சிங்கா [2] மணிக்கதவம் தாள் திறவாய்
சிங்கா
[2]
மணிக்கதவம் தாள்
திறவாய்
விமர்சன வகுப்புகள் இரு வாரங்களுக்கு நடைபெற்றன.
இரண்டிற்கும் நான் தாமதமாகத்தான் வந்தேன். அடுத்த வகுப்பிற்க்கு நேரத்துடன் சென்று
விட வேண்டுமென்ற உறுதியுடன் கடந்த வகுப்பிலிருந்து திரும்பினேன்.
காலையில்
வீட்டிலிருந்து கிளம்பி ஜெபி சென்ட்ரல்கு [JB Central] சென்றடைய முப்பது நிமிடங்கள்.
ஜெபி சென்ட்ரலிருந்து வுட்லண்ட்ஸ் [Woodlands]
அடைய மலேசிய சுங்கச் சாவடிக்கு முதலில் செல்ல வேண்டும். பத்து நிமிடம் நடந்து சென்று,
மலேசியனாகிய நான் மலேசியாவிலிருந்து வெளியேறி சிங்கைக்குச் செல்கிறேன் என பதிவு செய்து,
கீழ் இறங்கி 170x சிங்கை பேருந்தில் இடம்பிடிக்க வேண்டும். இதற்குள் மற்றொரு முப்பது
நிமிடமாகிவிடும். பேருந்து சிங்கை-மலேசியாவை இணைக்கும் மேம்பாலத்திலிருந்து வுட்லண்ட்ஸில் இறக்கி விடும்.
சிங்கை
வந்துவிட்டாலும், சோதனை சாவடிகளைக் கடக்க வேண்டும். முதலில், சிங்கையின் சுங்கச் சாவடியில்
கடவுச்சீட்டுடன் என்னைப் பதிவு செய்ய வேண்டும். சிங்கைக்கு யாம் வருகிறோம் என
Imigration & Checkpoints Authority (ICA) செயலியில் சிங்கை அரசாங்கத்திடம் ஒறிரண்டு
தினங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யவேண்டும். அதைச் செய்யத் தவறினால், சிங்கையினுள்
நுழைய முடியாது. சிலர் மறந்துவிடுவர். அதனால், அங்கே நாலைந்து Mac கணினிகள் இலவச இணைய
வசதியுடன் தயாராக இருக்கும். ‘ஒருத்தர் அதைச் செய்ய மறந்திருந்தால்தானே, இவ்வளவு துல்லியமாகத்
தெரியும்? உனக்கெப்படி…? என்னை யாரும் சந்தேகிக்க வேண்டாம், நான் எப்பொழுதுமே அதைச்
செய்ய மறந்ததே….யில்லை’ கைப்பேசி செயலிக்கு முன்னர் whitecard எனும் வெள்ளை அட்டையில்
எழுதிவைத்து, சுங்கை சாவடியில் சிங்கை அதிகாரிகளிடம் கொடுக்கும் பழக்கமிருந்தது. ‘இன்னும்
பயணமே ஆரம்பிக்கவில்லை. பொறுங்கள்.’
வுட்லண்ட்ஸில் நான் போதை பொருள் ஏதும் கடத்தவில்லை என்றும் [சிங்கையில் பேச்சுக்கே இடமில்லை, நேராக தூக்குதான்], நான் ஒரு தீவீரவாதி இல்லை என்றும் சிங்கை அதிகாரிகள் நம்பியபின், மீண்டும் சுங்க சாவடியிலிருந்து வெளியேறி கீழ் இறங்கி, கிராஞ்சி [Kranji] MRT இரயில் நிலையத்திற்கு 170xல் பேருந்து பயணம். இதற்கும் ஒரு முப்பது நிமிடம். கிராஞ்சியில் வந்திறங்கியவுடனே பேக்கரி இருக்கும். அப்போதுதான் எனக்கு வயிறென்று ஒன்று இருப்பது நினைவுக்குவரும். கிராஞ்சியில் அடுத்த இரயில் இத்தனை நிமிடத்தில் வந்துவிடுமெனும் அறிவிப்பு பலகை உள்ளது. MRT விரைவு இரயிலைப் பிடித்து கிழக்கு ஜூரோங் [Jurong East] இரயில் நிலையத்திற்கு ஒரு இருபது நிமிடம். அங்கிருந்து புவனா விஸ்தா [Buona Vista] இரயில் நிலையத்தில் வந்திறங்க பத்து நிமிடம். புவனா விஸ்தா என்றால், இத்தாலிய மொழியில் அழகிய காட்சி எனும் பொருள். அங்கிருந்து மற்றுமொரு பத்து நிமிடம் நடந்து சென்றால், நன்யாங் பல்கலைகல்லூரியில் ஒன்பதாவது மாடியில் எங்கள் வகுப்புகள் நிகழும்.
இப்படியாக, ஒரு நன்னாள் குறுங்கதை வகுப்புக்கு தாமதமின்றி செல்ல வேண்டுமென ஆயத்தமாகி,
ஒன்பது மணி வகுப்புக்கு முன்னேற்பாடாக ஜெபி சென்டரல்கு ஏழுமணிக்கே வந்து சேர்ந்தேன்.
வண்டியைப் பார்கிங்கில் போட்டவுடன்தான், நான் எனது கடவுச்சீட்டை எடுத்து வரவில்லை என்று
பட்டது. உடல் சூடாக ஆரம்பித்தது. ‘நிஜமாகவே ஹென்பேக்கில் இல்லையா?’ இரத்தம் உடல் முழுவுதும்
பரவி, வேர்த்துக் கொட்டியது. அந்த இருள் படிந்த பார்கிங்குள் இருப்பது எனக்கு சுண்ணாம்புக்
குகைக்குள் இருப்பது போல் இருந்தது. தொண்டை கனமெடுத்தது. வீட்டிற்குச் சென்று வந்தால்,
வகுப்புக்கு ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்வேன். ‘சீ, பொறுப்புங்கிறதே கிடையாது. பாஸ்போட்
இல்லாம போகறதுக்கு நீ என்ன இந்த நாட்டு பிரதம மந்திரியா இல்ல சுல்தானா! அறிவில்ல!’.
மீண்டும் ஜெபி நகரிலிருந்து வீடு. நெடுஞ்சாலையில், முடிந்த அளவுக்கு வேகமாக
பறந்தேன். எனது இருதய துடிப்பின்றி வேறு ஏதும் எனக்கு கேட்கவில்லை. நான் அதிகம் பிரார்த்தனை செய்வதில்லை என்றாலும், பிரார்த்தனையில் நம்பிக்கை உள்ளது.
அன்று நான் முழுதாக வீடு திரும்பியது என் பெற்றோரின் பிரார்த்தனை பலனாக இருக்கலாம்
என்பது என் அபிப்பிராயம். வண்டியை வீட்டின் முன் நிறுத்திவிடாமல் பார்க்கிங் செய்து,
மேல்மாடிக்கு ஓடினேன். சமையலறையில், பெருக்கிக் கொண்டிருந்த பணிப்பெண் பல வீட்டில்
பல விதமான லூசுகளைப் பார்த்த அனுபவமிருக்கலாம்.
நல்லவேளை, அவர் என்னைக் கண்டுக்கவேயில்லை. என் அறையின் கொண்டியைத் திருகினேன். பூட்டியிருந்தது.
‘யார் பூட்டினது?, ஏன்?, யாருக்கு இந்த தேவையில்லாத வேலை?’ கீழிறங்கி அறைகளின் சாவியைத்
தேடினேன். காணவில்லை. கண்டிப்பாக அப்பாதான்! புதிய பணிப்பெண் வரவும் இந்த வேலையை அவர்தான்
செய்திருப்பார். அப்பாவிடம் காரணமில்லாத கோபம் வந்தது. போனில் அழைத்து சாவி எங்கே எனக்
கேட்டேன். ”என் ரூம்ல புக்ஸ தவிர ஒரு மண்ணும் கிடையாது. மிஞ்சிப் போனா லாப்டாப்!”.
வீட்டிலிருந்து
அப்பாவிடம் சென்றேன். அவர், அதிகாலையிலேயே வீட்டை விட்டு சென்றவள் ஏன் திரும்பி வந்தாள்,
ஏன் கத்துகிறாள் என்ற குழப்பத்துடன், தோட்டத்திலிருந்து வெளியாகி, சாவி கொத்துடன் நின்றார்.
வண்டியில் இருந்து வெளியாகமலே, சாவி கொத்தைக் கொத்தாகப் பிடிங்கினேன். ”எதுக்கு அழுவுற?
மெதுவா போ” அப்பாவின் குரலில் எதிர்பாராமை வெளிப்பட்டது. கண நேரம் நிற்கவில்லை. பத்து நிமிடங்களில் அம்மா அழைத்தார். எடுக்கவில்லை. எனக்குப்
பித்துதான் பிடித்திருந்தது. கற்க விழைவிருந்தும் அதன் தளைகளை முன்னெச்சரிக்கையாக களையாமல், அதைக் எதிர் கொள்ளும் போது கல்வியைத் தவறவிடுகிறேன்
என்ற பிரக்ஞையால் துலங்கும் வலியானது, தொண்டைக்குழியில் குண்டூசியை வைத்து அழுத்துவதற்கு
சமானம். அங்கிருந்து மீண்டும் வீட்டிற்குச் சென்றேன். பணிப்பெண் நின்ற இடத்திலேயே நின்று
கொண்டிருந்தார். அறை கதவைத் திறந்து எனது மேசையின் வலதில் இருக்கும் முதல் டராவரைத்
திறந்தேன். இருண்ட ட்ராவருக்குள் சிவப்பு நிற கடவுச்சீட்டு. அதன் முகப்பு அட்டையில்
மலேசிய தேசிய சின்னமும் மலேசியா எனும் பெயரும் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தன.
சூரிய ஒளிபட்டு பளிச்சென்று என்னைப் பார்த்து இளித்தது. இந்திரசித்தனின் காலாட்படையைப்
பற்றி ஒரு உவமை உள்ளது. இருள் சூரியனிடம் தோற்று சூரியனைப் பழிவாங்க தவமிருந்து பெரிய
கரிய அரக்கர்களாக வருகிறது. அவ்வரக்கர்கள் சூரிய கதிர்களைக் கவர்ந்து கொள்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் வெளிச்சமே சூரிய கதிர்களாகின்றன. பெரிய இருள்
சூரிய கதிர்களைச் சிறுமை செய்கிறது. பரிதியைக் கேலி செய்வது போல என் பாஸ்போர்ட் இருளிலிருவ்து தங்க பொறி எழுத்து மின்னியது.
அதன் இறுதி அட்டையில் Nets பண அட்டையைச் சொருகியிருந்தேன். பண அட்டை இருக்கிறதாவென்று
உறுதி செய்து கொண்டேன். சிங்கை டாலர் கொண்ட இந்த அட்டை ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கானது.
உடைந்த
வல்இருள் நோற்று, பல் லுறுக் கொடு, அக்கதிர் குழாங்கள்
மிடைந்தன
மிலைச்சியாங்கு, மெய் அணி பலவும் மின்ன, [5754]
குறுங்கதைகள்
அறிமுகம் வகுப்பிற்கு நான் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்று சேர்ந்தேன். என்னை வழக்கமாக
அனைவரும் ஒரு முறை பார்த்து விட்டு, வகுப்பைக் கவனித்தனர். அன்று, சிங்கையின் மூத்த
எழுத்தாளர், பொன். சுந்தரராசு கூட
இருந்தார். சுனில் சார் வழக்கம்போல, ‘வாங்க’ என்றார். அன்று வகுப்பிற்குப் படித்து
வரச் சொன்ன கதைகளைக் குனிந்தபடியே மேசை மீது வைத்தேன். நான் வந்த சிறு பொழுதிலே, அறிமுகம்
வகுப்பு முடிந்து பத்தரைக்கு ஓய்வு நேரம் வந்தது.
ஓய்வின்
போது, சுனில் சார் என் மேசை அருகே வந்து,
“லேட்டாயிருச்சா”
என முறுவலித்துக் கொண்டே கேட்டார்.
சோர்ந்து
படுத்திருக்கும் நாய்குட்டி உரிமையாளரைப் பார்த்து வாலாட்டுவதைப்போல்;
“சாரி
சார்” என்றேன்.
ஓய்வுக்குப் பின் அக்கதைகளைக் குறித்து விவாதித்தோம். நான் சென்ற மொத்த வகுப்பிலும், குறுங்கதைக்கான வகுப்பில்தான் நண்பர்களிடையே மிகச் சிறந்த கலந்துரையாடல்கள் நிகழ்ந்ததென கருதுகிறேன்.
அவற்றைக் குறித்து அடுத்த கட்டுரையில் எழுதுவேன். வகுப்பில் படித்து வர வேண்டிய கதைகளில் சில;
- https://www.suneelkrishnan.in/2024/01/blog-post_4.html
- https://www.suneelkrishnan.in/2024/01/edmundo-paz-soldan.html
- https://www.suneelkrishnan.in/2024/01/blog-post.html







Comments
Post a Comment