நிரை இணையதள திறப்புவிழா உரை

          


நண்பர்களே,

என்னுடைய பதின்ம வயதில் ஆச்சார கோவை என்ற நூல் ஒன்றை வாசித்தேன். நடைமுறை வாழ்ககையிலே தினசரி பின்பற்ற வேண்டிய விதிகளைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு நெறிநூல். இந்த நூல் எப்படி என் கைகளுக்கு வந்தது என்பதைத் தான் இங்கு சொல்ல வந்தேன். நவீன தமிழ் இலக்கியத்தை இன்னும் அறிந்திறாத  பருவத்தில் எனக்கு உதவியது Project Madurai.தமிழின் சங்ககால, பக்தி இலக்கிய நூல்களின் தொகை இங்குள்ளது. எங்கிருந்தும் pdf முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

ஒரு பருவத்திற்குப் பின், தமிழ் நவீன இலக்கியத்திற்கும் - உலக இலக்கியத்திற்கும் ஒரே சமயத்தில் அறிமுகமானேன். தமிழ் நவீன இலக்கிய சிறுகதைகளை வாசிக்க அழியாச்சுடர்கள் இணையதளம் ஓர் அவசியமானது. உலக இலக்கிய செவ்வியல் பட்டியல் என்ற ஒன்றைத் தொகுத்தால், அதிலிருக்கும் அனைத்து நூல்களும் Project Gutenberg என்ற இணையத்தளத்தில் கிடைக்கும். 

ஆனால், நமக்கு மிகவும் பரிட்சயம் என நினைத்துக் கொண்டிருக்கும் மலேசிய நவீன தமிழிலக்கியம்  வாசிப்பதற்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. அதற்கு இரு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ஏற்கனவே அச்சிடப்பட்ட நூல்கள் மிகக் குறைவு. அப்படியான நூல்கள் இன்று அச்சில் இல்லை. இரண்டு, நமது நூலகங்களில் மலேசிய தமிழ் இலக்கிய புத்தகங்கள் இருக்காது. "அதற்கான டிமாண்ட் இல்லை" என ஒரே வரியில் பதிலிடுவார்கள். ஆனால், சிங்கப்பூர் நூலகங்களில் அப்படி இல்லை, சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்து சிங்கை நூலகங்களிலும் இருக்க வேண்டுமென்ற சட்டமிருக்கிறது.

அதனால், ஒரே இடத்தில் வாசிக்க நிரை இணையதளத்தில் இப்போதைக்கு கிட்டதட்ட 1980 முதல் 2026 வரையிலான மலேசிய தமிழ் சிறுகதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அப்படியெனில், உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். நிரை ஒரு சேகரிப்பு கூடமா? இருண்ட அறையில் பழைய சாமான் செட்டுகளை போட்டு கிடத்திவைத்திருக்கும் கிடங்கா? என்றால் - கிடையாது. 1980லிருந்து 2026 வரையிலான அனைத்து சிறுகதைகளும் இதில் இல்லை. இரசனை விமர்சனத்தின் அடிப்படையில் 27 எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு மற்றொரு கேள்வி: இரசனை விமர்சனம் என்றால் என்ன? அனைவருக்கும் புரியும்படி எளிமையாக இப்படி சொல்லலாம், இந்த 56 சிறுகதைகளின் பட்டியலை ஒரு கடவுச்சீட்டு என நினைத்துக்கொள்ளுங்கள். இந்த பட்டியல் உலக இலக்கியத்தினுள் நுழையும்போது ஒரு கடவுச்சீட்டாக மாறுகிறது. அப்போதுதான், அந்த விமானத்தில் எது நமது இருக்கை, இந்த உலக இலக்கித்யத்தின் அடிப்படையில் நமது இடம் என்ன என்பது புரியவரும். ஒட்டுமொத்தமான பார்வையை மலேசிய இலக்கியத்தின் மீது நாமும் - பிறறும் வைக்க முடியும்.

அவ்வகையின் நிரை இணையதளம் உங்கள் வீட்டின் ஸ்டோர் அறை கிடையாது. உங்களது வீட்டின்  வரவேற்பறையில் கண்ணாடி பேழைக்குள் உங்களது வீட்டைப் பிரதிபளிக்க வைத்திருக்கும் வெள்ளி, பளிங்கு பொருட்கள். எங்கள் வீட்டின்; எங்கள் நாட்டின் மலேசிய நவீன தமிழிலக்கியம் என்றால் எடுத்து காட்டக்கூடிய 56 சிறுகதைகள் இதில் உள்ளன. இப்படியாக மலேசிய நவீன தமிழிலிலக்கியத்தில் இரசனை விமர்சனத்தின் அடிப்படையில் ஒரு பட்டியல் உருவாகியுள்ளது.

இந்தப் பட்டியலின் அவசியமென்ன என்பது அடுத்த கேள்வி. இதற்கான பதில் அகவயமாகவும், புறவயமாகவும் தனி நபர் அவசியத்திற்கேற்றவாறு மாறுபடும். ஒரு வாசகராக மலேசியாவில் 40-50 ஆண்டுகாலம் ஒரு சமுதாயம் தன்னை எப்படி நிறுவிக்கொண்டதென வாசிக்கலாம். உதாரணத்திற்கு, சாமி குத்தம் கதையில் கோவில் இடிப்புக்குப் பின் நடக்கும் அனைத்து அரசியல் ஊழல்களையும் புனைவாக வாசிக்கலாம். ஒரு எழுத்தாளராக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நடப்புகளை இதற்கு முன் எப்படியெல்லாம் எழுதியுள்ளனர் என்பதை அறியாமல் அதைப்பற்றி எழுத முடியாது. அந்த தடங்களைக் கலைக்க இதற்கு முன் அதைப்பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் வாசித்தாக வேண்டியுள்ளது. அடுத்து ஒரு விமர்சகரின் பார்வையில், மலேசிய எழுத்து என்னனென்ன புதுமையை நிகழ்த்தியுள்ளது என ஆராயும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு, 'ஓர் அழகியின் கதை' சிறுகதை ஜி. நாகராஜன் சிறுகதை வகையின் தொடர்ச்சியா எனப் பார்க்கிறேன். ஆமெனில், ஜி.நாகராஜனின் கதையிலிருந்து டாக்டர் சண்முகசிவா என்ன பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் எனப் பார்க்கலாம். இவையெல்லாம் நிகழ முதலில் கதைகள் நமது கைக்கு சேர நிரை இணையதளம் தேவைப்படுகிறது. 

நிரை இணையதளம் அங்கு மட்டும் நிறைவடைந்துவிடாது. வாசகர்களின் வாசிப்பும் - அதை தொடந்த உங்களது உண்மையான கருத்தும் - பின்னோட்டமாக இதில் இடலாம். அதனை தொடந்து ஒரு உரையாடலின் வழி நிகழும் இலக்கிய வட்டம்தான் நமக்கு அவசியப்படுகிறாது. 

அனைத்து மேடையுரையும் ஒரு வகையில் நன்றியுரைதான். அதனால், இந்த சிந்தனையை நிகழ்த்த உதவியாக இருந்த முதல் நபர் - நண்பர் தர்மராஜ் - நிரை இணையதளத்தின் வடிவமைப்பாளர். முகியமாக இருவருக்கு நன்றி கூற வேண்டும் - இரசனை வம்ர்சனத்தின் அடிப்படையில் சிறுகதைகளை தேர்வு செய்து தந்த எழுத்தாளர் நவீன், எழுத்தாளர் கனகலதா இருவருக்கும் எங்களது முன்னோடி எழுத்தாளர் என்ற வகையில் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். 

நன்றி வணக்கம். 

24.05.2026

Brickfields, KL





Comments