சிங்கா [8] : வரலாற்று புனைவு
சிங்கா
[8]
வரலாற்றுப் புனைவு
வரலாறு என்பது காலமும் இடமும் மட்டுமே.
அதிலிருந்து கற்பனையுடன் நகரும்போது வரலாற்று புனைவு தொடங்குகிறது. புற உலகைக் கட்டமைக்க
வரலாற்று தகவல்களும் அக உலகைக் கட்டமைக்க கற்பனையும் அவசியம்.
கடந்த
காலத்தின் அறியாமைகளைச் சாட்சிகளைக் கொண்டு தொகுத்துக் கொள்வது வரலாறு. அப்படியானால்,
தூய வரலாறு என ஒன்று உள்ளதா? இங்கு, வரலாற்று புனைவுகளை ஏன் எழுத வேண்டுமெனும் கேள்வி
எழுகிறது.
வரலாற்றைச்
சுவாரசிய கதையாகச் சொன்னால் நிலைகொள்கிறது. மறைக்கப்பட்ட வரலாற்றை அம்பலப்படுத்தலாம்.
அதன்மூலம், தற்கால முக்கியத்துவத்தை முன்வைக்கலாம். அறிய கிடைக்கும் வரலாற்றைத் தற்கால
முக்கியத்துவத்துக்காக ஐயப்படலாம். ஏற்கனவே அறிந்த வரலாற்றின்
அறியாத விசைகளைக் கண்டடையலாம். இவ்வாறான உந்துதல்களுக்கு வரலாற்று புனைவெழுத்து எழுதப்பட்டு
வருகிறது.
Ecce
Homo என்றால் இவன் மனிதன் என்று பொருள்.
இக்கதை காந்தி கல்விக்காக லண்டனுக்குக் கப்பல் ஏறுவது தொடங்கி, அவர் பட்டம் பெற்று மீண்டும்
இந்திய கரையை அடையும் வரையிலான வாழ்க்கையைத் தருணங்களை அடிப்படையாக உள்ளடக்கியது. சத்திய சோதனையின் பக்கங்கள்
மட்டுமே இக்கதையின் அடிப்படை. நகுல் வசன் காந்தியத்தை எழுதவில்லை. மனிதர் காந்தியின்
அலைக்கழிப்புகளை எழுதியுள்ளார். அதன்வழி, காந்தி நமக்கு அணுக்கமாகிறார்.
எனவே,
Ecce Homo, மெய் தரவுகளின் அடிப்படையிலிருந்து எழுதப்பட்டவை. வரலாற்றின் ஆவணங்களை நேரடியாக
கதைக்குள் எழுதும் பாணியில் அமைந்தது Ecce Homo.
2. 2. நீரும் நெருப்பும், ஜெயமோகன்
சத்திய
சோதனையின் ‘மரணத்தின் வாயிலருகில்’ அத்தியாயத்தைத் தழுவியது நீரும் நெருப்பும். காந்திக்கு
ஸ்பேனிஷ் சளி காய்ச்சல் (Spanish Flu). பைராகி ஒருவர் காந்தியின் உடலில் தழல் அவிந்து விட்டது என்கிறார். அதனால், காந்தியின் உடலை அக்னி குண்டமாக மாற்றுவேன் என்கிறார். காந்தி, மண்ணில்
நீரிட்டு குழைத்து நெற்றியில் பூசிக் கொள்கிறார். பைராகி கடும் கோபத்துக்குள்ளாகிறார். காந்தி, நீரிலும் நெருப்புண்டு என்று கூறி பைராகியின் மருத்துவத்தை மறுக்கிறார். காந்தி
குணமடைகிறார். பைராகி விடைபெறுகிறார்.
இக்கதையில்
ஜெயமோகன் உண்மை நிகழ்வைத் தொட்டு, உருவகத்தை வளர்க்கிறார். பைராகி அனலின் வழியைப் பரிந்துரைக்கிறார்.
அனல் பெருக பெருக உண்டு செரிப்பது. காந்தியின் வழி அரவணைக்கும் நீரின் தன்மையுடையது.
ஆனால், காந்தி தண்மையான உயிர்ப்பிக்கக்கூடிய நீரில் அக்னி உண்டு எனச் சுட்டுகிறார். இங்கு
நீரும் நெருப்பும், அஹிம்சைக்கும் வன்முறைக்குமான, ஆக்கத்திற்கும் அழிவுக்குமான உருவகமாக
வருகிறது.
இக்கதை
உண்மை நிகழ்வினைத் தொட்டு, அதன்பின், உருவகத்தால் தன் அளவில் கவிதைக்கு நெருக்கமாகிறது.
இந்த வரலாற்று புனைவு ஒரு ஆளுமையின் அகத்தை எழுதும் முயற்சி.
தேவி
பாரதி, காந்தியைத் தால்ஸ்தாயுடன் இணைக்கிறார். தால்ஸ்தாயைப் போல காந்தி தன் மரணத்தைத்
தானே தேடுகிறார். அவருடைய போலிகளைக் காண்கிறார். அசல் காந்தியையும் காந்தியின் போலிகளையும்
கண்டு மக்கள் சலிப்படைகின்றனர். தன் தலை சாய்ந்தவுடனேயே கலவரம் ஆரம்பிக்கப்போகிறதென்று
காந்திக்குத் தெரியவருகிறது. தான் இறக்க தன் தேசத்தவர்கள் காத்திருக்கின்றனர் என அறிந்துகொள்கிறார்.
மகன்
ஏன் தந்தையைக் கொலை செய்ய வேண்டுமெனும் எஸ்.ராவின் கேள்வியின் பதிலாக, இக்கதையை வாசிக்கமுடியும்.
காந்தியின் செயல்பாடுகளும் எண்ணங்களும், சராசரி இந்தியனின் மனசாட்சியைத் தோல்வியடையச்
செய்கிறது. அந்தத் தோல்வியை எளிதாக கடந்துச் செல்ல முடியாது. காந்தியைக் கொன்று, அவரை
அதிமனிதனாக்கினால் அவரைக் கடந்துச் செல்லலாம். அதை வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளோம்.
காந்தியை வெறும் சிலையாக நிற்கவைத்துள்ளோம்.
பிறிதொரு
இரவில் எழுதப்பட்டிருக்கும் எந்த நிகழ்ச்சியும் நடந்தேறவில்லை. இங்கு கற்பனை அதீதமாக உள்ளது. கற்பனையும் கூட வரலாற்றைத்
தற்கால முக்கியத்துவத்துக்காக ஐயப்படுத்தப்பட்டுள்ளது.
[பிறிதொரு இரவு, தமிழில் காந்தியைப் பற்றி எழுதிய ஆகச் சிறந்த கதையென சுனில் சாரின் சிபாரிசு
பெற்றுள்ளது. வாசிக்கலாம்]
ஆரோகணம்
என்றால், சங்கீதத்தில் ஸ்வரங்களின் ஸ்ருதியை முறையே கூட்டிக்கொண்டு செல்லுதல். சுருக்கமாக;
ஸ்ருதியின் ஏறுகை.
காந்தியின்
மரணத்துக்குப் பின் நிகழுபவற்றைக் கற்பனையால் விரித்துக் கொள்ளும் கதையிது. மரணமுற்ற
காந்தி பனி மலைகளுக்கு மேல் செல்கிறார். அவருடன் ஒரு நாய் உடன் வருகிறது. தாரம், மகன்,
எனும் பற்றுகளைப் படிப்படியாக துறந்து துறந்து மேலேறுகிறார். தன் மொத்த வாழ்வையும்
பயணத்தில் மறுபரிசீலனை செய்கிறார். அவர்முன் எருமைகள் வருகின்றன. உச்சத்தை அடைந்தவுடன் அவருக்கு இரண்டு வழிகள் தெரிகின்றன;
சொர்க்கம்; நரகம். நரகத்தில் போலி காந்தியவர்கள் உள்ளனர். காந்தி நரகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்.
ஆரோகணத்தில் காந்தி எனும் சிந்தனை மட்டுமே உள்ளது. பிற அனைத்தும் கனவு. முழுக்க கற்பனை பொருந்திய சிறுகதையிது. இக்கதை எந்த தரவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது அல்ல. ஒரு வரலாற்று ஆளுமையின் சிந்தனையை மட்டுமே வைத்து, காலமும் இடமுமின்றி ஆக்கக்கூடிய வரலாற்று புனைவிது.
…
இந்த
வகுப்பில் தரவுகளை மட்டுமே வைத்து எழுதுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து விலகி கற்பனை
போட்டு கிண்டி இன்னும் என்னவெல்லாம் வரலாற்று புனைவாகச் சமைக்கலாம் என்பதை விளக்கவே
இந்த நான்கு கதை கதைகளைத் தர (தரவு - data) வரிசைப்படி கலந்துரையாடப்பட்டது.
வரலாற்றுப்
புனைவில் செய்யக்கூடாதவை என சில உள்ளன. முன்முடிவுகளைப் பாத்திரங்களில் ஏற்றக் கூடாது.
ஒற்றைத்தரப்பாக, வெறுப்புக்கான ஆயுதமாக கலையைக் கைக்கொள்ளக் கூடாது. பல கோணங்களில்
அணுக வேண்டும்.
வரலாற்றுப்
புனைவில் செய்ய வேண்டியவை என்றும் சில உள்ளன. அடிப்படையாக வரலாற்று புற தகவலகள் இருத்தல்
அவசியம். இடைவெளியிருப்பின் அவற்றை ஊகித்து கொள்ளலாம். அவசியமாக, மன அவதானிப்புகளை
கற்பனையில் விரிக்கவேண்டும்.
- வரலாற்று கற்பனாவாத படைப்பு - கல்கி, சாண்டில்யன் படைப்புகள்
- வரலாற்று புனைவு - வானம் வசப்படும்
- நுண்வரலாற்று புனைவு - மக்கள் வரலாறு, ஆழி சூழ் உலகு
- மாற்று வரலாறு - ஊக புனைவு - பிறகொரு இரவு
- வரலாற்று நிகழ்வின் இடைவெளிகளை ஊகங்களால் நிரப்புதல் - ஆதித்ய கரிகாலன் மரண சாசனத்தைக் கொண்டு பொன்னியின் செல்வன் எழுதுதல்.
- வரலாற்று நிக்ழவின் சமூக விசைகளை உள்வாங்க்குதல் - வெள்ளையானை
- வரலாற்று குறியீடாக ஆதல் - புளியமரத்தின் கதை
- வரலாறை தலைக்கீழாக்குதல் - பிறகொரு இரவு
- வரலாறை உட்செரித்தல்- யுவன் ; பகடையாட்டம்
- வரலாறை நிகாரித்தல் - எலும்புக்கூடுகள்
- நுண்வரலாற்றுபதிவு - வண்ணநிலவன் ; சிங்கால் காலண்டர் ஓவியம்
பரி
ஜொகூர் பாரு
27.02.2024




Comments
Post a Comment