சிங்கா [5] : இரசனை விமர்சனம்

சிங்கா

[5]

இரசனை விமர்சனம்

இலக்கிய விமர்சனத்தின் இரண்டாம் வகுப்பான இரசனை வகுப்பு முடிந்தது. களைத்திருந்த எங்களுள் ஒருவர் முழங்கையை மேசையில் ஊன்றியபடியே விளையாட்டாகச் சொன்னார்.

”பெண்களின் படைப்புக்காவது விமர்சனம் கொஞ்சம் மெல்லமாக சொல்லலாம்” [பெருமூச்சு]

”கண்டிப்பா கூடாது” சீரியஸாக சுனில் சார் பதிலளித்தார்.   

வழக்கமான நட்புடன் அனைவரும் சிரித்துவிட்டு அவரவர் வீட்டிற்குக் கிளம்பினோம்.

***

        ஒரு படைப்பை எழுதிய ஒருவரின் தலையைத் தடவிக் கொடுத்து அனுதாபத்துடன் ”கதை ரொம்ப மோசம்லாம் இல்ல, நல்லாதான் வந்திருக்கு” என்றால் அதைவிட அந்த படைப்பாளியைக் கொன்று விட முடியாது என்கிறார் க.நா.சு. ‘இலக்கியத்தில் அனுதாபம் தேவையேயில்லை. அனுதாபத்துடன் அணுகிப் பரிவுடன் விமரிசனம் செய்யவேண்டுமென்பது, அசட்டுச் சித்தாந்தம். நான் எழுதியது  இலக்கியமானால், ஆயிரம் பேர் பரிவு காட்டாவிட்டாலும் இலக்கியம்தான்.’

          இரசனை விமர்சனத்தை முன்வைக்க ஒருவர் ஒரு படைப்பின் முன், முன்முடிவுகளற்ற வெறும் வாசகனாக நிற்க வேண்டும். அதற்குரிய ஆகச்சிறந்த வாசிப்பை அந்தப் படைப்பினுள் செலுத்த வேண்டும். அதன்வழி, கர்த்தாவின் இயக்குவிசையை அல்லது மனோதர்மத்தைக் கண்டடைந்து வாசிப்பவரின் அபிப்பிராயங்களை முன்வைப்பது இரசனை விமர்சனம். இதற்கு ஒரே வழி படைப்புகளை ஒப்பிடுதல். அதன் வழி சிறந்த பட்டியலை உருவாக்க முடியும். அதையே canon என்று சொல்கின்றனர்.

            மு. தளையசிங்கம் எழுதிய தொழுகை வாசிக்கையில் செல்லம்மா தனது கணவனிடம் இல்லாத ஒன்றை முத்துவிடம் காண்பாள். இது அன்னா கரனீனாவில் ஒரு காட்சியை நினைவுப்படுத்தியது. அண்ணன் வீட்டிலிருந்து ஊர் திரும்பும் அன்னா இரயில் நிலையத்தில் தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும், தன் கணவன் கரெனின்னின் பல் வரிசையைக் கவனிப்பாள். அது அவளுக்கு ஏதோ கோணல் மாணலாக இருப்பதாய் தோன்றும். அதுவரை  அன்னாவிற்கு அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. வ்ரோன்ஸ்கியிடம் ஏற்பட்ட ஈர்ப்புக்குப் பின்தான் அன்னாவுக்கு அப்படி தோன்றும் – வரோன்ஸ்கிக்கு சீரான பல் வரிசை.

       வழக்கமாக வகுப்புகளுக்கு முன்னரே சில தகவல்களை முன்னேற்பாடாகப் படித்து வர வேண்டும். இரசனை வகுப்புக்கு க.நா.சு வின் விமரிசனக்கலை கட்டுரையையும், சுனில் கிருஷ்ணனின் விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும்  கட்டுரையையும் வாசித்து வர சொல்லியிருந்தார். அதனால், க.நா.சுவின் விளக்கங்களே ரசனை விமர்சனத்தின் அறிமுகத்திற்கு உதவியது. நல்ல விமர்சனம் என்பது நல்ல படைப்புகளை அழுத்தமாக எடுத்து சொல்வது. இலக்கிய உழு நிலத்தில் நல்லதல்லாததைக் கண்டித்து களைபிடுங்கி நிலம் திருத்தி தருகிறது விமர்சனம் என்கிறார் க.நா.சு. முக்கியமாக, இலக்கிய சிருஷ்டிகளிலே பல கோணங்களை இனங்கண்டு அனுபவிக்க இலக்கிய விமரிசனம்தான் வழிவகுத்து தரவேண்டும்.


இதோ கதவு ! திறந்து உள் செல்லலாம் !

இதோ மலர்! நுகர்ந்து கொள்ளலாம்!

இதோ பாதை! நடக்கலாம்!

என்று, கதையைப் படிக்காதவர்களைப் படிக்கத் தூண்ட வேண்டும். படித்தவர்களுக்குப் புதிய, அசலான கோணத்தை அளிக்க வேண்டும் என்று க.நா.சு சொல்கிறார்.

கபாடபுரம் புதுமைபித்தன் கதைதான் அன்றைய அமர்வின் முதல் பேசுப்பொருளாய் இருந்தது. தமிழ் இலக்கிய சூழலில் எழுத்தாளர்களான அறுவரின் விமர்சனங்களைச் சுனில் சார் பகிர்ந்தார்.

கபாடபுரம் கதை மரணத்தின் விளிம்பில் நின்று அறிவின் வரையறையைக் கேட்கிறது. ‘காலத்தை எதிர்த்து நிற்க நினைக்கும் ஒருவனுடைய உடம்பு அனாவசியம்’ என்று சொல்லும் உடலற்ற தலையின் குரலில் புதுமைபித்தன் என்ற சிருஷ்டிகர்த்தாவின் லட்சியமும் ஒலிக்கிறது. தமிழ் நவீன இலக்கிய சரித்திரமே. சித்தம் விடுக்கும் சுளீர் சவுக்கடி – அன்று இரவு – ஓசையில்தானே துவங்குகிறது.

மேலுள்ள பத்தி ஷங்கர்ராமசுப்பிரமணியன் கூறியதாகும். அதில் அவர், புதுமைபித்தனின் கதைகளையும் வரிகளையும் ஒட்டுமொத்தமாகப் புதுமைபித்தனையே ஓர் ஆளுமையாக கொண்டு படைப்பை எதிர்கொள்கிறார். இவ்வகையான விமர்சனம் ஒரு எழுத்தாளரின் தனி வாழ்க்கையைப் படைப்புடன் பொருத்திப் பார்த்தல் என்பதாகும் – biographical criticism.

கபாடபுரம் ஒரு வரலாற்று மிகை கற்பனை. ஒரு கனவுபோல முற்றிலும் குறியீடுகள் பிம்பங்கள் படிமங்கள் வழியாக நகர்கிறது. கபாடபுரத்தை புராண அழகியல் சாயல் கொண்ட ஆக்கம் எனலாம்.

படியிறங்கி செல்லும் கதைசொல்லி. அந்த ஆழம் தென் திசையில் கடல் கொண்ட தென்னாட்டில் இருப்பதாக ஏன் வெளிவருகிறது? இந்த உருவகத்தைப் புதுமைபித்தன் எங்கிருந்து பெற்றார்? கடல் கொண்ட தென்னாடு என்ற பெரும் உருவகத்தைத் தமிழ்க் கலாச்சார மனம் புனைந்து வளர்த்து எடுத்துக் கொண்டமைக்கான காரணங்களை சு.கி ஜெயகர்னின்குமரி நில நீட்சி’ என்ற நூலில் காண்கிறோம். புதுமை பித்தன் குமரிக் கண்டம் எனும் கருதுகோளின், வேளாளர்களின் கூட்டு மன இயக்கத்தில் பங்குகொண்டார். தமிழ், சைவம் இரண்டையும் கற்பனைக்கும் எட்டாத வரலாற்று, ஆழ்மன ஆழத்தின் கொண்டு சென்று நிறுத்துகிறது புதுமைபித்தனின் புனைவு.

இந்தப் பார்வை சமூக காரணிகளைக் கொண்டு புதுமைபித்தனை விமர்சிக்க முயல்கிறது. இதை சொன்னவரைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

பெருந்தேவி கபாடபுரத்திற்கு முக்கியமான நீண்டதொரு விமர்சனம் எழுதியிருக்கிறார். சுருக்கமாக;

கடல் கொண்ட கோவிலில் பலிபீடத்தில் விரிந்த கூந்தலையுடைய பெண் சிரசின் முக்கியத்துவத்தைப்  புரிந்து கொள்ள மாரியம்மன் புராணம் – ஜமதக்னி புரிதல் அவசியம் என்கிறார். ஜமதக்னியின் மனைவி, ரேணுகா ஆற்றில் நீர் எடுக்கச் செல்கிறார். நீரில் கந்தர்வனின் பிம்பம் தெரிகிறது. கந்தர்வனின் அழகை இரசிக்கிறார். அதனால் ரேணுகாவின் ‘கற்பு’ பிழைப்படுகிறது. அதற்கான தண்டனையாக ரேணுகாவின் நான்காம் மகன், பரசுராமன் தாயின் தலையைத் துண்டிக்கிறார். இந்தக் கதை பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னாலான கேரள உற்பத்தி எனும் நூலில் சொல்லப்படுகிறது என்று பெருந்தேவி சொல்கிறார். மாரியம்மன் – ஜமதக்னி கதையைப் போகிற போக்கில் சொல்லாமல், கபாடபுரத்தில் வரும் கோவில் கேரள பாணியில் இருப்பதையும் சுட்டி காட்டுகிறார்.

ஆணும் பெண்ணும் எதிர்பாலினத்தவர்கள். எதிர்பாலியல் குடும்ப நிறுவனம் நியதிகளுக்கு உட்பட்ட வம்ச விருத்தி ஏற்பாடு. கர்பேந்திரத்தைத் தாக்குதல் என்பது பிள்ளை பேறு ஏற்பாட்டைத் தாக்குதல். ஜமதக்னி கதையில், சிவனின் அம்சமான ஜமதக்னிக்கு  கோபம் வருவது போல, கர்பேந்திரம் தாக்கப்பட்டதும் சிவனுக்குக் கோபம் வருகிறது.

ஏன் கோபம் வருகிறது? அதன் பின் ஏன் ஊழி காலம் தொடங்கியது? கர்பேந்திரத்தைத் தாக்கியவுடன் பலியாக்க வைத்திருந்த கன்னியை அழைத்துக் கொண்டு கடலுக்கு ஓடிப்போவதென்பது, பிள்ளை பேற்றின் முக்கியத்துவத்தை, பாலின்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் போது, அது ஒழுக்கப் பிறழ்வாகக் கருதப்படுகிறது. அங்குதான் சிவனுக்கு சினம் வந்து அழிவு தொடங்குகிறது.

பலிபீடத்தித்தில் இருக்கும் பெண்ணின் தலை ரேணுகாவின் தலையை ஒத்த உருவகப் பிரதிமமாக வருகிறது. வம்சாவளியில் ஒழுங்குபடுத்தப்பட்ட இனப்பெருக்கத்தை முன்னிட்டு சமூக குடும்ப நியதிகளுக்கு ஒரு பெண் கட்டுப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக பலிபீடத்திலுள்ள கன்னியின் தலையை அர்த்தப்படுத்த முடியும்.

கதையின் ஆரம்பத்தில் இப்படி ஒரு வரி; ‘அந்தக் கோயிலில் அந்த அர்த்த ஜாமத்தில் இப்படி எண்ணமிட்டுப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த காரியமா அல்லது அதற்கும் அப்பால், அதற்கும் அப்பால் என வெங்காயத் தோல் உரித்துக்கொண்டே இருக்கும் அந்த விவகாரத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சியா’ என என்னால் நிர்ணயிக்க முடியவில்லை…’ அந்த விவகாரமென்பதற்கு கதையில் கூறப்படும் முன் கதையான பிள்ளை பேற்றுக்கும் பாலின்பத்திற்கும் இடையே இருக்கும் காலதீதமான முரண்.

பெருந்தேவியின் விமர்சனத்திலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? முதலில் அவரது வாசிப்பு. இரண்டாவது, எவ்வகை விமர்சனம் என்பது. பெருந்தேவியின் விமர்சனத்தில் புராணமும் சமூக காரணங்களும் வருகிறது. மேலே இருக்கும் மூவரின் விமர்சனம் முடிவுகளோ தீர்ப்புகளோ அல்ல.

இவ்வகை வாசிப்பும் உச்சக்கட்ட வாசிப்பும் அல்ல. அதற்கான காரணம், விமர்சனம் எல்லைக்கு உட்பட்டதாகும். இலக்கிய விமர்சனம் சமகாலம் சார்ந்தது, அறிவார்ந்தது. இலக்கியம் காலத்தின் எல்லைகளையும் அறிவின் எல்லைகளையும் மீறி இயங்கும் தன்மை கொண்டது. இவற்றை சுனில் சார் சொன்னார். அதையே க.நா.சு ‘இலக்கிய விமரிசகன் காலம் செய்கிற வேலையைத் தனக்கெட்டுகிற வகையில் செய்கிறான்’ எனச் சொல்லி சென்றுள்ளார்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனைய உயர்வு

விமர்சனத்தில் செய்யக்கூடாதவை என்றும் சிலது உள்ளன. கதையில் இருப்பதை சொல்ல வேண்டும். ஆனால், ’பட்டணத்து பால்காரனைப்’ போல பாலில் நீருற்றி சொல்லுதல் கூடாது. கதையில் இல்லாதவற்றை, இப்படி எழுதியிருக்கலாம், அதை தவிர்த்திருக்கலாம் என்று தான் எழுத விரும்பும் படைப்புக்கு விமர்சனம் எழுத கூடாது.

விமர்சனத்தில் அதிகாரமும் அரசியலும் உள்ளது. பிரச்சாரம் இலக்கியத்தில் கூடாது என்பதே ஒரு அரசியல்தாம். விமர்சனத்தின் வகைமாதிரிகள் உண்டு; அபிப்பிராயம் என்பது இலக்கிய ஆக்கம் கிளர்த்திய சிந்தனை அல்லது எதிர்வினை. மதிப்புரை என்பது இலக்கிய ஆக்கத்தை அறிமுகப்படுத்துவது. விமர்சனம் என்பது படைப்பின் தனித்தன்மையை இலக்கிய பரப்பில் படைப்பின் இடத்தைச் சுட்டுவது.

கபாடபுரம் கலந்துரையாடலில் எனக்கு பெருந்தேவியின் விமர்சனம் கர்த்தாவின் சவால், சிரமம், திகைப்பு, சரியும் தோல்வி, உவகை மற்றும் பைத்திய நிலையை நெருங்குவதாகத் தோன்றியது. இன்னொரு விஷயம், பெருந்தேவியின் விமர்சனம் ஃபெமினிஸ்ட் பார்வைவில் வந்த முக்கிய விமர்சனம் என்றார் சுனில் சார். 

கபாடபுரத்தை அடுத்து களப எயிறுஉமா கதிர் – கதையும் கலந்துரையாடினோம். அப்போது, ஒருவர் கேட்டார். ”ஏன் சுனில் உங்களுக்கு மிகு புனைவுனா ரொம்ப பிடிக்குமா?, இரண்டு கதையும் அப்படித்தான் எடுத்திருக்கீங்க?”

”மிகு புனைவு எதார்த்தத்திலிருந்து கற்பனையால விரியுது அதான்” என்று சார் பதிலளித்தார்.

அன்றைய வகுப்புக்குப் பின், வகுப்பை முழுமையாக கிரகித்துக் கொண்டோமா எனும் குழப்ப, பதற்ற மனநிலையுடன் நான் வீடு திரும்பினேன். 

பி.கு: இந்த ஒரே வகுப்புக்குதான் நான் நேரத்துடன், அழகாக உடை உடுத்தி வந்தேன். ஆனால், இந்த வகுப்பில் படம் எடுக்கவில்லை. 

  

 

 

 

Comments