ஆலடியில் - சுரேஷ் பிரதீப்


விவாதம்

எனது வாசிப்பிலும் சச்சிதானந்தத்தின் கற்பனை பெருமைகளை எள்ளலாக்குவதுதான் கதை என்பதை புரிந்துக்கொண்டேன். இருப்பினும், அதற்கு மேலாக ஒன்று எனக்கு சொல்ல இருந்தது.

இந்தக் கதையில் உண்மையான வில்லன் அந்த மங்கையர்கரசி டீச்சராகதான் இருக்க வேண்டுமென்றேன்; அதற்கான காரணங்களையும் அளித்தேன். அதற்கு முன், இறுதியாக வரும் மங்கையர்கரசிதான் சச்சிதானந்தத்தின் மனைவி என நானாகவே யூகித்துக் கொள்கிறேன்.

முதலாவதாக, சச்சிதானந்தம் தனது மனைவிக்கு கொடுக்கும் விவரிப்பு. அதன் பின், சிவராமனிடம் தன்னைத் துன்புறுத்த செய்யப் போகிறானா என கேட்டப்பின் கதையில் இருக்கும் இடைவெளி. மூன்றாவதாக, சிவராமன் செய்த கடத்தலைப் பற்றி பள்ளியில் கண்டுக்கொள்ளாத மங்கையர்கரசி ஆசிரியர். இதனால், மங்கையர்கரசி டீச்சர் சிவராமனைப் பாலியல் வதை செய்ததாக, அதை மங்கையர்கரசி விரும்பியதாக கூறினேன்.

விக்னேஷ் ஹரிஹரன் இது என் வாசிப்பின் பிழையல்ல சுரேஷ் பிரதீபின் எழுத்தில் நிகழ்ந்திருக்கும் இடைவெளி என்றார். அந்த இடைவெளியே இத்தகைய மையத்திலிருந்து விலகி செல்லும் வாசிப்பைத் தருவதாக சொன்னார். கதையில் அவசியமில்லாத நபர்களும், பாதாம் பிஸ்தா சாப்பிட சொன்னதை வதையாக எடுத்துக் கொள்ளும் சிவராமனையும் சுட்டிக்காட்டினார்.

இதை அவர் சொல்லியவுடந்தான் அமர்வில் நான் மட்டும் இப்படியான ஒரு வாசிப்பை வைத்திருக்கிறேன் எனத் தோன்றியது.

சரி, அப்படியென்றால் ஒரு கதையின் மையத்தை நீங்கள் எப்படி கண்டுகொள்கிறீர்கள் எனக் கேட்டேன். விக்னேஷ் அதற்கு physics வாத்தியார் போல் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். நான் அதை இப்படி புரிந்துக் கொள்கிறேன்.

கதையில் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகரும் விசயமானது ஒரே சரடுடன் அமைந்திருகிறாவென்று பார்க்க வேண்டும். அப்படி ஒட்டு மொத்தமாக பார்க்கையில் சச்சிதானந்தன் தற்பெருமைகள் உடையப்பட்டு ஆலமரத்தடியில் ஞானம்  பெரும் காட்சியை இரசிக்க முடியாமல் செய்திருப்பது இந்த வடிவ ஒழுங்கின்மைதான் எனப் புரிந்துக்கொண்டேன்.

சுக்கிரி குழும கலந்துரையாடல் 04.04.26

ஓவியம் : Clown by a tree by Rachel Granger Hunt - Fine art painter  

Comments