அறிமுகம்:. கி. பரிமித்தா
நான் பரிமித்தா கிருஷ்ண மூர்த்தி. பிறந்து வளர்ந்தது மலேசியாவின், ஜொகூர் மாநிலம். என் தாயாரின் வாசிப்பு ஆர்வத்தால் எனக்கும் வாசிப்பு தொற்றிக் கொண்டதென நினைக்கிறேன். தொழில்முறை வழக்கறிஞர். மூன்று வருடங்களாக இலக்கிய வாசிப்பில் இருக்கிறேன். முதல் சிறுகதை ‘அந்த கடைகாரர்’ 2019ன் மலாயா பல்கலைகழகத்தின் பேரவை கதைக்கான முதல் பரிசும், ‘916’ சிறுகதை ஆறுதல் பரிசும் பெற்றது. தமிழ்விக்கிக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
2023ல் எனது
ஆகச் சிறந்த இலக்கிய ஈடுபாடுகளைத் தொகுத்துக் கொள்ளும் வகையில் இந்த வலைப்பூவைத் தொடங்கியுள்ளேன்.
(எழுதும் பயிற்சி எனவும் கொள்ளலாம்). 2023ன் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் 1000 மணி
நேர வாசிப்பு ஏற்பாட்டில் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது, எனது வாசிப்பில்
குறைகள் இருப்பதாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. நூலைச் சரிவர புரிந்துக் கொள்கிறேனா
எனும் ஐயம் இருந்தது. இதை எழுத்தாளர் நவீனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில், அவர் அந்தப்
படைப்பைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களையும் வாசிப்பனுபவங்களையும் வாசித்தால், ஒரு புரிதல்
வருமென ஆலோசனை கூறினார்.
இருந்தும் எனக்கு எனது வாசிப்பில் பற்றாக்குறையாகவே இருந்தது. மலேசியாவில் இலக்கிய
சங்கங்கள் அதிகமாகவும், உரையாடல்கள் மிகக் குறைவாகவும் இருந்தது. சரியான நேரத்தில்
நவீன் வல்லினத்தின் ஏற்பாடாக, மாதம் ஒர் எழுத்தாளரின் படைப்புகளைத் தேர்வு செய்து கலந்துரையாடல்
செய்வதாக முயற்சி எடுத்தார். நண்பர்கள் பிரிக்ஃபில்ஸில், கோலாலம்பூரில் நேரடியாகச்
சந்தித்து சிறுகதைகளை விவாதிக்கின்றனர். எனது வசிப்பிடம் காரணமாக என்னால், அக்கூட்டங்களில்
கலந்துக்கொள்ள இயலவில்லை. அதுவும் தொழிலில் கால்வைத்தவுடன், அன்றாடத்தைக் கவனிக்காமல்
இலக்கியத்தை என்னால் தக்கவைத்துக்கொள்ள
இயலாது என நினைத்தேன்.
இதற்கிடையில்,
இணையத்திலும் மூலமாக தமிழ் இலக்கியத்தின் சிறந்த 100 சிறுகதைகளைக் கூட்டுவாசிப்பாக
அயலகத் தமிழர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிகழ்த்தும் சுக்கிரி வாசிப்பு குழுவில்
இணைந்தேன். பிறகு, மரபிலக்கியம் வாசிக்க இம்பர்வாரி செவ்விலக்கிய வாசகர் வட்டத்தில்
கம்பராமாயணம் வாசிக்கிறேன். நேரடியாகச் சந்தித்து வாசித்தால் சிறப்பாக இருக்கும் என்பதில்
மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதே ஆர்வத்துடனும், தீவிரத்துடனும் இணையத்திலும் நண்பர்களுடன்
கூட்டு வாசிப்பை மேற்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் கண்டறிந்த உண்மை.
அதற்கு வாசிப்பில் சம தீவிரமும், ஈடுபாடும் கொண்ட நண்பர்கள் எனக்கமைந்தது எனது நல்லூழ்
என நினைக்கிறேன்.
2023ன் இறுதி
கால் பகுதியில் சிங்கை எழுத்தாளர் லதா, எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் Nanyang Technological
University (NTU) நன்யாங் தொழில்நுடப் பல்கலைகழகத்தின் Asia Creative Writing
Programmeக்காக வந்துள்ளார் எனத் தகவல் கூறினார். சிங்கை எனது வீட்டிலிருந்து நாற்பது
நிமிடம். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நடத்திய அமர்வுகளான தமிழ் அறிவியல் புனைவு, இலக்கிய
விமர்சனம் அறிமுகம், தமிழ் குறுங்கதைகள் அறிமுகம், வரலாற்று புனைவு அறிமுக வகுப்புகளின்
பிரதிபலிப்புகளையும் ஒட்டுமொத்த சிங்கை அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுத உத்தேசம்.
இது காண்டி இது
காலம் – (5346, சுந்தரகாண்டம்)
நண்பர்களுக்கு
நன்றியும், வணக்கங்களும்.
பொங்கல் வாழ்த்துக்கள்.
பரி
ஜொகூர்,

வாழ்த்துக்கள் பரிமிதா தொடர்ந்து எழுதுங்க. வலை பக்கம் நல்ல பயிற்சியை தரும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் பரிமித்தா. நலமா?
ReplyDelete