சிங்கா [7] தமிழ் அறிவியல் புனைவு
சிங்கா
[7]
தமிழ் அறிவியல் புனைவு
மிகு புனைவில் தர்க்கத்தை கழித்துவிட்டால் அது புராணக்கதை (myth). அதுவே, மிகு புனைவில் தர்க்கத்தைச் சேர்த்தால் அதுதான் அறிவியல் புனைவு.
இந்த வகுப்பு தமிழ் பேசாத சிங்கப்பூர் பிரஜைகளுக்கு எடுக்கப்பட்டது. தமிழ் சிறுகதை அறிமுகம் வகுப்பில் கலந்துக் கொண்ட Wei liang இந்த வகுப்பிலும் கலந்துக் கொண்டார். Wei Liang, நான், கித், எங்களுடன் டோனட் என நாங்கள் நால்வர் வகுப்பில் கலந்துக்கொண்டோம்.
Figure 1 Writer
Kok Wei Liang
சுனில் சார் தமிழின் அறிவியல் புனைவு
நடையை மூன்று காலகட்டமாகப் பிரிக்கிறார்; விதை, தளிர், வளர்.
Figure
2 Jegathish Chandra Bose
அறிவியலாளர் போஸ் ‘Niruddesher Kahini’, (later revised as அடங்காப்புயல்) எனும் கதையை 1896ல் எழுதியுள்ளார். கதையில் இரண்டு பாகம் வருகிறது.
முதல் பாகம், செய்தி அறிக்கைகள் பரவலாக சொல்லி வந்த புயல் அதிசயமாக காணாமல் போனது.
இரண்டாம் பாகம், நோயுற்ற ஆடவர் ஒருவர் உடல்நலத்திற்காக கப்பலில் கடற் பயணம் செய்கிறார்.
புயலின் வேகம் கப்பலைத் தாக்குகிறது. இந்த ஆடவர் தலைமுடி எண்ணையைக் கடலில் ஊற்றுகிறார்.
கடலின் அலைகள் வழுக்கவே புயலும் வழுக்கி மறைந்து விட்டது.
Figure 3 Begum Rokeya
எழுத்தாளர், சிந்தனையாளர் பேகம் ரோகேயா சுல்தானாவின் கனவு எனும் கதையை 1906ல் எழுதினார். கதைசொல்லியான சுல்தானா பெண்களால் ஆளப்படும் உலகத்துக்குச் செல்கிறார். அங்கு மேகத்திலிருந்து தண்ணீர் சேகரிக்கப்படுகிறது, (Cloud Harvesting). சூரிய சக்தி கொண்டு சமையல் செய்கின்றனர். சூரிய சக்தியைத் துரித படுத்தி வெப்பம் மற்றும் ஒளியை உண்டாக்கி அண்டை நாட்டுடன் போர்புரிகின்றனர், (Solar Energy).
இரு கதைகளிலும் கற்பனையுடன் கலந்த தர்க்க அறிவியல் சிந்தனைகள்
பேசப்பட்டுள்ளன. தர்க்கத்தைத் தவிர கற்பனையால் அறிவியல் புனைவை எப்படி விரிக்கலாம்?
பேகம் ரோகேயா எழுதிய கதையில் பல்வேறு இருப்பிடங்களுக்குத் தாவும்
பகுதி வருகிறது. சுனில் சார் சில வகைமாதிரிகளைச் சுட்டிக் காட்டினார். கருட
புராணத்தில் ஆன்மா பல உலகங்களைத் தாண்டிச் செல்லும். சத்தியவான் சாவித்திரி
கதையில் சாவித்திரி ஒரு வேலைக்காக யமலோகம் செல்வாள்.
மற்றுமொரு சாத்தியம் கால வெளிக்கான சிந்தனை. இன்னொரு சாத்தியம், பல சக்திகளும், இயல்புகளும் கொண்ட மனிதரல்லாத
உயிரனங்கள். இவைகளைப் போல; யட்சர்கள், அரக்கர்கள்,
கந்தர்வர்கள், நாகர்கள், தேவர்கள், அசுரர்கள். சுப்பிரமணிய பாரதியாரின் ஞான
இரதம் கதையில் கதைசொல்லி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்குச்
செல்கிறார். இங்கு கால வெளியும் இடவெளியும் கற்பனைக்குள் விரிக்கப்பட்டுள்ளன. ஞான
இரதத்தின் பேசுபொருட்கள் இன்றைய அறிவியல் புனைவுக்குரிய கட்டமைப்பில் வரவில்லை
என்றாலும் வழக்கமாக பாரதியிடமிருந்தே தமிழ் அறிவியல் புனைவுக்கான முயற்சி
தொடங்கியது. இதுவே, தமிழ் அறிவியல் புனைவின் விதை காலம். அ.
அரங்கசாமி ஐயங்கார் எழுதிய கோபாலன் விஷயம் மாய பிரச்சனைக்குத்
தர்க்க தீர்வைச் சொல்லும் தெளிவான கதை.
விசாலாட்சி அம்மாள் 1925ல் தூரத்துப்பச்சை எனும் கதை எழுதினார். தூரத்துப்பச்சையில் வேற்று கிரக வாசி ஒருவன் தேயா எனும் கோளைத் தேடி
வருகிறான். அவனது தொன்மையான நூலின் படி தேயாவில் நல்லதும் உன்னதமும் மட்டுமே
இருக்கக்கூடியது. தேயா என்பது பூமிதான். பூமியில் விதவை பெண்ணைத் துன்புறுத்தும்
காட்சியைப் பார்த்து சலிப்படைந்து வெளியேறுகிறான். இதில் ஒரு கோளிலிருந்து மற்றோரு
கோளுக்குத் தாவும் இட வெளிக்கான சாத்தியம் உண்டு. அதனுடன் நம்மிலிருந்து விலகி
வேற்று கிரக வாசி நம்மை (பெண்ணைத் துன்புறுத்தியவர்கள்) சுய
விமர்சனத்துக்குள்ளாக்குகிறது.
புதுமைப்பித்தன் கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதையில் கடவுள் சித்த
மருத்துவரைக் காணும் கருவுடன் எழுதினார். கபாடபுரம் தமிழின் முதல் கால பயணம்,
time travelling பரிசோதித்த சிறுகதை.
Figure 4 மரபின் இட வெளி சாத்தியங்கள்
இப்படி கற்பனையால் வளர்க்க கூடிய சாத்தியங்களைப் பேசிக் கொண்டிருக்கையில், சார் திடீரென ஒவ்வொருத்தரையும் பார்த்து,
“உங்களால் time travel செய்ய
முடிந்தால், என்ன செய்வீர்கள்?” என்றார்.
நான் முதலில் நைல்
நதியிலிருந்து கால்வாய் வெட்டி பாலைவனத்தை வளமாக்கிய கிளியோபெட்ரா வாழ்ந்த
காலத்தைப் பார்க்க செல்வேன் என்றேன். பிறகு, சோழரின்
செழுமையான காலகட்டத்தையும், அதன் பிறகு கம்பனையும்
பார்ப்பேன் என்றேன்.
பிறகு, அதே கேள்வியை நான் அவரிடம் துடுக்காக கேட்க;“காந்திய,
இல்லாட்டி Godseவ” என சீரியஸாகப் பதில்
சொன்னார்.
நான் உண்ட டோனட், இதையெல்லாம் கவனித்து என்னுள் இருந்தபடியே ”இவள் வாய்க்குள் புகும்
நேரத்துக்குமுன் கீழே விழுந்திருப்பேன்” என்றது.
சற்றெ இளைப்பாறிவிட்டு, சார் வகுப்பைத் தொடங்கினார்.
விதை பருவத்தில், ந. பிச்சமூர்த்தியின்
‘SACRIFICE AT THE ALTARS OF SCIENCE’ கதை, அறிவியலின் அறநெறிகளைப் பேசிய தமிழின் முதல் முறையான அறிவியல் புனைவு
என்றார். ஜி. நாகராஜனின் ‘Atomic Times’ சிறுகதையில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் மனித அறநெறிக்கு ஏற்படும் தாக்கத்தை கேள்வி
கேட்கிறார்.
இதற்குள்
மணி பத்தரையனது. சற்றே இளைப்பாற, வந்த ஒவ்வொருரிடமும்;
‘உலகத்தின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்ன? அதை எப்படி
சமநிலைக்குக் கொண்டு வரலாம்?’ எனக் கேட்டார்.
|
கீத் |
: |
Nuclear weapons தாம் உலகத்தின் சக்தி வாய்ந்த ஆயுதம் |
|
சுனில் |
: |
Atomic Bombsன் தாக்கம் அதைவிட பெரியதல்லவா? |
|
Wei Liang |
: |
அதற்குள்
பின்னாடி இருக்கும் கழிவறைக்குச் தப்பித்துச் சென்றுவிட்டார். |
|
பரி |
: |
அதிகாரம் என்றுதான்
இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் இப்போது gossips தான் அழிக்கவே முடியாத ஆயுதமென்று தோன்றுகிறது |
|
சுனில் |
: |
ஒருவர் நம்மிடம்
அவரைப்பற்றி சொல்வதைவிட, மற்றொருவர் அந்த ஒருவரைப் பற்றி
சொல்வதுதான் நம் நினைவில் நிற்கும். Gossipsன்
அடுத்த வடிவம்தான் propaganda. Propaganda மூலம் ஆட்சிகள்
கவிழ்த்தப்பட்டும் நிலைநிறுத்தப்பட்டும் இருக்கின்றன. Gossip is the only
weapon that cannot be neutralized. |
டோனட் என்ன சொல்லிருக்கும்? உலகத்தின் மிகத் தீய
ஆயுதம் பல் என்றிருக்கும்.
ஓய்வு
முடிந்ததும் தமிழ் அறிவியல் புனைவின் தளிர் பருவம் பேசப்பட்டது. சுஜாதா அறிவியல்
புனைவைத் தனியாகப் பிரித்த முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் சூரியன் கதை
வகுப்பில் பேசப்பட்டது.
மாலனின்
வித்வான் எனும் கதையில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்று சங்கீதம் கற்றுக்கொள்கிறது.
எங்கும் பிசகாமல் பாடவும் செய்கிறது. அதற்குப் பாடம் கற்று தந்த வித்வான் மன
நெருக்கடிக்கு உள்ளாகிறார். இக்கதையின் முக்கிய கேள்விகள் என்பது; பல காலம்நீடித்த கடும் பயிற்சியின் அர்த்தம் என்ன? செயற்கை
நுண்ணறிவு தலையெடுக்குமானால் ஒரு கலைஞனின் தனித்துவம் என்ன?
இதேகாலகட்டத்தில்
எம்.டி.முத்துக்குமாரஸ்சுவாமி, அ.முத்துலிங்கம், இரா.
முருகன் பல சிந்தனைகளில் கதைகள் எழுதியுள்ளனர். அதில், தகவல்கள்
பதிவிறக்கம், மற்றவரின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துதல்,
பாலின மாற்றம், புவியீர்ப்பு வரி என்பவை
பேசப்பட்டன.
அடுத்து வளர் பருவம். இங்கு சுனில் கிருஷ்ணனின் ‘Whale’ பேசப்பட்டது. இதில் Rapid bio degradation சிந்தனை
பேசப்பட்டுள்ளது. இக்கதை வளர் பருவத்தில் இருக்கக்கூடிய தனித்துவமான கேள்வியை
உடையது. 'எப்போதும், முடிவில்
மகிழ்ச்சியே தேர்ந்தெடுங்கள்' என்கிறோம். ஆனால், இந்த கேள்விக்குள் உப பிரிவாக; மகிழ்ச்சியாக வருத்தி
வாழ முடியும் அல்லது மகிழ்ச்சியாக இறக்க முடியும் என்றால், நீங்கள்
எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் எனும் கேள்வியைக் காணலாம்.
இமாம் பாசந், லோகேஷ் ரகுராமன், சித்துராஜ் பொன்ராஜ் ஆகிய எழுத்தாளர்களின் பெரும்பான்மை அறிவியல்
புனைவுகள், ஒரு தகவலை மாற்றி அமைத்தலும், அதனால் ஏற்பட கூடிய விளைவுகளைப் பற்றி எழுதியுள்ளனர்.
பெருந்தேவியின்
குறுங்கதைகள், சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய அறிவியல் புனைகதைகள் புலன்
அனுபவத்தால் ஏற்பட கூடிய அனுபவத்தை செயற்கையாக அடைதலும், அதன்
விளைவுகளை எழுதியுள்ளார். அமரத்துவத்தைப் பற்றி அறிவியல் புனைவாக சுசித்ரா
எழுதியுள்ளார்; யாமத்திலும் யாமே உளேன்.
தமிழில் அறிவியல் புனைவு எழுதி கொண்டிருக்கும்
பிற முக்கிய எழுத்தாளர்கள் நகுல் வசன், கிரிதரன், வேணு தயாநிதி, பாலமுருகன், விஷ்ணுகுமார்
ஆகியோர் ஆவர்.
அறிவியல் புனைவில் சவால்கள் உண்டு. ஒரு
தொழில்நுட்ப புனைவு அறிவியல் புனைவாகாது. சுஜாதாவின் கதைகள் முழுதாக அறிவியல்
புனைவாகாத காரணம் இதுதான். எல்லா அறிவியல் புனைவுகளும் எதிர்காலத்தைப்
பேசவேண்டுமென்பதில்லை. ஆனால், தினசரியில் அறிவியல் புனைவை
எப்படி எழுதுவதென்னும் சவால் உள்ளது. அறநெறிக்குள் உட்பட்ட விஞ்ஞானம் எனும்
கருப்பொருள் தேய்வழக்காகிவிட்டது. அறிவியல் கலைச்செற்களை விளக்காமல் கதை
எழுதுவதும் மற்றுமொரு சவால்.
சார் கீத்திடம் விடைபெற்றார். அவனை campusல் சந்திப்பதாகச் சொன்னார். என்னிடம் வரலாற்று புனைவு வகுப்பு தீபாவளிக்கு
முதல் நாள் என்பதால், நேரில் வகுப்பு நடக்குமா எனத்
தெரியவில்லை என்றார். Wei Liang எங்களிடம் அவருக்குப்
பிடித்த Westworld அறிவியல் புனைவு படத்தைப் பார்க்க
வேண்டிக் கேட்டுக் கொண்டார். மீத டோனட்களைக் கீத் எடுத்துச் சென்றான்.
வகுப்பின் இறுதியில் சாருக்கு அவரது coat பாரமாக இருந்திருக்காது என நம்புகிறேன்.







Comments
Post a Comment