சிங்கா [3] அயல் குறுங்கதைகள்

சிங்கா

[3]

அயல் குறுங்கதைகள்

            பல இலக்கிய ஆசிரியர்கள் குறுங்கதைக்கு பொருள் அளித்திருந்தனர். சுழல் மண்டலத்தில் நாவலை ஒரு பாலூட்டியுடனும், சிறுகதையைப் பறவையுடன் அல்லது ஒரு மீனுடன் ஒப்பிட்டால், குறுங்கதையை ஒரு பூச்சியாக கருதலாம். அதுவும் இருளில் ஒளிவிடும் மின்மினி பூச்சியைப் போல. குறுங்கதைகள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையைப் பொருத்தே ஒரு கதையை வரையறுக்க வேண்டும். அதில், ஜிஒர்ஜியொ மங்காநெலி, Giorgio Manganelli என்பவர் குறுங்கதையைக் காற்று வெளியேற்றப்பட்ட நாவல் என்கிறார்.

  எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் கவிதைக்குரிய மொழிச்செறிவும், சிறுகதைக்குரிய கூர்மையான கதைதருணமும் அமைந்து வரும் குறுங்கதைகளே கலாப்பூர்வமான வெற்றியை எய்தும் என்கிறார்.

           நுண்மையான உணர்வுகளையும் புரிதல்களையும் சித்திரமாகத் தரும் அழகியல் கொண்டது என எழுத்தாளர் கனகலதா குறுங்கதைகளை வரையறை செய்கிறார். பின்வருவது ஹெமிங்வேவின் பிரபலமான ஒருவரி கதை.

            ‘விற்பனைக்கு: குழந்தையின் காலணிகள், அணியவே இல்லை.’

            ‘For sales: baby shoes never worn’


இதே போன்ற சம வாசிப்பனுபவத்தைத் தர இயல்வது லிடியா டேவிஸின் ‘குழந்தை’.

அவள் குழந்தையின் மீது குனிந்து படுத்திருந்தாள்.

அவளால் குழந்தையை விட்டுச் செல்ல முடியாது.

ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி   கிடத்திவைக்கப்பட்டிருந்தது.

அவள் இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள்,

கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும் உயிருடனிருக்கும்போது, புகைப்படத்திற்கு அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும் இயலாது.

அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் ”நான் கேமராவை எடுத்து வருகிறேன்” குழந்தையிடம் "அசையாதே" என சொல்வது போல.

 

            இவ்விரு கதைகளும் ஒர் உச்ச தருணத்தில் முட்டி நின்றுவிடுகின்றன. கதை, மெல்ல தரையிறங்கி விடுவதோ, நகர செய்வதோயில்லை. டின்டி மூரே, Dinty Moore இதுவே குறுங்கதையின் தன்மை என்கிறார்.

                              

            குறுங்கதைகளின் வடிவ பரிணாமத்துக்குள், நீதி கதைகள் (fables), சிறிய சிறுகதைகள் (short short-fictions) , சடுதித்தன்மை கதைகள் (sudden fiction) , நுண்கதைகள் (micro fiction) , ஒளி பாய்ச்சும் கதைகளென (flash fiction) அடங்கியுள்ளன. ஏன் குறுங்கதைகள் எழுதப்படுகின்றன என்றும், பேசப்பட்டது. அருகிவரும் ஊடகப் பெருக்கத்தால், குறுங்கதைகள் சமூக ஊடக இலக்கியத்தோருக்கான வடிவமாக ஆகியது என்று ஒரு பேச்சு வந்தது. ஆனால், சார்லஸ் பேக்ஸ்டர்  இந்த கவன சிதைவு கருதுகோளை ஏற்கவில்லை. ஹைக்கூ குறித்து எவரும் இந்த கோட்பாட்டைப் பேசவில்லை என்கிறார். எனவே, குறுகிய வடிவத்தை உய்த்துக்கொள்ள அதிக கவனம் தேவை என்பது நிறுவப்பட்டது. அதோடு, குறுங்கதை என்பது, கவிதையாக முடியாத உரைநடை.

‘உன்னைக் காப்பாற்றியதே, கடல் நஞ்சாகிவிடாமல் இருக்கதான்’


குறுங்கதை இறுக்கமும் செறிவும் உடையது. அதோடு, புகையைப் போல தற்காலிகமானது. இந்த எதிரெதிர் தன்மைகளை அணுகுண்டின் தாக்கமாகவும், தீபாவளி பட்டாசின் தற்காலிக புகையாகவும் உருவகப் படுத்தலாம். ஆலென் ஆஷ்லியின் ‘எண்பத்தி ஒன்று நினைவிருக்கிறதா?’ ஒரு புகையைச் சொல்ல உதாரணம்;

ஆம் எனக்கு எண்பத்தி ஒன்று நினைவிருக்கிறது. போராட்டம் நிறைந்த வருடம்.

போக்குவரத்து அமைப்பு சிதைந்தது.

பணியாளர்களும் நிர்வாகமும் முட்டிக்கொண்டனர். பணியிடத்தில் எந்திரமயமாக்குதல் குறித்த அச்சத்தால் இன்னுமதிக வேலையிழப்புகள் நேர்ந்தன.

காற்றின் தரம் மோசமாக இருந்தது. நகர்ப்புறங்களில் நோய் அச்சம்.

அரசுகள் நிலத்தைக் கையகப்படுத்துவதைப் பரிசீலித்தன, சின்ன தூண்டுதல் வந்தால் கூட ராணுவத்தை அனுப்ப தயாராக இருந்தன.

ஊடகம் வாகான வெளிநாட்டு பலியாடுகளைக் கண்டுபிடித்தது.

வேலைக்குச் செல்லும் அக்கறைக்கொள்ள எவருமே இல்லை.

 

நான் ஏன் தாட்சரைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்?

 

நான் 2081 குறித்தும் 1881 குறித்தும் பேசிக்கொண்டிருந்தேன்.’

 

இக்கதையில், பரிசோதனை முயற்சிகள் உள்ளன எனக் கருதுகிறேன். சார், குறுங்கதையில் அதற்கான சாத்தியம் உள்ளதென்றார். இதில் காலமும் வெளியும் குறுக்கப்பட்டுள்ளது. இதுவும் குறுங்கதையின் தன்மைகள்தாம். மார்க்கோ டெனெவியின்ஈக்களின் பிரபு’ மாற்று மெய்மையைக் களமாக்கும் குறுங்கதை. இப்படியாக வகுப்பு மிகவும் வறண்டு, ஆனால் அனைவரும் பங்கெடுக்கும்படி போய்க்கொண்டிருந்தது. எட்முன்டோ கதை வரும் வரை.

            Edmundo Paz Soldan எழுதி Kirk Nessat ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ‘பார்ன்ஸ்’.

இவை எல்லாமே ஏதோ ஒரு பிழை, தனது சிறையில் அடைபட்டிருந்த பார்ன்ஸ் புரிந்துகொண்டார், அவர் உண்மையை சொல்வதே சரியானதாக இருக்கும். எனினும், பின்னர் மங்கலான அறையில், வெளிச்சத்தால் கண்களில் பார்வையற்று போன சமயத்தில், அதிபரை கொன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியபோது, தனது வாழ்வின் சாதாரணத்தன்மை குறித்தும், தனது வாழ்க்கையின் மாபெரும் முக்கியத்துவமின்மை குறித்தும் அவர் சிந்தித்ததன் விளைவாக, முதன்முறையாக எவ்வித பயனும் அற்ற முக்கியத்துவத்தின் எடையை உணர்ந்தவராக, ஆமாம், அதிபரை அவரே கொன்றதாக சொன்னார்.

அதன்பின்னர் தரபாகா படையில் இருந்த இருநூற்றி எண்பத்தியேழு படைவீரர்களை கொன்ற வெடிகுண்டை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். வெறுப்புடன் சிரித்தபடி, பழியை தழுவிக்கொள்வதை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. பின்னர் இடைவெளியே இல்லாமல், பொலிவியாவின் பொருளாதாரம் வீழ காரணமாயிருந்த எரிவாயு குழாயை சிதைத்ததையும், கோச்சா பாம்பா வனப்பகுதியின் தொண்ணூற்றி இரண்டு சதவிகிதத்தை கபளீகரம் செய்த நெருப்பை பற்றவைத்ததையும், பாதிவழியில் பறந்துகொண்டிருந்த நான்கு LAB ஜெட் விமானங்களை வெடிக்க வைத்ததையும், லா பாஸின் வட அமெரிக்க தூதுவரின் மகளை வன்புணர்வு செய்ததையும் ஒப்புக்கொண்டார். மறுநாள் சூரியோதயத்தின்போது அவரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வார்கள் என அறிவித்தார்கள். ஆம், அவரைப்போன்ற வாழ உரிமையற்ற ஒரு மனிதரை அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என அவரும் ஒப்புக்கொண்டார்.

இக்கதையைப் படித்துவிட்டு அனைவரும் ஒரு சராசரி ஆளின் அநியாயப் படுகொலை என்பதுபோல் வருத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். என் வாசிப்பில் அப்படி ஏதும் துன்பமயமாகத் தென்படவில்லை.

‘நாம அப்படி ஒன்னும் வாசிக்கலையே. நம்ம வாசிப்பு பிழையோ?’ மனதில் நான்.

நான் ஏதோ சொல்லவருவதை ஊகித்து வழக்கமாக சாரே என்னை அழைத்தார்.

“பரிமித்தா..?”

”என்னுடைய வாசிப்பு வேற சார். ஹ்ம்ம், இப்போ ஒருத்தன் பிரசிடென்டையே கொலைபண்ணனும்னா அவன் எவ்வளவு பெரிய ஆளா இருக்கனும்? ஒரு சாதாரண சராசரி தான் கொலை பண்ணினான்னு ஒத்துக்கிட்டா நாம எப்படி நம்புறது, நம்பவைக்கிறது. அதுனால, அவன் மேல, தேசத் துரோகினு பழி சுமத்துங்க, நாட்டின் பொருளாதாரத்துக்குத் தடையா இருந்தான்னு பழி சுமத்துங்க, அவன் மேல ஒரு ரேப் கேஸ போடுங்க. ரேப்பா? ஆணா? பொண்ணா? பொண்ணுதான் பொண்ணுதான். நீ என்ன பண்ற அவன் மேல தூதுவரின் பொண்ண, அதுவும் அமெரிக்க தூதுவரின் பொண்ண ரேப் பண்ணிட்டானு கேஸ் போடு. அவனுக்கு ஒரு profile உண்டு பண்ணு, இப்ப பிரசிடன்ட கொலை பண்றதுக்குப் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு” என்றேன்.

”அவனுக்கு ஒரு Portfolio”வ உருவாக்கு” என்றார் ஒரு நண்பர்.

வகுப்பு கலகலப்பானது.

ஓய்வின் போது, பலரும் பல விதமான சிங்கை கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். அன்னியர்களான நானும் சாரும் அதை கேட்டுக் கொண்டிருந்தோம். சிங்கையுள் உடும்பு வந்த கதை, குருவிக்குத் தீனி கொடுக்க முடியாத கதை, சிங்கையில் காக்கைகள் காணமல் போன கதை, சிங்கையில் தைப்பூச திருவிழாக்கள் கதை, ஏதோ ஒரு பெருமாள் கோவிலில் அக்கார வடிசல் போட்டதால், சாரின் கண்களில் ஆனந்த நீர் வந்த கதை, etc etc.

குறுங்கதை வகுப்பு இரு அமர்வுகளாக வைக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு; தமிழ் குறுங்கதைகள் குறித்து அடுத்த பதிவில் எழுதுவேன். 

 

Comments