சிங்கா [6] தமிழிலக்கிய மண்டலம்
சிங்கா
[6]
தமிழிலக்கிய
மண்டலம்
நான் சிறுவயதில் பூமிக்கு வெளியே, விண்வெளியில்
தான் சொர்க்கமும் நரகமும் இருக்கிறதென மிகவும் நம்பினேன். அதற்கு பின் தான் தெரிந்தது
விண்வெளி இரண்டுமில்லை, விளையாட்டு மைதானம் என்று.
பல கேள்விகளால் உண்டாகும் வெற்றிடத்தில்
படர்ந்துள்ளது இருள். இருளில் தேடல்கள் இருக்க முடியாது. அதனால், சூரிய மண்டலத்தின்
மையத்தில் இருப்பது சூரியன். ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் உள கொந்தளிப்பு
இங்குதான் நிகழ்கிறது. எரிவதனால் ஒளி படர்கிறது. ஒவ்வொரு சூரிய கீற்றும் நிகழ்ந்த,
நிகழ்ந்துகொண்டிருக்கும், நிகழ இருக்கும் எழுத்தாளர். மொத்த சூரிய கீற்றும் சடை பின்னி
ஒற்றை கீற்றாக அனைத்து கோலுக்கும் பாய்ந்து செல்லும். ஒரே நேர்க்கோட்டில் செல்லும்
கீற்று, சர்வ எழுத்தாளர்களின் பேனா மை. இந்த கீற்று நொடிக்கு மூன்று லட்சம் தூரத்தைக்
கடக்க வல்லது. அதில் ஒரு எழுத்தாளர் ஒரு நொடி படர்ந்தாலுமே அவர் மாஸ்டர் ரைட்டர்தாம்.
ஆகவே இங்கொரு கேள்வி எழுகிறது. எழுத்தாளர் என்பவர் கர்த்தாவா அல்லது கருவியா?
Sun, P.C.: Nasa
சூரியனுக்கடுத்து மெர்கியூரி, Mercury.
மெர்கியூரி சூரியனை வலம் வரும் சுற்று மிகச் சிறியது. ஒரு எழுத்தாளரின் ஆயுள் காலம்
போல. அவர்கள் படைக்க வந்து ஒன்றைத் தந்துவிட்டு நிறைவடைந்து/நிறைவடையாமல் செல்லக்கூடியவர்கள்.
புதுமைப்பித்தன், ப. சிங்காரம் போன்றவர்கள் இங்குதான் உள்ளனர்.
மெர்கியூரிக்குப் பின் வீனஸ், Venus. இங்குதான் பலர் இருப்பதாகத் தோன்றுகிறது. சூரிய மண்டலத்தில் இருக்கும் அதிக சூடான கோல் இதுதான். இருப்பதை அப்படியே சுடச் சுடச் சொல்பவர்களும், அவரின் படைப்புகளும் இங்கு உள்ளது. நடுத்தரவர்க்கத்தினரின் அன்றாடங்கள், விவசாயி, தொழிலாளி, புலம் பெயர்வினால் ஏற்படும் அடையாள நெருக்கடிகள், நிலத்திணை வாழ்க்கை, சமையலறை பெண்கள் ஆகிய கருக்கள் இங்கிருந்து வந்தவை. தமிழ் இலக்கியத்தின் பெரும்பாலனவர்கள் இங்கு உள்ளனர்; கு. அழகிரிசாமி, கி. ரா, அ. முத்துலிங்கம், ஜி. நாகராஜன், அசோகமித்திரன், அம்பை, நாஞ்சில் நாடன், பூமணி, தோப்பில் முகமது மீரான், அ. மாதவன், திலிப்குமார், பிரபஞ்சன், சீ. முத்துசாமி.
அடுத்து பூமி, Earth. இங்கு நீர்மையும்
உயிர்ப்பும் இருக்கும். உயிர்கள் வாழுமிடம், நெறிகள் பிறக்குமிடம். ஒரு நாகரீகத்தின்
தொடக்கமும் முழுமையும் இங்கு மட்டுமே உள்ளது. இங்குதான் காப்பியங்கள் நிலைகொள்கின்றன.
கம்பன் இங்குதான் வசிக்கிறான். வால்மீகி, வியாசர், சீத்தலை சாத்தனார், இளங்கோ அடிகளின்
இல்லம். வெண்முரசின் இருப்பிடம் இது.
பூமிக்கடுத்து சிவந்த செவ்வாய் கிரகம் Mars. மார்ஸில் அதிகாரத்துக்கு எதிரான குரல்கள், சமுதாய அறங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், வன்முறையில் பிறந்ததும்; மடிந்ததும், போர் உக்கிரங்களை இரத்தம் வடிய அல்லது செம்மலர் விரிய எழுதப்பட்டவை. இப்போதைக்கு சோபா சக்தி, இமையம், பெருமாள் முருகன் நினைவில் எழுகின்றனர்.
ஜுபிட்டர், Jupiter அளவில் மிகப் பெரியது.
தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்த ஜனரஞ்சக எழுத்தும் இங்கு கிடைக்கப்பெறும். கல்கி, சுஜாதா,
ரமணி சந்திரன், நா. பார்த்தசாரதி போன்றவர்கள் எழுதியவை. ஜூப்பிட்டரின் வாயுக்களின்
அடுக்குப்போல இவ்வளவு எழுத்தும் எடையற்றது. பல அடுக்குகளாக உணர்வுகள் இங்கு மலிவாக
விற்கப்படும்.
அடுத்து கவரும் சடெர்ன், Saturn. சடெர்ன்
என்பது அழகு, இளமை, துள்ளல், விழைவு. ஆணும் பெண்ணும் அழகின் காலடியில் விழுந்து கிடப்பது
இங்குதான். இதிலிருந்து தப்பிக்கமுடியாதபடி கோலைச் சுற்றி வெட்டும் சக்கரம் போல அகன்ற
மெல்லிய கூர் வளையம் உள்ளது. இங்கு லா.சா.ரா, தி. ஜானகிராமன், மௌனி, கு.பா.ரா, பாலகுமாரன்
உள்ளனர்.
வரிசையில் அடுத்து யுரனுஸ், Uranus. யுரனுஸ்
மற்ற கோல்களைப் போல ஒரே சீரான வட்டத்தில் செல்லாது. வலப்பக்கமாக சற்றே தாழ்த்திச் செல்லும்.
தன் எழுத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்காத எழுத்தாக, அவர்கள்தம் பாதையை அமைத்துக்கொண்ட
எழுத்தாளர்கள் நினைவில் எழுகின்றனர். யுரனஸில் சாரு நிவேதிதா, poets turn writers யுவன்சந்திரசேகரர், வண்ணதாசன் அடங்குவர்.
இறுதியாக நெப்டியூன், Neptune. இங்கு குளிர்ந்த
நீர், கடல், சமுத்திரம் உள்ளது. உலகத்துக்கு உன்னதமானவன் ஒரே ஒருவன், பெருமாள் இங்குதான்
அறிதுயிலில் உள்ளார். நெப்டியூனில் உன்னத வாயுவான, எதனுடன் ஒப்பிட முடியாத, எதனுடன்
ஒட்டாத ஹீலியம் வளி உள்ளது, அதனுடன் இருப்பது ஹைட்ரஜன் மட்டுமே. தன்னன்தனியனாய் பள்ளிகொள்பவனுக்கு, கண்ணனுக்குப்
படைக்கப்பட்ட, எழுதப்பட்ட அனைத்தும் இங்குதான் உள்ளன. ஆழ்வார்கள் அளித்த பிரபந்தம்
படிப்பவரின் மனதில் அழுத்தும் பனிக்கட்டியான நெப்டியூன். அப்போது சிவன் எங்குள்ளார்?
அவர் ஆகாய கங்கையைச் சடைகொண்டு இறக்கியவுடன், கயிலையில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார். சிவனுக்கு சினம் வராமல்
பார்த்துக் கொள்ளும் வரை நன்று.
நட்சத்திரங்கள் யார்? எவை? அவர்களும் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பவர்கள்தாம். ஆனால், கட்டாயம் எழுத்தாளனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தீவிர வாசகர்களாக இருக்கலாம். அவ்வப்போது, இந்த மண்டலத்தில் தல்ஸ்தாய், தஸ்தவஸ்கி, சிக்மண்ட் ஃப்ராயிட், சிபோன் டி புவா எனும் வேற்று கிரக வாசிகளின் பெயர்கள் கூட வரும். பாரதிக்குக் கூட ஷெல்லி எனும் அயலவனின் கவிதைதான் புத்துயிர்ப்பாக அமைந்ததாம். அவர்கள் பால் வீதியைச் சேர்ந்தவர்கள் அல்ல, பாயாசம் வீதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். விண்மீன் மண்டலத்தில் அவர்கள் குறிப்பாக எந்த மண்டலம் என வானியலாளர்கள் சொல்லலாம், அல்லது வெத்தலையில் மை தடவி பார்க்கலாம்.
வால் நட்சத்திரங்கள் எல்லாம் புதிய புதிய சிந்தனைகள். இவை வந்து எந்த கோலிலும், எழுத்தாளர் மீதும் தாக்கலாம், தாக்காமலும் போகலாம். அந்தக் கோலின் பிரஜை அந்த சிந்தனையை எழுதி தீர்க்கலாம் அல்லது அதை கடந்தும் செல்லலாம். விழுந்த வால் நட்சத்திரத்தின் தடம் இருக்கும். அதற்கடுத்து வரும் தலைமுறை இந்த தடத்திலிருந்து மற்றொன்றை உருவாக்கலாம். கபாடபுரத்துக்கு அடுத்து வந்த விஷ்ணுபுரம் போல.
புலொட்டொவைச், Pluto சூரிய மண்டலத்திலிருந்து வெளியேற்றிவிட்டோம். புலொட்டொவினால், அதன் பாதையில் இருக்கும் விண்கற்கள், பாறைகள், பிற குப்பைகளை அப்புறப்படுத்தி அல்லது உண்டு விழுங்க முடியவில்லை. அதனால், புலொட்டொ ஒரு கோலாக கருதலாகாது. இந்தியாவில் 70 மற்றும் 80களில் அவசர நிலை காலகட்டத்தால் வேலையின்மை, வறுமை சேர்ந்து இலக்கியத்தில் பிரச்சார எழுத்தை தீவிரமாக செலுத்தியது. அதன்பின், பிரச்சார எழுத்து இலக்கிய அழகியல்க்குள் வரவில்லை என விமர்சிக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது, இதில் பிரச்சார தொனி கிடையாது என்றே பலரும் ஆரம்பிப்பதையே கேட்கிறேன்.
ஆனால், ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரே கோலில்
இருக்க வேண்டுமென இல்லை, இங்கு, சித்து விளையாட்டைப் போல, ஒரு கோலிலிருந்து மற்றொரு
கோலுக்குத் தாவலாம். இப்படி ஒரு தமிழிலக்கிய மண்டலம் இயங்கிக் கொண்டிருக்கிறது.











Comments
Post a Comment