சிங்கா [1] இலக்கிய விமர்சனம்
சிங்கா
[1]
இலக்கிய விமர்சனம்
மலேசிய-சிங்கை தமிழ் இலக்கியத்தில் ஒரு வழக்கமுள்ளது. இங்கு
சிறந்த வாசகர்கள் தோன்றுகின்றனரோ இல்லையோ, ஆனால் வருடம் தவறாமல் நாங்கள் தமிழகத்திலிருந்து
ஒர் எழுத்தாளரை இறக்குமதி செய்வோம். ஒரு இருபத்து ஐந்து வருட மலேசிய-சிங்கை தமிழ் இலக்கிய
படைப்புகளையும் நிகழ்வுகளையும் தொகுத்துப் பார்த்தால், வருகையளித்த எழுத்தாளரின் தாக்கம்
அதில் இருக்கும். பைரோஜி நாராயணன், கு. அழகிரிசாமி, யுவன் சந்திரசேகர், பெருந்தேவி … எனும் வரிசையில்
டாக்டர், எழுத்தாளர், விமர்சகர் திரு சுனில் கிருஷ்ணன் சிங்கைக்கு 15.09.2023 முதல்
01.12.2023 வரை Visiting Writersஆக நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் கீழ் வரவழைக்கப்பட்டார்.
இவரின் வருகையை அறிந்திருந்தேன். ஆனால், எவ்வழி சந்திப்பதென சந்தேகம். எழுத்தாளர் லதாவிடம்
கேட்டப்போது, சுனிலைச் சந்திக்க சிறந்த வழி அவரது வகுப்புகளுக்குச் செல்வதென சொன்னார்.
வகுப்புகளெல்லாம் வாரநாட்களில் மட்டுமே நடக்கும் என நானே முன்முடிவெடுத்துக்கொண்டு
அவரது முதல் வகுப்பான அறிவியல் புனைவைத் தவறவிட்டேன். பிறகு அதே வகுப்பைத் தமிழ் பேசாத
மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் போதித்த போது அந்த வகுப்பில் கலந்து கொண்டேன்.
இரண்டாம் வகுப்பு இலக்கிய விமர்சனம். வகுப்புக்கு ஐந்து நிமிடம் தாமதமாக வந்தேன். வரும் வழியெல்லாம் என்னை வெளியில் அனுப்ப போகிறார் என்றுதான் நினைத்தேன். உள் நுழைந்தவுடன், ‘வாங்க’ என்றார். வகுப்புக்கு வந்திருந்த மற்ற நண்பர்களை ஒருமுறை பார்த்து வைத்தேன். அதில் எனக்கு எழுத்தாளர் அழகுநிலாவை மட்டுமே தெரியும். அவரை நான் 2022 GTLF நிகழ்ச்சியில் பினாங்கில் சந்தித்து அறிமுகமாகியிருந்தேன். அவரும் என்னை நினைவில் வைத்திருந்தார்.
சார் என்னருகே வந்து எனது வருகையைப்
பதிவுச் செய்யச் சொல்லி கீத்திடம் (Keith) விரல் காட்டி அனுப்பினார். நான் அமர்ந்தபின்,
‘ஒன்னுமில்ல உங்களுக்குப் பிடிச்ச புத்தகத்தை நினைச்சுக்கோங்க, வெளில சொல்லக் கூட வேண்டாம்’
என்றார். “நீங்க…?” என்றார். “I am Parimitaa from JB… Johor” என்று என்னை அறிமுகப்படுத்திக்
கொண்டேன். அவருக்குப் எனது பெயர் அறிமுகமாகயிருந்தது, ஆனால் என்னை ஆள் அடையாளம் தெரியாது.
அவரைக் குழப்ப வைத்ததில் விளையாட்டாய் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
அன்றைய வகுப்பு இலக்கிய விமர்சனம்
பற்றியது. வகுப்பில், இலக்கியம் எதற்குப் படிக்க வேண்டும்?, ஏன் எழுத வேண்டும்?, விமர்சனம்
என்றால் என்ன?, இதுவரை இலக்கிய விமர்சனத்துக்கு நமது தமிழிலக்கிய ஆளுமைகள் வரையறுத்த
விளக்கங்கள், சார்பில்லாத விமர்சனம் என ஒன்று உள்ளதா?, ஒர் எழுத்தாளனுக்கு அமரத்துவம்
முக்கியமா அல்லது அங்கீகாரம் முக்கியமா? எனும்படியான
அடிப்படை கேள்விகளை கலந்துரையாடல் வழியாகப் பேசினோம். அனைவரையும் அதில் ஈடுபடுத்த முயன்றார்,
ஒரே கேள்விக்கு அனைவரும் பதிலளிக்க வேண்டுமென ஒவ்வொருத்தரின் பெயர் சொல்லிக் கேட்டார்.
அடிப்படை கேள்வியான ‘எதற்கு எழுத வேண்டும்’, ’ஒரு எழுத்தாளர்
எதற்கு எழுதுகிறார்?’ என்பதற்கு வகுப்பில் கலந்துரையாடினோம். சுனில் சார், இறுதியில்
இப்படி வரையறுத்தார். ஒரு எழுத்தாளர் தன் படைப்பின் மூலம் ஒரு பதாகையை இடுகிறார்; ‘work
under progress’ போல. தன்னைத் தொந்தரவு செய்யும் அக காரணங்களினால் ஒன்றை எழுதுகிறார்.
எழுத்து தன்னைக் கண்டடைவதற்கும், தொந்தரவை நேர்மையாக எதிர்கொள்ளும் வழியாகவும் அமைகிறது.
மேலும், எழுதுவது ஒருவருக்கு மகிழ்ச்சியை அளிப்பதாலும், எழுத்து போதையை அளிப்பதாலும்,
மாற்றத்திற்காகவும், அறிவூட்டுவதற்காகவும் கூட எழுதப்படுகிறது எனக் கூறினார்.
அடுத்ததாக ‘ஓர் எழுத்தாளனுக்கு அமரத்துவம்
முக்கியமா அல்லது அங்கீகாரம் முக்கியமா எனும் கேள்விக்கு என்னையும் பதிலளிக்க அழைத்தார்.
நான் அப்போது கிறுக்குத்தனமாக ஒன்றைச் செய்தேன்.
”பரிமித்தா” என்றவுடன்
”கேள்வி என்ன சார்?” என்றேன். வகுப்பில்
சிலர் சிரித்தனர்.
எங்களது ஒன்பதாம் மாடியின் அதிநவீன
வகுப்பில் எண்திசைச் சுவரிலும் ஒரு தொலைகாட்சியைப் பொருத்தியிருந்தனர். ஒவ்வொன்றிலும்
சாரின் ‘அமரத்துவம் vs அங்கீகாரம்’ slide ஒளிப்பரப்பாகிக்
கொண்டிருந்தது.
நான் கவனித்தேன். அவரின் முட்டை
கண்களில் ஒரு நொடி சினம் பற்றியது. இன்றளவும் அந்தக் காட்சி என்னைத் துரத்தும். ‘இது
இவ்வளவு நேரம் க்ளாச கவனிச்சதா இல்லையா’ என்று கூட நினைத்திருக்கலாம். முகம் மாறாமல்,
”அதான்,… ஹ்ம்ம்… ஒரு ரைட்டர்கு immortality முக்கியமா இல்ல recognition/acknowledgment
முக்கியமா”?
மேற்கொண்டு அவரின் முகம் பார்க்க பயந்ததால், குனிந்து, முகத்தை
இறுக்கமாக்கிக்கொண்டு ”immortalityதான் கண்டிப்பா immortalityதான்” என்று இருமுறை தலையசைத்து
பதிலளித்தேன்.
பிறகு நான் ஏன் அப்படி கேட்டேன் என என்னுள் என்னைக் கடிந்துக்கொண்டேன்.
நான் வகுப்பைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். கலந்துரையாடலில் வந்த பதில்கள் கேள்விக்கு
நேரடியாக பதிலகளாக இல்லை. என் முறை வரும்போது “இப்போ கேள்வி என்னன்னா…”என்று ஆரம்பிக்கதான்
எத்தனித்திருந்தேன். அது எப்படியோ கேள்வியாக மாறிவிட்டது. அதற்குள் மணி பத்தரையாகிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் ஓய்வு நேரம். அனைவரும் காப்பி அருந்த பக்கத்து
மேசைக்குச் சென்றிருந்தனர். சார் என் அருகில் வந்து ”நீங்க…?” என்றார், குழப்பத்துடன்.
”இம்பர்வாரியிலிருந்து” என்றேன்.
”ஏங்க, இத முன்னாடியே சொல்லமாட்டிங்களா” எனக் கலகலத்தார்.
வீட்டிலிருந்து அன்புள்ள புல் புல் புத்தகத்தை எடுத்து வந்திருந்தேன். அதையும் ஒரு பேனாவையும் அவரிடம் நீட்டினேன்.
”ஹ்ம்ம்… படிக்க ஆரம்பிச்சிட்டிங்களா” என்று சிரித்த படியே
‘டாக்டர்’ கையொப்பமிட்டார். நானும் சிரித்து வைத்தேன். - முடித்துவிட்டேன் என பதில்சொல்லியிருக்க
வேண்டும், எனக்கு இப்போதுதான் அவர் கேள்வி கேட்டார் என்றே புரிகிறது.
ஓய்வுக்குப் பின், அமரத்துவமே இலக்கியத்தின் உச்ச அங்கீகாரமென்று ஒரு முடிவுக்கு வந்தோம்.
சுனில் சார் அமரத்துவத்தை ஒர் இலக்கிய விமர்சனமாக எப்படி
பார்க்கிறார் என அவரது தனிபட்ட உவமையைச் சொல்லலானார். நடராஜரின் ஆடல்களுள் ஒன்றான ஊர்த்துவ
தாண்ட சிற்பச் சிலையுடன் இலக்கியத்தைப் பொருத்திக் கொள்கிறார்.
அச்சிலையில் சிவனின் வலது முட்டி
பக்தனைப் பார்த்திருக்கும். நாம் காலை மெல்ல தூக்கினாலே, முட்டி நம்மை நோக்கிதான் மேல்
எழும், அதாவது பின் நோக்கி வரும். அப்படியிருக்க, முட்டி வெளிப்பக்கம் திருப்பியிருப்பது
சாத்தியமில்லாத ஒன்று என்றார். அதோடு ஒரு கால் தரையில் அழுத்தியிருக்க, மற்றொன்று அந்தரத்தில்
நின்றது. தரையில் அழுந்தியிருக்கும் பாதம் நிகழ்காலத்தைக் (Present. Not current) குறிக்கும்.
அந்தரத்தில் உயர்ந்திருக்கும் பாதம் என்றென்றத்தைக் (Perennial) குறிக்கும். ஆக, இலக்கியமென்பது
என்றென்றைக்கும் நிலைக்கக்கூடியதாகவும் இன்றைய காலத்துக்குப் பொருத்தமாக இருந்தால்
சிறப்பு எனக் கூறினார்.
அதன்பின் இலக்கிய விமர்சனம் என்றால் என்னவென்று முன்னோடிகளின் விளக்கங்களை வழங்கினார். ஓர் இலக்கிய ஆக்கத்தின் சமகால பொருத்தப்பாட்டை உணர்த்துதல் இலக்கிய விமர்சனம். அப்போது, திடீரென ‘The curious case of புயலிலே ஒரு தோணி எனும் slide வந்தது. ப. சிங்காரத்தின் படைப்பாகிய புயலிலே ஒரு தோணி தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த பட்டியலில் கண்டிப்பாக வரக்கூடிய ஒரு நூல். ஏன் எவராலும் அவர் காலத்தில் இந்த நூல் கருதப்படவேயில்லை? எனக் கேட்டார். நாங்கள் பதிலளிக்க முயற்சியளித்தோம்.
விமர்சனத்தின் வகைமாதிரிகளான – கோட்பாடு,
கல்வித்துறை, ரசனை விமசர்னத்தின் எல்லைகள் பேசப்பட்டன. இலக்கணத்துள் எந்த விதியும்
அடங்காது, எப்படிபட்ட விதியும் இலக்கிய ஆசிரியரைக் கட்டுப்படுத்தாது. அதற்கு கா.நா.சுவின்
பிரபலமான வரியைப் பொருத்திப் பார்க்கலாம். இலக்கணம் கலையாகாது. பஞ்சாங்கம் நூலாகாது
என்கிற மாதிரி; ரெயில்வே அட்டவணை பிரயாண நூலாகாது.
அந்நாளின் இறுதியாக, விமர்சனக் கலையின்
எதிர்பார்ப்புகளும் சவால்களும் பேசப்பட்டன. விமர்சனத்துக்கு இரசனையைத் தாண்டி சமூகத்தின்
பங்களிப்புகளை அறிந்து மற்றவர்களிடம் சொல்வதற்கு, மேலதிக ஆர்வம் அவசியமென கூறினார்.
அந்த ஆர்வத்தைச் சமூக அக்கறையுடைய ஒருவரே செய்ய இயலும் என்பதை அவர் பேச்சின் மூலம்
நான் அறிந்துக்கொண்டேன். வறண்ட மனநிலையுடன் நீதிமான் வேசம் போடுபவர் விமர்சகரல்ல. கர்த்தாவுக்குரிய
தடுமாற்றமும், தத்தளிப்புகளும் விமர்சகருக்கும் உண்டு.
இறுதியாக இப்படி சொல்லி முடித்தார்,
விமர்சகர் என்பவர் கடல் அலையை அல்ல, அந்த அலைகளுக்கு அடியில், ஆழத்தில், நீரின் திசையை,
அதன் விசையைத் தீர்மானிக்கும், டெக்டானிக் தட்டுகளின் அசைவைக் காட்டுவதற்கே
முயல்கிறான்.
வகுப்பு முடிந்தவுடன் வகுப்பே அமைதியாக
இருந்தது. ”சரி அப்ப சிங்கப்பூர்ல இருந்து நச்சுனு நாளு விமர்சன நூல் வெளியாகும்” என்றார்.
”ஐயையோ அதலாம் நாங்க பண்ணமாட்டோம்”
என்றது ஒரு குரல்.
“நாங்களே எழுத்தாளர், நாங்களே வாசகர்,
நாங்களே விமர்சகர், தாங்கல ” என்றது இன்னொரு குரல்.
சிங்கையில் சச்சரவாக ஏதும் எழுதினால்,
எழுதியவரின் குடியுரிமைப் பறிக்கப்படுவதற்குக்கான அபாயம் உள்ளது. சிங்கையில், தமிழில்
எழுதுபவர்களில் பெரும்பாலும் (அனைவரும்) (PR, Permanent Resident) குடியுரிமையை வைத்துள்ளவர்கள்.
மலை விளிம்பில் நின்றுகொண்டிருப்பவனின் உயிர் எப்போதும் பறிக்கப்படலாமெனும் அபாயம்
எப்படி இருக்கிறதோ அதே போல வாழ்வதற்கான அடிப்படை நாட்டுரிமை பறிக்கப்படும் அபாயம் இருக்கும்
அழுத்தத்தில் எழுந்த குரல்கள்தான் அவை. மற்றபடி, அவர்கள் நீண்ட கால வாசிப்பும், எழுத்து
பயிற்சியும், இரசனை விமர்சனத்தின் பிரக்ஞையும் உடையவர்கள்.
சமீபத்தில், சிங்கை விமர்சகர் சிவானந்தம்
நீலகண்டத்திடமிருந்து 2026ல் இரசனை விமர்சனத்தின் படி சிங்கையின் சிறந்த தமிழ் நூல்கள்
பட்டியல் வெளிவரவுள்ளது எனும் செய்தியைக் கேட்டறிந்தேன்.
என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக
இருந்தது என் முதல் வகுப்பு. நான் முழுவதையும் உள்வாங்கிக் கொள்கிறேனா எனும் பதற்றமும்
இருந்தது. புயலிலே ஒரு தோணியை ஏன் இந்திய தத்துவத்துடன் ஒப்பிட்டு பேசினார் என்று அப்போது
புரியவில்லை. இதை விரிவாக, வரும் கட்டுரைகளில் எழுதுவேன். அதற்கான களமும் அங்குதான்
உள்ளது.
பரி
ஜொகூர்,
22.01.2024



Comments
Post a Comment