும்பி பார்த்தேன்.
பேருந்து ஓட்டுனர் என்னவோ நான் திரும்புவதற்காக
காத்திருப்பவர்போல், நான் திரும்பவும் அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் எனத்
தெரிய வந்தது.
Thank
You என்றேன்.
சிரித்து
Welcome என்றார்.









Comments
Post a Comment