சிங்கா [4] தமிழ் குறுங்கதைகள்
சிங்கா
[4]
தமிழ்
குறுங்கதைகள்
பாரதியினது
‘ஆனைக்கால் உதை’ கதையைத்தான் தமிழின் முதல் நவீன குறுங்கதையாக வாசிக்க முடியுமென்கிறார்,
சார். கதையில் ஆனைக்கால் வியாதி வந்த ஒரு பழக்கடை
வியாபாரியும் அவரிடம் வம்பிழுக்கும், சுட்டி செய்யும் குழந்தை குழாம் மட்டுமே உள்ளனர்.
பள்ளிக்குச் செல்லும் வழியில் இவரது பழக்கடை உள்ளது. பழங்களைத் திருட எத்தனிக்கும்
சிறுவர்கள்; ஆனால், வியாபாரியின் பெருத்த உடலைப் பார்த்து பயம். ஒரு நாள், ஒரு சிறுவன்
ஒரு மாம்பழத்தைத் திருடிவிடுகிறான். பழக்கடைகாரர் சிரமத்துடன் அடி எடுத்து ஒரு உதை
வைக்கிறார். அந்த உதை சிறுவனுக்கு மெத்தென்று உள்ளது. சிறுவன் ”அட, எல்லோரும் வாங்கடா!
எலும்பில்லை; வெறும் சதை!” என்கிறான்.
இதுதான்
பாரதியார் கதையின் சாரம். இது எப்படி குறுங்கதையாகிறது? குறுக்கி எழுதப்பட்டால் எல்லாமே
குறுங்கதைகளாகிவிடுமா என்ன?
***
தமிழ் குறுங்கதைகள்
வகுப்பில் இரண்டு விசயம் நடந்துள்ளது. ஒன்று, வழக்கமான கதை கலந்துரையாடல். இரண்டு,
சொந்த குறுங்கதைக்கான விமர்சன கலந்துரையாடல்.
இந்த வகுப்பில்
தமிழ் சூழலில் இருக்கும் பல்வேறான கதைகளின் வடிவங்கள் எடுத்துகாட்டப்பட்டன. எங்கும்
மரபுக்குத் தான் முதலிடம். மற்றவை அதன் தொடர்ச்சியாக அதன் பின்னால் வால் பிடித்து வருபவை.
அவ்வகையில் பெருந்தேவியின்
‘கடைசியில்’ கதை, தொன்ம மறு ஆக்க கதைகளுள் ஒன்று. ஊழிக்கால பேரழிவின் போது, ஆலிலையில்
வரவேண்டிய கண்ணன் அதற்குப் பதிலாக வேறொன்றில் வருகிறார். அதனால், தொன்மம் தலைகீழாக்கப்
படுகிறது. முதலில், நான் இக்கதையை சுற்றுசூழல் மாசு எனும் கோணத்தில் தான் வாசித்தேன்.
சூழலியல் புனைவாகவும் வாசிக்கலாம். எழுத்தாளர், சாட்சியற்ற ஊழி கூத்திற்கு கண்ணன் நெகிழியில்
மிதந்து வரும் குழந்தையாகச் சொல்லி சாட்சியாகிறார். தொன்மத்திலிருந்து ஒரு தாவல் நிகழ்கிறது.
அதனால், இது ‘மின்னல்வெட்டு’ கதையாகும். அதுவும் குறுங்கதையின் சாத்தியமே. இதை தற்சுட்டு
கதைகள் எனவும் வகைப்படுத்தலாம் என்கிறார். இதற்கு பண்பாட்டு அறிதல் கொஞ்சம் அவசியம்.
வெறும் உருவகத்தைச்
சொல்லி செல்லும் குறுங்கதைகளும் உள்ளன. சித்ரன் எழுதிய ‘விடுதலை’ ஒர் உதாரணம்.
சங்கிலியிலிருந்து
விடுபட்ட நாயொன்று என்ன செய்வதெனத் தெரியாமல் குரைத்துக் கொண்டிருந்தது. அவ்வழியை யாரேனும்
கடக்கையில் உங்களுக்கு என் மேய்ப்பராய் இருக்க விருப்பமா என அவர்கள் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்து நின்றது. அதன் தோற்றத்தைக் கண்டு அஞ்சியவர்கள் இயல்பாய் இருப்பதான உடல்ம மொழியோடு அவ்விடத்தில் நடையைத்
துரிதமாக்கினர். ஒவ்வொரு முறையும் தனித்து விடப் படுகையில் அதன் குரைப்பொலியின் அதிர்வெண் உச்சத்தை நோக்கிச் செல்ல தொலைவில் வந்தவர்கள் மாற்று வழியைத்
தேர்ந்தெடுத்தனர். மீட்பரற்ற நாய் ஒன்று அத்துவான வெளியில் வெறும் குரைப்பொலியாய்க் கரைந்தது.
ஒரு அவிழ்த்துவிடப்பட்ட நாயைக் கொண்டு
எழுதப்பட்ட கதை. ஆழமான வேறு ஒன்றைச் சுட்டுவதற்கு உருவகத்தைப் பயன்படுத்துவது. இதில்
சார், ஒரு குறுங்கதையின் தலைப்பு என்னவென்று கவனிக்க வேண்டும். இந்த குறுங்கதையின்
பெயர் ‘விடுதலை’. எவரின் விடுதலை? யாரிடமிருந்து விடுதலை என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள
வேண்டும் என்கிறார்.
இந்த
வகுப்பின் முக்கிய படிப்பினையாக இது எனக்கு அமைந்தது. இதுவரையில் ஒரு கதையை வாசித்துவிட்டு
அதில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வேன். இதன்பின், கொஞ்சமாவது
அதைத்தாண்டி யோசிக்க முயல்வேன்.
அப்போது ஒவ்வொரு
கதைக்கும் தலைப்பு மிக அவசியம். அப்படிதானே? அப்போதுதான் யுவன் சந்திரசேகரர், உள்ளே
வருகிறார். யுவன் தலைப்பிலாதவையென கதைகள் எழுதியுள்ளார். அங்கு எப்படி கதைகள் குறுங்கதைகளென்னும்
வடிவத்தின் கீழ் வருகின்றன?
பல சிறிய சிறுகதைகள்
குறுங்கதைகளாக உள்ளன. சில கணங்கள் மட்டும் நீடிக்கும் மின்னல் வெட்டுகள் இல்லாமல்,
அழுத்தமான கருக்கள் உடையதாக இவை உள்ளன. அதில்
கே.என். செந்தில் எழுதிய ‘பரிசு’ எனக்குப் பிடித்தமான கதைகளுள் ஒன்று. இதில்
இரண்டே கதாபாத்திரங்கள். கதை நாயகனும், நாதஸ்வர வித்வானும். திருமணமாகாதவர்கள் திருமணங்களுக்குச்
சென்றால் திரும்ப திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டு புண்படும் நிலை மட்டுமே கதை நாயகனின்
அம்சமாக வருகிறது. அங்கு ஒரு நாதஸ்வர வித்வான் வாசிக்கிறார். அவர் வாசிப்பதில், அவன்
கண் கலங்குகிறான். இருவருக்கும் ஒரு கணம் பார்வை பரிமாற்றம் ஏற்படுகிறது. அவன் கொண்டு
வந்த பரிசை வித்வானின் மேடையில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். கதை முடிந்தது.
இக்கதை சிறுகதையாகவோ,
நாவலின் உச்ச காட்சியாகவோ வளர்த்தெடுக்க சாத்தியமான கரு என்கிறார் சார். ஆனால், நமக்கு
ஒரேயொரு கணம் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது, அவர் என்ன இராகம் வாசித்தார், என ஒன்றும்
சொல்லப்படவில்லை. ஆனால், புண்படுத்தும் சமூகமும் அதற்கு ஆறுதல் அளிக்கும் கலையும் கதையின்
கரு அமைகிறது.
தமிழில் பெருந்தேவியின்
கதைகள் குறித்து அதிகம் பேசப்பட்டது. அவரின் ‘உரையாடல்’, ‘படுக்கையறை’ கதைகள் அனைவரையும்
வெகுவாக கவர்ந்திருக்க வேண்டும்.
அமர்வின் இரண்டாம்
பகுதியில், அவரவர் எழுதி வந்த கதைகளை அனைவரின் முன் படித்து காட்டி, கதை குறுங்கதையாக
முழுமையடைந்ததா என விமர்சனம் நடைபெற்றது. இதை அயல் குறுங்கதை வகுப்பின் போதே சொல்லிவிட்டார்.
தமிழ் குறுங்கதை நடக்கவிருந்த நாளில் எனது பட்டமளிப்பு விழா இருந்தது. அதனால், நான்
வழக்கமான எனது ஆர்வக்கோளாறினால் ஒரு கதையை அப்போதே எழுதினேன். பத்தரை மணி ஓய்வின் போது
சாரிடம் கொடுத்தேன். அவர் மௌனமாகப் படித்து சிரித்தார்.
‘செத்தோம்’ நான்
மனதில்.
நான்
எழுதியதை அனைவர் முன்னிலையில் வாசிக்க சொன்னார்.
”தாக்குதலுக்குத் தயாரா” என்பதுபோல் ஒன்றைக் கேட்டார். எனக்கு அப்போது சரியாகப்
புரியவில்லை.
மதுரை மாரியம்மனும்
மாச்சாப் மாரியம்மனும் Cosmopolitan சிங்கப்பூர் சிட்டியில் சந்தித்துக் கொண்டனர்.
பக்தர்களை ஆசிர்வதித்தப்பின் அவர்களுக்குள் சிறு உரையாடல்.
”அப்றம் என்னடி
சாப்டே”, என்றாள் மாச்சாப் மாரியாயீ.
”வழக்கம்போலதான்;
கூழ்… நீ என்ன சாப்பிட்ட?” பதிலளித்து மறு கேள்வி கேட்டாள் மதுரை ஆயி.
”சாம்பாரும்
‘தௌ’[1]
சம்பாலும்தான்”, என்று உண்ட நிறைவில் பதிலளித்தாள் மாச்சாப் மாரி.
”ஏது!!”-மதுரை
மாரியம்மன் விழித்தார்.
”உரையாடல்
நல்லா இருக்கு இன்னும் கதையா வரலையோ” ஒரு குரல் கேட்டது.
”எல்லாரையும்
இங்க கொண்டு வந்து பேச வெச்சது நல்லாயிருக்கு, ஆனா என்ன சொல்ல வரீங்க?” என்றது மற்றொரு
குரல்.
மற்றொருவர்
வலுக்கட்டாயமாகச் சிரித்துக் கொண்டே ”இப்போ, மாச்சாப்னு என்னமோ சொன்னிங்க, அது வாசகர்களுக்குத்
தெரியாது. அதுனால வாகர்களுக்குப் புரியாது” என்றார்.
நான்
மனதில் இப்படி நினைத்துக் கொண்டேன். ‘அது எப்படி என் பிரச்சனையாகும்? நான் அயோத்திய
பாத்துருக்கேனா, இல்ல பீட்டஸ்பர்க்க பாத்துக்கேனா?’
அனைவரும்
தாக்கியப்பின் கடைசி அம்பு எழுந்து வந்தது. சார் சொன்னார்;
”கிரிடிவிட்டி நல்லாயிருக்கு ஆனா
கதையா இல்ல.
”அட! -னு இல்ல, So? அப்படிதான் இருக்கு”
என்றார்.
எனக்கு அப்போது தாக்குதல் என்பதற்கான
பொருள் முழுமையாக, ஜாலியாக விளங்கியது.
பாரதியின் கதை எப்படி குறுங்கதையாயிற்று?
முண்டாசுக்காரர் எழுதிய ஆனைக்கால் வியாபாரி குழந்தைகளைப் பயமுறுத்தும் கால் உடையவராகவே
உள்ளார். ஒரு பையன் வியாபாரியிடம் ஒரு உதை வாங்கியவுடன் அது வெறும் சதைதான், எலும்பைப்
போல வலுவுடையது அல்ல எனும் திறப்பு கிடைக்கிறது. அதனால் அது ஒரு குட்டி குறுங்கதை.
அடுத்த கட்டுரையில் ரசனை விமர்சனம்
அடிப்படை வகுப்பின் குறிப்புகளை எழுதுவேன்.



Comments
Post a Comment